கர்நாடகா | வாங்கிய சம்பளமோ ரூ.15 ஆயிரம் தான்.. ரெய்டில் சிக்கியதோ ரூ.30 கோடி! தில்லாலங்கடி எழுத்தர்!
கர்நாடகாவில் உள்ள அரசு ஊழியர்களிடம் லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சோதனைகளில், அரசு ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத மிகப்பெரிய அளவில் சொத்துகள் இருப்பதை லோக் ஆயுக்தா அதிகாரிகள் அம்பலப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் கர்நாடகா கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (KRIDL) முன்னாள் எழுத்தராகப் பணியாற்றியவரிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தராக பணியாற்றியவர், கலக்கப்பா நிடகுண்டி.
இவர் தனது பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக முறைகேடான வகையில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்குத் தொடர்புடைய ஹூப்ளி, ஹொஸ்பேட், கோப்பல் மற்றும் ஆளூர் உட்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மாதம் ரூ.15,000 மட்டுமே சம்பளம் வாங்கும் நிடகுண்டியின் வீட்டில், ரூ.30 கோடிக்கு மேல் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சோதனையின்போது, 24 வீடுகள், 6 வீட்டு மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லோக் ஆயுக்தா தரப்பில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.