YouTube, WhatsApp, Twitter உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்குத் தடை.. நேபாள அரசு அதிரடி!
அதிகாரப்பூர்வ பதிவு இல்லாமல் செயல்படும் 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய நேபாள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் செயல்படும் சமூக ஊடக தளங்கள், நாட்டிற்குள்ளோ அல்லது வெளிநாட்டிலோ பதிவு செய்யுமாறு அரசாங்கம் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால், உரிமம் பெறாமலாயே சில தளங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், உரிமம் பெறாத சமூக ஊடக தளங்கள், OTT செயலிகள் மற்றும் இணைய உலாவிகள் மூலம் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்க ஒளிபரப்பைக் கட்டுப்படுத்தக் கோரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நேபாள நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது உரிமம் பெறாத தளங்கள் சட்டப்பூர்வ அனுமதியின்றி விளம்பரங்களையும் உள்ளடக்கத்தையும் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆன்லைன் தளங்களும் நாட்டில் செயல்படுவதற்கு முன்பு அதிகாரிகளிடம் பதிவு செய்வதை உறுதி செய்யவும், தேவையற்ற உள்ளடக்கத்தை கண்காணிக்கவும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து சமூக ஊடக தளங்களைத் தடை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டது.தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிருதிவி சுப்பா குருங் தலைமையில், அமைச்சக அதிகாரிகள், நேபாள தொலைத்தொடர்பு ஆணையத்தின் பிரதிநிதிகள், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு நாடு தழுவிய அளவில் பொருந்தும் என்றும், நேபாளத்தில் செயல்படும் பதிவு செய்யப்படாத தளங்களும் அதே தடையை எதிர்கொள்ளும் என்றும் தகவல் தொடர்பு மற்றும் அதன் தொழில்நுட்ப அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
அதேநேரத்தில், தேசிய விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, பதிவை முடித்தவுடன் தளங்கள் மீண்டும் செயல்படலாம் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. மேலும், கட்டாயப் பதிவுக்கு அரசாங்கம் ஏழு நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. அது கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நள்ளிரவுடன் காலாவதியானது. இதையடுத்து, Viber, TikTok, Wetalk மற்றும் Nimbuzz போன்ற தளங்கள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் Telegram மற்றும் Global Diary ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. ஆனால், பிற இணையதள சேவையினர் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டனர். இதில் எந்த தள ஆபரேட்டர்களும் நாட்டில் பதிவு செய்ய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. அந்த வகையில், Gmail, Facebook, Messenger, Instagram, YouTube, WhatsApp, Twitter, LinkedIn, Snapchat, Reddit, Discord, Pinterest, Signal, Threads, WeChat, Quora, Tumblr, Clubhouse, Rumble, Mi Video, Mi Vike, Line, Imo, Jalo, Sol, மற்றும் Hamro Patro உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக ஊடகங்கள் மற்றும் தொடர்பு தளங்களும் பதிவு செயல்முறையை முடிக்கும் வரை தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குழு அரசாங்கத்தின் முடிவை எதிர்த்துள்ளது. இந்த முடிவு கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.