60 ஆண்டுக்கு முன் இமயமலையில் தொலைந்த அணுசக்தி ஜெனரேட்டர்.. காத்திருக்கும் ஆபத்து!
1965ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து இமயமலையில் புளூட்டோனியம் நிரப்பப்பட்ட அணுசக்தி ஜெனரேட்டரை நிறுவியபோது, அது பனிச்சரிவில் தொலைந்தது. இது கங்கை ஆற்றின் நீராதாரங்களில் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் எச்சரிக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கட்டுரையின்படி, 1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் இந்தியப் புலனாய்வுத் துறை இணைந்து மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின்போது, இமயமலையின் நந்தாதேவி சிகரத்தில் புளூட்டோனியம் நிரப்பப்பட்ட அணுசக்தி ஜெனரேட்டர் ஒன்று தொலைந்துபோனது. சீனா அணு ஆயுதங்களை உருவாக்குகிறதா என்பதைக் கண்காணிக்க, அதன் ஏவுகணை ரேடியோ சமிக்ஞைகளை உளவு பார்க்க ஒரு கண்காணிப்பு சாதனத்தை நிறுவுவதே இந்த ரகசியப் பயணத்தின் நோக்கம்.
ஸ்னாப்-19சி (SNAP- 19C) என்று அழைக்கப்பட்ட, சுமார் 23 கிலோ எடையுள்ள இந்த சிறிய அணுசக்தி ஜெனரேட்டரில், நாகசாகி அணுகுண்டுக்குப் பயன்படுத்தப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம் இருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க மலையேறிகள் குழு இந்த சாதனத்தை சிகரத்தின் அருகில் பனிப்பகுதியில் வைத்துவிட்டு, மோசமான பனிப்புயல் காரணமாக அவசரமாகக் கீழே இறங்கினர். அவர்கள் திரும்பியபோது, பனிச்சரிவு காரணமாக அந்தச் சாதனம் இருந்த பனிப்பாறை உடைந்து, ஜெனரேட்டர் காணாமல் போயிருந்தது. அது இன்றுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
60 ஆண்டுகளாகப் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்திருக்கும் இந்த அணுசக்தி சாதனம், பனிப்பாறைகள் உருகும்போது, கங்கை ஆற்றின் நீராதாரங்களில் தூய்மைக்கேடு ஏற்படுத்தி, பல கோடி மக்களுக்கு கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் இந்த ரகசிய நடவடிக்கையையும் சாதனம் தொலைந்ததையும் நீண்டகாலமாக மூடிமறைக்க முயல்கின்றன என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

