பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம்
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம்pt web

"சமஸ்கிருதம் குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமில்லை..." - பாக். பல்கலையில் பாடத்திட்டமாக சமஸ்கிருதம்

பாகிஸ்தானில் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து கற்பிக்க தொடங்கியுள்ளது. இது 1947 பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படும் முதல் முறை.
Published on
Summary

பாகிஸ்தானில் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து கற்பிக்க தொடங்கியுள்ளது. இது 1947 பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படும் முதல் முறை. மாணவர்களின் ஆர்வம் காரணமாக, சமஸ்கிருதம் முழுமையான பாடநெறியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

செய்தியாளர் விக்னேஷ்

பாகிஸ்தானில் மாணவர்கள் சமஸ்கிருதம் கற்க ஆர்வம் காட்டுவதால், அங்குள்ள லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து அதை கற்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த 1947ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்று சமஸ்கிருதத்தை கற்பிப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மூன்று மாதத்திற்கு வீக் எண்ட் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மாணவர்களின் ஆர்வத்தின் காரணமாக சமஸ்கிருதத்தை ஒரு முழுமையான பாடநெறியாக வகுப்பறைகளில் கற்றுக்கொடுத்து வருகிறது.

டாக்டர் அலி உஸ்மான் காஸ்மி மற்றும் டாக்டர் ஷாஹித் ரஷீத் ஆகிய பேராசிரியர்கள் இந்தப் திட்டத்திற்குத் தலைமை தாங்குகின்றனர். சமஸ்கிருதம் குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், "சமஸ்கிருதம் என்பது பாகிஸ்தானிய-இந்திய உலகளாவிய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பண்டைய நூல்களை அணுகுவதற்கும், பிராந்திய புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று கூறியுள்ளனர்.

சமஸ்கிருதம் கற்பதற்கான முதன்மையான நோக்கம், பஞ்சாப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள சமஸ்கிருத ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளூர் அறிஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதுதான். தற்போது சமஸ்கிருதத்தில் அடிப்படை கல்வி மட்டுமே சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற நூல்கள் குறித்த பாடங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுப்பற்றி கூறுகையில், "அடுத்த 10-15 ஆண்டுகளில், கீதை மற்றும் மகாபாரத அறிஞர்களை பாகிஸ்தானிலும் காண முடியும். சமஸ்கிருதம் மட்டும் கிடையாது சிந்தி, பஷ்தூ, பஞ்சாபி, பலுச்சி, அரபு மற்றும் பாரசீகம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. பல உருது சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்று மாணவர்கள் கண்டுபிடித்தபோது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். சமஸ்கிருதம் இந்த ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பிணைக்கும் மொழி என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.

சமஸ்கிருத இலக்கண மேதை பானினியின் கிராமம் எங்கள் பிராந்தியத்தில்தான் இருந்தது என்பதையும், சிந்து சமவெளி நாகரிகத்தின் போது பல எழுத்துக்கள் இங்கு எழுதப்பட்டன என்பதையும் நாங்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். சமஸ்கிருதம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் பிணைக்கப்படவில்லை; அது ஒரு கலாச்சார நினைவுச்சின்னம். அது பாகிஸ்தானிய பாரம்பரியத்தின் ஒரு பகுதி, எனவே நாங்கள் அதைப் சொந்தம் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறோம்.

பாகிஸ்தானில் உள்ள அதிக முஸ்லிம்கள் சமஸ்கிருதத்தையும், இந்தியாவில் உள்ள அதிக இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அரபு மொழியையும் கற்கத் தொடங்கினால், அது தெற்காசியாவிற்கு ஒரு புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய தொடக்கமாக அமையும்" என்று கூறியுள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து அதை கற்பிக்க தொடங்கியுள்ளது இந்தியாவில் கவனம் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com