எப்டிங்க சாதி ஒழியும்? - புனிதப் பாண்டியன் பேட்டி  முகநூல்
தமிழ்நாடு

“சாதி சங்கங்கள் இருக்கு, சாதி மேட்ரிமோனியல் இருக்கு.. அப்ப எப்படி சாதி ஒழியும்” - புனிதப் பாண்டியன்

21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் காரணமாக படுகொலைகள் நடப்பது ஏன்? பட்டியல் சாதி மக்கள் சாதியின் பெயரால் அனுபவிக்கும் துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும்... இப்படிப் பல கேள்விகள் கடந்த சில நாட்களாக எழுப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன.

Rajakannan K

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை உலுக்கி இருக்கிறது.

சாதி ரீதியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. படித்த, விளையாட்டில் சாதிக்க நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞரின் மனதில் எப்படி கொலை செய்யும் அளவிற்கு சாதிய உணர்வு குடிகொண்டது? 21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் காரணமாக படுகொலைகள் நடப்பது ஏன்? பட்டியல் சாதி மக்கள் சாதியின் பெயரால் அனுபவிக்கும் துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும்... இப்படிப் பல கேள்விகள் கடந்த சில நாட்களாக எழுப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன.

எப்டிங்க சாதி ஒழியும்? - புனிதபாண்டியன் பேட்டி

இப்படியான சில கேள்விகளோடு 'தலித் முரசு' ஆசிரியர் புனிதப் பாண்டியனிடம் கருத்து கேட்பதற்காக அணுகினோம். அவர் தொடக்கம் முதலே மிகவும் உணர்வுப்பூர்வமாக பல்வேறு விளக்கங்களையும், கேள்விகளையும் நம் முன்னே வைத்தார். அவர் ஆதங்கத்துடன் பேசியவற்றை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

“சாதிய ரீதியான உணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் வளர்வதற்கு அகக் காரணிகள், புறக்காரணிகள் ரெண்டுமே இருக்கு. புறக்காரணிகள் என்று எடுத்துக்கிட்டா சினிமா, தொடர்ச்சியான சமூக வலைத்தள உரையாடல்கள், ஜாதிய சங்கங்கள் வளர்க்கும் பெருமிதங்கள் இதெல்லாம் இளைஞர்கள் மீது தாக்கம் செலுத்துது.

சாதியை வளர்க்கும் புறக்காரணிகள்!

ஸ்கூல்ல கூட பாகுபாடுகள் காட்டப்படுது. பி.சி, எஸ்.சி. ஹாஸ்டல்கள் அனைத்துக்கும் சமூக நீதி விடுதிகள் அப்படினு மாற்ற வேண்டும்னு அரசு சொன்னதைக் கூட தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்ல அமல்படுத்த முடியல. கடுமையான எதிர்ப்பு வந்துச்சு. கடுமையான எதிர்ப்பு வந்ததும் அரசு அப்படியே விட்டுடுறாங்க. சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாதுனு நிறைய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் இருந்தாலும் எடுக்கணும், அரசுப் பள்ளிகளில் இருந்தாலும் எடுக்கணும். ஆனா சில இடங்கள்ல முடியறதில்ல. தேசிய நெடுஞ்சாலையிலேயே சாதியப் பெயருடன் போர்டு வச்சிருக்காங்க. 2014-க்கு அப்புறம் உருவான ஒரு ஏரியாவுக்கு 'செட்டியார் அகரம்'னு பேர் வச்சிருக்காங்க. இதை கவர்ன்மெண்ட்தான் வெச்சிருக்கு. எப்படி இப்படி வைக்க முடிஞ்சது? கோடம்பாக்கத்துல வன்னியர் தெரு ஒன்று, ரெண்டு, மூணுன்னு இருக்கு. அம்பத்தூர் எஸ்டேட்ல அதேபோல சாதிப் பெயர்ல இருக்கு. இதெல்லாம் நான் வழக்கமா பார்க்கிறது, எதேச்சையாக கண்ணில் படுறது. இதெல்லாமே எப்படி வந்தது? இதை எல்லாம் தான் புறக்காரணிகள்னு சொல்றேன். இதெல்லாம் தான் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கவின் கொலை

இங்க சமூக வலைத்தளங்களும், சினிமாவும் சாதிய ரீதியா இளைஞர்களை எவ்ளோ இன்புளியன்ஸ் பண்ணுதுன்னு நமக்கு தெரியும். சினிமா பாடல்கள எடுதிக்கிட்டீங்கன்னா ’திருப்பாச்சி அரிவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா’ அப்டினு சொல்றாரு வைரமுத்து. திருப்பாச்சி அருவாள எடுத்துவந்து யார வெட்றதுக்கு, வேற மொழி பேசுறவனையா.. வடநாட்டுக்காரனையா. பாகிஸ்தான் காரனையா யார வெட்டச் சொல்றீங்க?

