ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு | பின்னணியில் தந்தை - மகன்.. இருவரும் பாகிஸ்தானா?
ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் இருந்தவர்கள் தந்தை - மகன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வம்சாவளியாக இருக்கிலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். இந்த கடற்கரையில், யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலர், கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி சுட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 40 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடுமையான துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கொண்ட அந்த நாட்டில், இது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாகும். இத்தாக்குதல் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். சிட்னியின் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, அதிகாரப்பூர்வமாக ’பயங்கரவாத தாக்குதல்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் எனவும் அவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட 50 வயது மிக்கவரின் பெயர் சஜித் அக்ரம் என்றும் மற்றொருவரின் பெயர் நவீத் அக்ரம் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் 50 வயதுமிக்கவர் போலீஸாரால் சுடப்பட்டார். மற்றொருவரான நவீத் அக்ரம், சஜித்தின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன் தெரிவித்தார்.
மேலும், 50 வயதான தாக்குதல் நடத்தியவர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தவர் என்றும், அவரது பெயரில் ஆறு துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அக்ரமின் நியூ சவுத் வேல்ஸ் ஓட்டுநர் உரிமத்தின் புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீருடையைச் பச்சை நிறச் சட்டையை அணிந்திருப்பது தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

