அகமது எக்ஸ் தளம்
உலகம்

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு | ஒரே நாளில் ஹீரோ ஆன அகமது.. குவியும் நிதி!

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டின் போது தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓடிச் சென்று துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த அகமது ஒரேநாளில் உலகம் முழுவதும் ஹீரோவாகியுள்ளார்.

Prakash J

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டின் போது தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓடிச் சென்று துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த அகமது ஒரேநாளில் உலகம் முழுவதும் ஹீரோவாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு

ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். இந்த கடற்கரையில், யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14ஆம் தேதி காலை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலர், கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கிச் சுட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் துப்பாக்கியால் சுட்ட 50 வயது மிக்கவரின் பெயர் சஜித் அக்ரம் என்றும் மற்றொருவரின் பெயர் நவீத் அக்ரம் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் 50 வயதுமிக்கவர் போலீஸாரால் சுடப்பட்டார். மற்றொருவரான நவீத் அக்ரம், சஜித்தின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுடன் தொடர்பு: விசாரணையில் தகவல்

துப்பாக்கி ஏந்தியவர்களின் காரில் ஐ.எஸ் கொடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு உளவுத்துறை நிறுவனமான ASIO, சிட்னியைத் தளமாகக் கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், 6 ஆண்டுகளுக்கு முன்பே நவீத் அக்ரம் ஆஸ்திரேலியாவில் கிளர்ச்சியை உண்டாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய சஜித் அக்ரம் 1998ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும், பின்னர் அவர் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை மணந்து கூட்டாளி விசாவிற்கு மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் அல்ல எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்த வீரர்

இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தத் தாக்குதல் IS பயங்கரவாதக் குழுவின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதல், கவனமாக, திட்டமிட்டு, இரக்கமின்றி நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம், துப்பாக்கி ஏந்தியவர்கள் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கியபோது, தன் உயிரையும் பார்க்காமல், துணிச்சலுடன் ஓடிப்போய் துப்பாக்கியால் சுட்ட நபர் ஒருவரை அகமது அல் அகமது என்பவர் மடக்கிப் பிடித்து, அவர் கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கினார். இதன்மூலம் அவர் பல உயிர்களைக் காப்பாற்றினார். ஆனால், மறுபுறத்தில் இருந்து அவர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

”அவர், ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ”

இந்தச் சம்பவத்தில் அவர் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவரைச் சந்தித்து கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அல்பானீஸ், “அவர், ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. அந்த வீரரின் (அகமது) செயல்கள் தேசத்தின் விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது. இது, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது. இந்த நாடு பிளவுபடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதிகள் விரும்புவது அதுதான். நாம் ஒன்றுபடுவோம், ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்வோம், இதன்மூலம் நாம் இதிலிருந்து மீண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அகமதுவின் உள்ளூர் வழக்கறிஞர் கூறுவது என்ன?

அதேநேரத்தில், இதுபோன்ற செயல்களை தாம் மீண்டும் செய்யவிருப்பதாக அகமது அவருடைய உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அந்த வழக்கறிஞர், ”அகமதுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன, முக்கியமாக அவரது இடது கையில் காயங்கள் ஏற்பட்டன; ஒரு குண்டு இன்னும் அகற்றப்படாமல் அவரது இடது தோள்பட்டையில் தங்கியுள்ளது. காயங்களின் தீவிரத்தினால் அகமது தனது இடது கையை இழக்க நேரிடும். அகமது கடின உழைப்பாளி மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அவரது துணிச்சலுக்கான அங்கீகாரமாக, அகமதுவின் வயதான பெற்றோருக்கு குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் அந்தோணி அல்பானீஸிடமும் ஒரு முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அகமது, “தனக்கு எப்படி இவ்வளவு பலம் கிடைத்தது என்று தெரியவில்லை. கடவுள்தான் தனக்கு செயல்பட சக்தியைக் கொடுத்தார். மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே தனது ஒரே சிந்தனை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் இதைத் தடுக்க ஓடியபோது அவரது சகோதரர் ஜோசாய் அகமது தடுத்துள்ளார். ஆனாலும் அவரிடம், ”தாம் இதில் இறந்தாலும், பல உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இறந்தேன் எனக் குடும்பத்தினரிடம் சொல்” எனக் கூறிவிட்டு ஓடியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு

இதுதொடர்பாக அவரது உறவினர் ஒருவர், “அகமதுவுக்கு துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. அதனால்தான் அவர் சுடவில்லை. பின்னால் இருந்து சுடப்படுவதற்கு முன்பு தாக்கியவரை பயமுறுத்த மட்டுமே அவர் முயன்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இவருடைய செயலைப் பாராட்டியுள்ளார். அவர், ”அகமதுவை மிகவும் துணிச்சலான மனிதர். அவர் ஒரு தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றினார். படுகாயமடைந்து இன்னும் மருத்துவமனையில் இருக்கும் அகமது மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அகமது அல் அகமது?

சிரியாவில் பிறந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரான அகமது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். முன்னர் அவர் தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பம், சிறிய சட்டக் குற்றச்சாட்டுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர், 2022-இல் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அதே ஆண்டு, புகையிலை தொடர்பான சிறிய குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ் ஆகிய இருவரும் அஹ்மதுவின் வீரத்தை பகிரங்கமாகப் பாராட்டியுள்ளனர். இதற்கிடையே அகமதுவின் வீரதீர செயலைப் பாராட்டும் வகையில் அவருக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. அகமதுவுக்கு $570,000 (சுமார் ₹3.43 கோடி) க்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது. கோஃபண்ட்மீ பிரச்சாரம் மூலம் 5,700-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் 570,000 டாலருக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளனர். இதில் அமெரிக்க கோடீஸ்வரர் பில் அக்மேனின் 100,000 டாலர் கணிசமான பங்களிப்பும் அடங்கும்.