நேபாள போராட்டம் எக்ஸ்
உலகம்

நேபாளம்|26 செயலிகள் தடை., Gen z இளைஞர்கள் போராட்டம்.. துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலி!

நேபாளத் தலைநகரான காத்மாண்டுவில் பள்ளிச்சிறார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாகத் திரண்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

PT digital Desk

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழலுக்கு எதிரான இளம் வயதினரின் போராட்டத்தில், 19 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பலர் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும், காவல் துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேபாள அரசு கடந்த வியாழன் அன்று, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு தடைவிதித்தது. அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் முறையாக பதிவு செய்யாததால் அரசின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கூட, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், TikTok, Viber, Witk, Nimbuzz மற்றும் Popo Live போன்ற தளங்கள் அரசின் உத்தரவுக்குப் பிறகு பதிவு செய்துவிட்டதால் அந்நாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன.

முன்னதாக, ஆகஸ்ட் 28 முதல் ஒரு வாரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த காலக்கெடு முடியும் வரை மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), அல்பபெட் (யூடியூப்), எக்ஸ், ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்களில் யாரும் பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்தே அரசாங்கம் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி

ஆனால், சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு முந்தைய நாட்களில், #PoliticiansNepoBabyNepal, #NepoKids, #NepoBaby போன்ற ஹாஷ்டேக்குகள் டிக்டாக், ரெடிட் மற்றும் சில சமூக ஊடக தளங்களில் டிரெண்டானது.

குறிப்பாக, ஊழல் செய்த பணத்தில் அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள் போன்றோர் அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பதாக இந்த நெப்போ கிட் குழுவினர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர். "நேபாளத்தில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்" என்றே பல்வேறு போராட்டக்காரர்களும் தெரிவித்து இருந்தனர்.

பொருளாதாரா நெருக்கடி மற்றும் ஊழலுக்கு மத்தியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் நேபாள மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசியல்வாதிகளின் குழந்தைகளோ ஆடம்பர வாழ்க்கையில் திளைப்பதாக போராட்டக்காரர்கள் விமர்சிக்கின்றனர். இதுதொடர்பான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில்தான், அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை விதித்து நேபாள அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள். அரசோ, சமூக ஊடகத் தடை தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கிறது என்று தெரிவிக்கும் நிலையில், அது ஊழல் நிறைந்த உயரடுக்கினரைப் பாதுகாக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மிக முக்கியமாக இந்த நெப்போ கிட்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் தங்கள் வாழ்க்கை முறையைக் காட்டும் அதேவேளையில், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை ஒருபோதும் விளக்க மாட்டார்கள் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் வெகுண்டு எழுந்து போராடுவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன. நேபாளத்தில் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 13.5 மில்லியனாகவும், இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 3.6 மில்லியனாகவும் உள்ளது.

நேபாளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் அனுப்பும் பணம் (remittances) நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 33% அளவிற்கு பங்களிக்கிறது. இத்தகைய சூழலில்தான் நேபாளத்தில் இருக்கும் குடும்பத்தினர் அவர்களைத் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதோடு சமூக ஊடகங்களை நம்பி தொழில் செய்து வந்த பலரும் அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக, நேபாளம் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் ஒரு நாடு. அதற்கு சமூக ஊடகங்களும், அதில் வரும் விளம்பரங்கள்தான் மிக முக்கியம் என்பதால், அந்தத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதோடு, அத்துறையை நம்பியிருக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில்தான் இன்று மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

தலைநகர் காத்மண்டுவில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. தண்ணீர் பாட்டில்கள், மரக்கட்டைகள், கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதலை தொடுக்க, ராணுவத்தினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள போராட்டம்

மேலும் போராட்டம் பரவாமல் தடுக்க நாடாளுமன்ற வளாகம், நேபாள அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் மக்கள் நடமாடுவதற்கோ, கூடுவதற்கோ, போராட்டம் நடத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதோ காத்துமாண்டுவில் நிலைமை பெரும்பாலும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது. பெரும்பாலான போராட்டக்காரர்கள் கலைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எனினும், போராட்டங்கள் நாளையும் மீண்டும் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தால் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் உள்ளனர். முக்கிய பகுதிகளில் இராணுவமும் பாதுகாப்பு படைகளும் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.

உறவினர்களின் நலத்தை அறிய குடும்பத்தினர் மருத்துவமனைகளின் வெளியே பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில், போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலர் இரத்த தானம் செய்ய முன்வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தத்தின் தேவையும் அதிகரித்திருக்கிறது. சென்ட்ரல் பிளட் டிரான்ஸ்ஃப்யூஷன் சர்வீஸ் (Central Blood Transfusion Service) அல்லது இரத்த வங்கி, திங்கட்கிழமை மாலை வரை 200 பைன்ட்க்கும் அதிகமான இரத்தத்தை நேஷனல் டிராமா சென்டர் மற்றும் பீர் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து வரும் பிற மருத்துவமனைகளிடமிருந்தும் தொடர்ச்சியாக இரத்தத்துக்கான கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

“இன்று நேபாளத்தில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதும், பலர் காயமடைந்ததும் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அப்போது, தனது பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தாலும் கூட, சமூக ஊடகத் தடையை நீக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே இன்று நடைபெற்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் கையாண்டதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், தவறுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜிநாமா செய்திருக்கிறார்.