'எட்டு நொண்டிகளைக் கொண்ட திமுக கூட்டணியை எதிர்த்து படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்' என்று காமராஜர் சொன்ன வார்த்தைகள்தான் அவர் எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டார் என்பதற்கு சான்று. ஆனால், காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத முடிவுகள் வந்து சேர்ந்தன. தேர்தல் முடிவுகள் வந்த உடன் காங்கிரஸ் அலுவலகமே மயான அமைதி. சுதந்திரப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய இயக்கம் என்ற பெயர் கொண்ட ஒரு கட்சி இந்திய அளவில் முதல்முறையாக ஒரு மாநில கட்சியிடம் ஆட்சியை இழந்திருக்கிறது என்றால் சும்மாவா. அதுவும் தேசிய அளவில் தலைவராக இருந்த காமராஜரே தோற்றுப் போனதையெல்லாம் எப்படி காங்கிரஸ் கட்சி தாங்கிக் கொள்ளும். ஆனால் அதுதான் யதார்த்தம். எப்படி காங்கிரஸ் தோற்றது என்பதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதற்கு சிறு சான்று ஒன்றை மட்டும் முதலில் பார்த்துவிடலாம்.
தோல்வியடைந்த பின்னர் முதலமைச்சர் பக்தவத்சலம், “தமிழ்நாடு முழுவதும் வைரஸ் பரவிருப்பதைப் பார்க்கிறேன். மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார். அதேவேளை காமராஜரோ, “மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். திமுக மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகள்” என்று சொல்லியிருந்தார். ஒருவகையில் காங்கிரஸ் தோல்விக்கு இந்த வித்தியாசம்தான் காரணம்.
ஆம், மாநில அரசியலில் காமராஜர் கோலோச்சி இருந்தவரை காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது. குலக்கல்வி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களால் ராஜாஜிக்கு சிக்கல் வந்தபோது காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். பின்னர் 57, 62 தேர்தல்களில் வெற்றி வாகை சூடி காங்கிரஸை ஆட்சிலும் அமர்த்தினார். ஆனால், 1962 தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்ற போதும் முதல்வராக நீடிக்கவில்லை.. ’காமராஜர் திட்டம்’ வந்து சேர்ந்தது.
காமராஜர் திட்டம் என்பது 1963-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் முன்வைத்த ஒரு அரசியல் சீர்திருத்தத் திட்டம் ஆகும். இது தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, புதிய சிந்தனையையும் உருவாக்கியது. காமராஜர் திட்டத்தின் முக்கிய நோக்கம், அமைச்சர்கள் தங்களது பதவியை விட்டு விட்டு, மக்கள் சேவைக்காக நேரடியாக கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது. இது ஒருவிதமான சீர்திருத்த முயற்சி. காமராஜரின் ஆலோசனைப்படி, ஆறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆறு மத்திய அமைச்சர்கள், தங்கள் பதவிகளை விட்டு விட்டு கட்சி பணிக்குச் சென்றனர். காமராஜர் உட்பட. அதன்பின்னர், தமிழ்நாட்டிற்கு பக்தவத்சலம் முதலமைச்சர் ஆனார். இதுதான் தமிழ்நாட்டு அரசியலில் திருப்புமுனையாக அமைந்தது.