தேவர் காலடி மண்ணேனு பாட்டு போடுறீங்க.. லேட்டஸ்டா பாத்தா சண்டாளின்னு எவ்ளோ பாட்டு வந்திருக்கு.. சினிமா வசனங்கள் சாதிய உணர்வுகளை நார்மலைஸ் பண்ணுது.

தினம்தோறும் நொடி தோறும் வந்து தொலைக்காட்சிகள்ல caste matrimony விளம்பரம் வருது.

யாராவது கண்டிக்கிறாங்களா.. ?ஆணவப் படுகொலைக்கு எதிரா இவ்ளோ நியாயம் பேசுறாங்கள்ல யாரவது 20 வருசமா நடந்துட்டு வர கல்யாண மாலை நிகழ்ச்சிய தடை பண்ணனும்னு பேசி இருக்காங்களா.. ? அப்பவாவது ஒரு நிகழ்ச்சி; இப்போ அப்டி இல்ல எல்லா நிகழ்ச்சிகளிலுமே முதலியார் மேட்ரிமோனி, வன்னியர் மேட்ரிமோனி என தனித்தனியா ஒவ்வொரு சாதிக்கும் மேட்ரிமோனிக்கு விளம்பரங்கள் வருது. இதெல்லாமே சாதிய எண்ணங்களை வளர்க்கும் புறக்காரணிகள்னு சொல்றோம். இதையெல்லாம் யாரும் கேட்குறது இல்லை

இதத்தாண்டி நீங்க சமூக வலைத்தளத்துக்கு போனீங்கன்னா எல்லா சாதிக்குமே வரலாறு என்று எழுதப்பட்டு இருக்கு.. இப்போ 6000 சாதி இந்தியாவுல இருக்குன்னா 6000 சாதி வரலாறுகள் இருக்காம். எவ்ளோ பெரிய அபத்தம் இது. இந்த மாறி விசயங்கள்லாம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கு. யாரும் கண்டிப்பது இல்ல.

சாதியை வளர்க்கும் அகக்காரணிகள்!

அகக்காரணிகள்ல மிக முக்கியமான ரெண்டு இருக்கு. ஒண்ணு குடும்பம், இன்னொன்னு கோவில்.

குடும்பம் ரொம்ப ஆழமான இன்ஸ்டிடியுசன்.

நீ வெளியே என்னா வேணா பண்ணிக்கோ, ஒன்னா உக்காந்து சாப்பிட்டுக்கோ. ஆனா குடும்பத்துல மட்டும் யாரையும் கொண்டு வந்துடாத. உறவுக்கு வந்துட்டா இப்படி ஆணவக்கொலையா முடிஞ்சிடுது. intercaste marriage பண்ணிக்கிட்டாலும் வன்முறைகள் நடக்குது. நான் சந்திச்சு இருக்கேன். பேப்பர்லயும் நிறைய வருது.

இன்னொன்று கோயில். எல்லா ஊர்லயும் தெருக்கு தெரு, மூலைக்கு மூலை கோயில்கள் இருக்கு. எல்லா கோயில்களிலும், எல்லா ஊர்லயும், எல்லா கிராமத்துலயும் ஒவ்வொரு சாதிக்கான தனித்தனி கிடா வெட்டுகள், தனித்தனி சாதிக்கான திருவிழாக்கள் நடக்குது. கோயில்ல தலைக்கட்டுகள் மரியாதை எல்லாமே சாதிய ரீதியான ஒன்றுதான். வேற எங்க வேண்டும்னாலும் உள்ளே விட்டுடுவார்கள். ஆனா கோயில் சந்நிதானத்துலயும் அவங்க வீட்டுலயும் விடமாட்டார்கள். இதுதான் இந்து மத வாழ்க்கை முறை. இது எல்லாமே அகக்காரணிகள்.

"சாதி ஒரு அழகான சொல்" அப்படின்னு அன்புமணி ராமதாஸ் சொன்னத யாருமே கண்டிக்கல. 'சாதி ஒரு அடையாளம் தான்; பாகுபாடுதான் கூடாதுன்னு' வைரமுத்து சொல்றாரு.

யாருமே அதைக் கேள்வி கேக்கல. மூணு மாத தயாரிப்புகளோட சாதி சங்க மாநாடு நடக்குது. சாதி சங்க மாநாட்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்காங்கனு அன்புமணி ராமதாஸ் பெருமையா சொல்றாரு. அவர் ஒரு மருத்துவர். அவங்க பிள்ளைங்க எல்லாம் படிச்சவங்க. சாதி சங்க மாநாட்டுல சத்ரியர்களுக்கு வீரம்னு பேசி உசுப்பேத்துனா அந்த வீரத்த அந்த இளைஞர்கள் யார்கிட்ட காமிப்பாங்க? அவர்கள விட சமுதாயத்துல படிநிலையில கீழ இருக்கவங்ககிட்ட தானே.

சட்டம் சரி செய்துவிடுமா?

