திருப்பரங்குன்றம் விவகாரம் pt
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் | மதுரை நீதிமன்றத்தில் பரபர வாதம்.. முழு தொகுப்பு.!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வரும் நிலையில், தர்கா, கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டு வரும் வாதங்கள் குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இரண்டாவது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தூண்

கோவில் நிர்வாகத்திற்கே முழு அதிகாரம்

கோவில் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர் வாதாடினார். அப்போது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்திற்கே முழு அதிகாரமும் உரிமையும் உள்ளதாகவும், ஆகம விதிகள் மற்றும் அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டே கோவில் நிர்வாகம் செயல்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தீபம் ஏற்றுவது தனிநபர் உரிமை அல்ல. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றும் நடைமுறை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கோவில் மரபு, வழிபாட்டு முறைகள், பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோர முடியாது. மலைமீது தீபம் ஏற்றுவது கோவில் சார்ந்த ஆகம நடைமுறை. அதை, வீட்டு தீபம் போல கருத முடியாது எனத் தெரிவித்த அவர், ஆகம விதிகளை மீறி கோவிலை கட்டாயப்படுத்த முடியாது என்பதையும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியும் வாதிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், கோவில் தரப்பு, அரசுத்தரப்பு மற்றும் அறநிலையத்துறை முன்வைத்த வாதங்களை ஏற்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கோவில் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது. கார்த்திகை தீபம் தொடர்பாக, மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் காணப்படும் நாயக்கர் கால தீபத்தூண் தான் உண்மையான தீபத்தூண்; பிறவை தீபத்தூண் எனக் கருத முடியாது எனவும் குறிப்பிட்டும், தொல்லியல்துறை நூல்களில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை

”தனி நீதிபதி பொது இடத்தில் தீபம் ஏற்றுங்கள் என்றால் எவ்வாறு ஏற்றுவது” - அறநிலையத்துறை தரப்பு வாதம்!

இந்து அறநிலையத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி, ஆகம விதிகள், தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று ஆய்வுகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் விரிவான வாதங்களை முன்வைத்தார்.

அப்போது, திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரே தீபத்தூண் நாயக்கர் கால தீபத்தூண் மற்றவை தீபத்தூண் இல்லை. தனி நீதிபதி பொது இடத்தில் தீபம் ஏற்றுங்கள் என்றால் எவ்வாறு ஏற்றுவது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூண்களில் நாயக்கர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், மலை உச்சியில் உள்ள தூணில் எதுவும் இல்லை. பண்பாடாக பாரம்பரியமாக நாயக்கர் காலத்தில் இருந்தே வழக்கமான இடத்தில் தீபமேற்றப்படுகிறது. தற்போது ஏற்றப்படும் தூணிற்கு இவ்வளவு ஆதாரங்கள் உள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணிற்கு தீபமேற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? மனுதாரர் சமர்பிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தற்போது, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருப்பது தான் உண்மையான தீபத்தூண். சன்னதிக்கு மேலே சுவாமிக்கு பின்பக்க எதிரே சரியாக கார்த்திகை தீபமேற்றப்படுகிறது. இது பாரம்பரிய நடைமுறையாக கோவில் ஆகமவிதிப்படி நடக்கிறது. இதில் குறுக்கிடும் வகையில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் மனுதாரர் மனு செய்துள்ளார். இதில் உத்தரவும் மனுதாரருக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், வைஷ்ணவத்தில் வடகலை தென்கலை பிரச்னை உள்ளது. அதுபோல திருப்பரங்குன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டு வருகிறது. 1991ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி, 1947ஆம் ஆண்டில் ஒரு வழிபாட்டு தலம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். அதில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம்

மதநல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை

தர்கா தரப்பில் இருந்து வழக்கறிஞர் மோகன் வாதாடினார். அப்போது, தனி நீதிபதி, கோவில் சொத்துக்களை தர்கா தரப்பு அபகரிப்பது போல கருத்துகளை பதிவு செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மதநல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. மதுரையில் இதுவரை மதரீதியான பிரச்சனைகள் இல்லாத நிலையில், திடீர் உத்தரவு சமூக அமைதியை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், 2011ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவர் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தாக்கல் செய்த மனுவையே தற்போது மனுதாரர் ராம ரவிக்குமார் மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் மோகன் குற்றம் சாட்டினார். மேலும், மலையில் ஏற்கனவே நான்கு இடங்களுக்கு மேல் தூண்கள் உள்ளதால், மனுதாரரின் கோரிக்கை மேலும் சிக்கலடைகிறது. 1920ஆம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது எனவும், ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்டவை செய்து கொடுக்க முடியாது என தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான உரிமையியல் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தீபம் ஏற்றுவது குறித்த மனுவில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது முரண்பாடானது என்றும் வாதிடப்பட்டது.

திருவண்ணாமலை மகா தீபம்

தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவின் ஒவ்வொரு பத்தியிலும் எங்களுக்கு கருத்து முரண்பாடு உள்ளது. அவர், இயற்கைக்கு அப்பாற்பட்ட நீதி வழங்கி உள்ளார். தனி நீதிபதியின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை.தனிநீதிபதி கால அவகாசம் கொடுக்காமல் வழக்கை நடத்தினார். குறைந்தது 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கும் நிலை இருந்தும் அவர் எந்த அவகாசமும் கொடுக்கவில்லை.

தனி நீதிபதி விசாரணை செய்த மூன்று நாட்களில் அனைத்து ஆவணங்களையும் சான்றுகளையும் பெற்று உத்தரவு பிறப்பித்திருக்க முடியாது. தனிநீதிபதி வெறும் தர்காவை மட்டும் கருத்தில் கொண்டார். தொழுகை நடக்கும் இடம், நெல்லித்தோப்பு பகுதிகளை கணக்கில் கொள்ளவில்லை. தூணுக்கு உரிமை கொண்டாட சிவில் நீதிமன்றத்தையே நாட வேண்டும். 2005 ஆம் ஆண்டு தர்கா,  தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்ததாக கூறப்படுகிறது.அதில் தர்கா அருகில் 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என ஒப்புதல் வழங்கியதாக தனி நீதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் தர்காவின் எல்லை இதுவரை வரையறுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தீபத்தூணில் தீபமேற்ற தர்கா தரப்பு நிலைப்பாடு என்ன எனவும் தர்காவிற்கு அப்பால் இருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இதுவரை முறையாக எல்லைகள் வரையறுக்கப்படவில்லை என தர்கா தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்தால் மட்டுமே தனிநீதிபதி உத்தரவை அமல்படுத்த இயலும். மலை உச்சியில் உள்ள தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தூண் உள்ளது. ஆனால், தனி நீதிபதி அந்த தூண் 50 மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என தர்கா தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்

தொடர்ந்து, தர்கா தரப்பு ஆதரவு மனுதாரர் வாதாடுகையில், ”பாபர் மசூதி பிரச்னையால் மத ரீதியான கொலைகள் நடந்தேறியது. இந்த சூழலில் இதுபோன்ற உத்தரவுகள் ஏற்புடைது அல்ல. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை வக்போர்டு, காவல்துறை ஆணையர் தரப்பு வாதங்களை வைக்கலாம் எனவும், இனிமேல் இடையீட்டு மனுக்கள் ஏற்கப்படாது எனவும் கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.