காமராஜர் தேசிய அரசியலில் ஒரு பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ச்சியாக அவப்பெயர்களை கொண்டு வந்தவண்ணம் இருந்தார் பக்தவத்சலம். நிலைமை கைமீறி போன பிறகு மீண்டும் மாநில அரசியலை கையில் எடுத்தார் காமராஜர். ஆனால், அதற்குள் எல்லாவற்றையும் பக்காவாக அண்ணா செய்துமுடித்துவிட்டார் என்றே சொல்லலாம். ஒருவேளை காமராஜர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்திருந்தால், சில விஷயங்கள் நடப்பது தவிர்க்க முடியாது என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. இனி 1967 தேர்தலில் திருப்புமுனையாக அமைந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1967 தேர்தல் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றே கருதிய அண்ணா, வெற்றியை எப்படியும் நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால், எல்லா வகையிலும் வலுவான ஒரு கூட்டணியை அமைத்தார். எதிரும் புதிருமான கட்சிகளை கூட கூட்டணியில் இணைத்துக் கொண்டார். திமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்த ராஜாஜியை அவர் இணைத்துக் கொண்டதை காட்டிலும், பொதுவுடமை கட்சியையும் தனியார்மயத்தை ஆதரித்த ராஜாஜியையும் ஒரே கூட்டணியில் இருக்க வைத்ததுதான் அண்ணாவின் சாமர்த்தியம். சி.பா.ஆதித்தனாரை கூட்டணியில் இணைத்ததும் முக்கிய விஷயம். ஏனெனில், அவர்களது நாளிதழ் பலம் பரப்புரைக்கு உதவியாக அமைந்தது. மா.பொ.சியை இணைத்தது களத்தில் பரப்புரை ரீதியாக வலுசேர்த்தது. அதன்பிறகு காயிதே மில்லத்தின் முஸ்லீம் கட்சியும் திமுகவுடன் இணைந்தது.
அண்ணா அமைத்த கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழவே செய்தன. ஆனால், அண்ணாவோ, “என் வீட்டில் ஒரு திருடன் திடீரென புகுந்துவிட்டால், அவனை அடிக்க எந்தத்தடி அகப்பட்டாலும் அதை எடுத்து அடிப்பேன். அப்போது சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்ட் தடியென்றோ பார்க்க மாட்டேன். எல்லாத் தடிகளையும் உபயோகிப்பேன். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொள்வது தவறாகாது. கொள்கையில் பற்றும், லட்சியத்தில் வலுவும் இருப்பவர்கள் யாருடன் சேர்ந்தாலும் அழிந்துவிட மாட்டார்கள். இதில் எனக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்து வருகிறது” என்று உறுதியுடன் சொன்னார்.
எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் ஆட்சியை இழக்கும் வரை அது சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எல்லாவற்றையும் முற்றிலுமாக மாற்றிப்போட்டது. காங்கிரஸ் கட்சி மீதான எதிர்ப்பை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. 1963, ஏப்ரல் 13-ம் தேதி புதிய ஆட்சி மொழி மசோதாவை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, `1965, ஜனவரி 25-ம் தேதி முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி'யாக இருக்கும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக திமுக போராட்டங்களை முன்னெடுத்தது. போராட்டம் என்றால் சாதாரணமாக அல்ல. தீயாய் பரவிய போராட்டம் தீக்குளிப்பாகவும் மாறியது.
1964ம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கீழ்ப்பழுவூர் சின்னச்சாமி எனும் திமுக தொண்டர் தீக்குளித்து இறந்தது மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. அந்த நெருப்பை அதற்கு மேல் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அணைக்கவே முடியவில்லை. கோடம்பாக்கம் சிவலிங்கம் தொடங்கி பலர் தீக்குளித்து இறந்தனர். உணர்வுபூர்வமான போராட்டமாக மாறி தமிழ்நாட்டையே நெருப்பில் நிற்க வைத்தது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். அதுவும், கல்லூரி மாணவர்கள் களத்திற்கு வந்தபின் இன்னும் அனல் கூடியது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களும் உயிரிழப்புகளும் காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை, வெறுப்பை பல மடங்கு உயர்த்தியது. வரலாற்றிலும் நீங்காத கறையாக நீடித்தது.
1960-களில் அரிசி பஞ்சம் நிலவி வந்த நிலையில் அதனை தனது அஸ்திரமாக பயன்படுத்தினார் அண்ணா. 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்ற தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்தது தி.மு.க. இந்த முழக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு அரிசி பஞ்சத்தை திமுக கையிலெடுத்தது என்பது நாவலரின் வார்த்தைகளில் சொன்னால் சரியாக இருக்கும். ஆம், “மக்கள் முதலில் அள்ளிப்போட்டார்கள் உலையில்; பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அளந்துபோட்டார்கள்; பிறகு பிடித்துப் போட்டார்கள்; இப்போது எண்ணிப்போடுகிறார்கள்” என்றார் நாவலர் நெடுஞ்செழியன்.