எல்லாருமே ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம் எடுத்துட்டு வாங்கணும்னு சொல்றாங்க. அப்படி சட்டம் கொண்டு வந்தா எப்படி நடைமுறைப்படுத்தப் போறோம். தற்போது இருக்கும் சட்டத்தை ஏன் 35 வருஷமா நடைமுறைப்படுத்தலனு புரிஞ்சுகிட்டா தான் புது சட்டம் எப்படி நடைமுறைப் படுத்த முடியும்ங்கிறது புரியும். அரசுக்கு எல்லாரும் அழுத்தம் கொடுத்தா அரசும் செவிகொடுத்து உடனே ஒரு புதிய சட்டம் எடுத்திட்டு வந்துடப் போறாங்க. எழுதி வச்சுக்கோங்க,

"புது சட்டம் வந்தாலும் ஆணவப் படுகொலை நிக்காது."

புது சட்டம் வந்தாலும் ஆணவப் படுகொலை நிக்காது.

சாதிய உணர்வுகள் மற்றும் பெருமிதங்கள் ஊட்டப்படுவதை முதலில் தடுக்கணும். சாதி சங்கம் நடத்துறதுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

சாதிசங்க மாநாடு நடக்காம நீங்க தடுக்கணும். நீதிமன்றம் தானா முன்வந்து சாதி மாநாடுகளுக்கு அனுமதி மறுத்திருக்கணும். 2020-க்கு அப்புறம் வந்து வெட்கமே இல்லாமல் ஜாதி சங்கமாநாடு நடத்துறாங்க... சாதி சங்க மாநாடு நடத்துறவங்கள போயி தேர்தல் வாக்குகளுக்காக பாக்குறாங்க.

சாதி சங்க மாநாடுகள் குறித்து யாரு கேக்குறாங்க? யார் வந்து இதை வந்து தடை செய்யும்னு சொன்னாங்க? எல்லாத்தையும் விட்டுர்றாங்க. ஆனா ஏதாவது இந்த மாதிரி ரத்தம் தெறிக்க கொலை நடந்துட்டா பெரிசா நியூஸ் ஆகுது. ஆனால் நாள்தோறும் பாகுபாடுகள் நடந்துட்டுதான் இருக்கு. இதுபோன்ற காதல் விவகாரங்களில் கொலை நடந்தால் மட்டும்தான் பெரிய விஷயமாக மாறுது.

மதமே முக்கியக் காரணம்!

சாதி என்பது இந்து மத வாழ்க்கை பற்றியது. இந்து மதம் தான் ஜாதியை வலியுறுத்துகிறது. அம்பேத்கர் ரொம்ப அழகா சொல்லுவாரு,

"சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆனா, அவர்களுடைய மதம் அதுக்கு எதிராக இருக்கு”
அம்பேத்கர்

என்று. இங்க அவனுக்கு சட்டத்தை விட மதம் தான் முக்கியம். தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து வருஷம் ஆகிறது. ஏன் இன்னும் அது நடைமுறையில இருக்கு? ஏன்னா, யாரும் அதை மதிக்கல. யாரும் மதம் குறித்துப் பேச தயாரா இல்லை.

என்னவெல்லாம் செய்யணும்?

  • ஆமா சாதி சங்கங்களை எல்லாம் தடை செய்யுங்க. ஒரே ஒரு ஆர்டர் போடுங்க. தடை செய்றதுக்கான எல்லா வேலையும் செய்யுங்க. ஏற்கனவே சாதி சங்கங்களை அரசு சங்கங்களாகப் பதிவு செய்யக்கூடாது என்று அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

  • டிவில ஒளிபரப்பாகும் சாதி ரீதியான மேட்ரிமோனியல் விளம்பரம் வரக்கூடாதுன்னு சொல்லுங்க.

  • வன்முறைக்குரிய பகுதிகள் போலீசுக்கு நல்லாவே தெரியும். சில விஷயங்களுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுங்க.

  • பள்ளியில் சாதி தவறு என்று பாடத்திட்டத்ததில் கொண்டு வாங்க. இதுவரை தீண்டாமை பற்றி மட்டுமே இருக்கு, சாதி குற்றமாக்கப்படல.

  • சாதிய தலைவர்களுக்கு அரசு சார்பில் எதற்கு இவ்ளோ மணிமண்டபங்கள்? அவங்க அவங்க வச்சிட்டுப் போறாங்க.. அரசு சார்பில் வேண்டாம். கலவரங்களுக்கு வித்திடும் குரு பூஜைகளுக்கு தடைவிதிக்கணும்

  • சமூக நீதிக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அம்பேத்கர், பெரியாருக்கு சிலை வைக்கலாம். எல்லா தலைவர்களுக்கும் எதற்காக அரசு சார்பில் வைக்கணும்?

பெரியார் ஒன்று, அம்பேத்கர் ஒன்று. அவங்க தான் ஆன்டி காஸ்ட் லீடர்ஸ்.
  • மற்ற தலைவர்கள் ஜாதிக்கு எதிராக எதையாவது செஞ்சாங்கன்னு சொன்னா அவங்க வச்சுக்கட்டும். ஏன் கவர்ன்மெண்ட் வைக்கணும்?” என்று புனிதப் பாண்டியன் பட்டியலிட்டு முடித்தார்.