டிஜிட்டல் அரெஸ்ட்.. 100 நாட்களில் ரூ.19 கோடியை இழந்த குஜராத் பெண் டாக்டர்! நடந்தது என்ன?
மோசடிக் கும்பலிடம் சிக்கிய குஜராத் பெண் டாக்டர்
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டாம். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினைக் கையாண்டு மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட்டும் ஒன்றாக இருக்கிறது. அதன்படி, குஜராத்தைச் சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் ஒருவர், மோசடி அரெஸ்ட்டால் ரூ.19 கோடியை இழந்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த அந்த மருத்துவருக்கு கடந்த மார்ச் மாதம் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர். முதலில் ஜோதி விஸ்வநாத் என்ற நபர், தாம் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் என மோகன் சிங் என்பவரும், அரசு வழக்கறிஞர்கள் என தீபக் சைனி மற்றும் வெங்கடேஷ்வர் ஆகியோரும் நோட்டரி அதிகாரி என பவன் குமார் எனப் பலரும் அடுத்தடுத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு. தாங்கள் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகவும், மேலும் அதன்மூலம் நோட்டீஸ்களை அனுப்பி தங்களைக் கைது செய்வோம் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி
மார்ச் 15 மற்றும் ஜூன் 25க்கு இடையில், மருத்துவருக்கு இப்படி பல வீடியோ அழைப்புகளை அவர்கள் செய்துள்ளனர். மேலும், தாங்கள் சாதாரண உடையில் காவல் துறையினரால் கண்காணிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். தவிர போலி அமலாக்கத் துறையின் சான்றிதழ்களையும் அனுப்பியுள்ளனர். தவிர, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாங்கள் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், மருத்துவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்ட அவர்கள், அதன்பின்னர், அவருடைய பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.
விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி மருத்துவரும் தனது நிலையான வைப்பு நிதிகளை உடைத்து, நகைகள், சொத்துகளை விற்று ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும், பணத்தைத் திருட யாருடைய கணக்குகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும், மருத்துவரை மிரட்டி பெரிய தொகையை மாற்றும்படி கட்டாயப்படுத்திய மோசடி கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் கைது என்றால் என்ன?
கம்போடியா நாட்டைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கம்போடியாவில் உள்ள சைபர் குற்றக் கும்பல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி அழைப்பு மையங்கள் மூலம் இந்தியர்களை குறிவைப்பதில் பெயர் பெற்றுள்ளன. கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் சைபர் மோசடிகளால் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடியை இழப்பதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் கைது என்பது வேகமாக வளர்ந்து வரும் சைபர் குற்றமாகும், இதில் சட்ட அமலாக்க அதிகாரிகளாகக் காட்டிக்கொள்ளும் மோசடி நபர்கள், ’நீங்கள் டிஜிட்டல்' அல்லது மெய்நிகர் கைதுக்கு உள்ளாகியுள்ளதாகவும், வீடியோ அல்லது ஆடியோ அழைப்பு மூலம் தங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்’ என்று கூறி மிரட்டுகின்றனர். அவர்கள் ஆபாசப் படப் பகிர்வு, போதைப் பொருட்கள் அல்லது பணமோசடியில் ஈடுபட்டதாகவோ குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
குழப்பமடைந்து பதற்றமடையும் அந்த நபர், மோசடிக் கும்பலுக்கு இலக்காகிறார். இதையடுத்து, அவரைக் குறிவக்கும் கும்பல், அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க ஒரு விசாரணை தேவை எனக் கூறி பெரியளவில் அவரிடமிருந்து பணத்தைப் பறிக்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து பணத்தை இழக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதே டிஜிட்டல் கைது மோசடிகள் ஆகும். டிஜிட்டல் கைது அல்லது மெய்நிகர் கைது என்று எதுவும் இல்லை என்று காவல்துறை எச்சரித்து வருகிறது.