அண்ணா: நியாயமாக மக்களுக்கு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் சம்மதித்தால் இந்தக் கணமே திமுக தேர்தல் களத்தில் இருந்து விலகிக் கொள்ளும்
காங். தலைவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி : ரூபாய்க்கு மூன்றுபடி அரிசியைப் போடுவது என்பது இயலாத காரியம். வேண்டுமென்றால் ஒரு படி போடலாம்.
அண்ணா : அப்படியென்றால் இப்போதே ரூபாய்க்கு ஒரு படி போடலாமே! ஏன் போடவில்லை
காங். : உங்களால் போட முடியுமா?
அண்ணா : திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றுபடி லட்சியம்.. ஒரு படி நிச்சயம் (வாக்குறுதியாக..)
‘படி அரிசி திட்டம்’ என்ற பெயரில் அண்ணா சொன்ன வாக்குறுதியை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியால் கச்சிதமாக கொண்டு சேர்த்தது தினத்தந்தி நாளிதழ். அதனால், மக்கள் மனதில் இந்த வாக்குறுதி நன்றாக சென்றுசேர்ந்தது. ஆதித்தனாரை கூட்டணியில் சேர்ற்தபோது எழுந்த எதிர்ப்புக்கு இதுதான் பதில் என்பதை அண்ணா சொல்லாமல் உணர்த்திக் காட்டினார்.
1967 சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 12 ஆம் தேதி திமுக-வின் அப்போதைய நட்சத்திர வேட்பாளரான நடிகர் எம்.ஜி.ஆர்., திராவிடர் கழக ஆதரவாளரும் நடிகருமான எம். ஆர்.ராதாவால் சுடப்பட்டார். இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியது. எம்.ஜி.ஆர் குண்டடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தின் போஸ்டரும் தமிழ்நாடு முழுவதும் சுவர்களை நிரப்பியது. இது திமுக-வுக்கு ஆதரவான மிகப்பெரிய அனுதாப அலையை ஏற்படுத்தின. திமுகவின் பரப்புரையில் முக்கிய சினமாக இந்த போஸ்டர் உருவெடுத்தது.
பெரியாருடன் பயணித்த நாட்கள் தொட்டு ராஜாஜியை கடுமையாக எதிர்த்து வந்தவர் அண்ணா. குறிப்பாக குலக்கல்வியை கொண்டு வந்தபோது திமுக அதனை கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதே ராஜாஜி உடன் 1967-ல் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து சுதந்திரா கட்சியை உருவாக்கிய ராஜாஜி தன்னுடைய நிலைப்பாடுகளில் நிறைய மாற்றிக் கொண்டார். 1967-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் திமுகவைவிட ராஜாஜி முனைப்பாக இருந்தார். ராஜாஜி கூட்டணிக்குள் வந்தது எல்லா தரப்பு மக்களும் திமுகவை அரவணைக்கு என்ற நிலையை உருவாக்கியது. அதற்கு ராஜாஜி மேற்கொண்ட பரப்புரைகளே சான்று.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாக 1967 தேர்தல் அமைந்தது. ஒரு மாற்றம் நிகழ நிச்சயம் பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கும். அந்த வகையில் தான் 1967-ல் நிகழ்ந்த மாற்றத்திற்கும் பல்வேறு காரணங்கள் உண்டு. ஒவ்வொரு காரணத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்தும் உண்டு. அரிசி விலை, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், அண்ணாவின் அரசியல் அறிவு கூர்மை என எந்தவொன்றையும் பிரித்துவிட்டு பார்க்க முடியாது.
தேசிய அளவிலும் ஒரு மாநிலக்கட்சி ஆட்சியை பிடித்த மகத்தான வரலாறும் கொண்டது இந்தத் தேர்தல். இந்த தேர்தலுக்கு பிறகு ஆளும் கட்சி மட்டுமல்ல பிரதான எதிர்க்கட்சி என்ற இடமும் காங்கிரஸுக்கு இல்லாமல் போனது. காமராஜரும் கூட அரசியல் அரங்கில் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டார். திமுகவும், 1972-ல் தொடங்கப்பட்ட அதிமுகவும் பிரதான இடங்களை பிடித்துக் கொண்டது. அது இன்றுவரை தொடர்கிறது.