ஈரோடு தவெக பரப்புரை.. 5 நிபந்தனைகளை விதித்த அறநிலையத் துறை!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் தவெக தலைவர் விஜய் வரும் 18-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை தவெகவிற்கு பரப்புரை கூட்டம் நடத்துவது தொடர்பாக 5 நிபந்தனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி,
தவெக பரப்புரைக் கூட்டத்திற்கு வரக்கூடியவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு முறையாக வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
ஒலிபெருக்கி, மேடை அமைக்க மற்றும் பயன்படுத்த காவல் துறை அனுமதி பெற வேண்டும்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.
இடத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது மற்றும் இடம் எப்படி கொடுக்கப்பட்டதோ, அதே நிலையில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினரிடம் மீண்டும் வழங்க வேண்டும்.
ஆகிய 5 நிபந்தனைகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தவெக பொதுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நவம்பர் 16 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்ட இடத்தை ஆய்வு செய்த காவல்துறை போதுமான அளவில் இடவசதி இல்லை எனக் கூறி அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்தே, பெருந்துறை சரளைப் பகுதியில் உள்ள 31 ஏக்கர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், நேற்று அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், தவெக பரப்புரைக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து 50 ஆயிரம் கட்டணமும், 50 ஆயிரம் வைப்புத் தொகையும் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

