கணவரால் ரிதன்யா பட்ட கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.. தந்தை அளித்த மனுவில் பதறவைக்கும் தகவல்கள்!
அண்மைக்காலங்களில் அதிர்வை ஏற்படுத்திய ஒரு மரணம் இளம்பெண் ரிதன்யாவின் இறப்பு. திருமணமாகி எழுபத்தி எட்டே நாட்களில் தற்கொலை முடிவை எடுத்த ரிதன்யா, தனது தந்தையிடம் தனது முடிவுக்காக மன்னிப்புகேட்டு அனுப்பிய ஆடியோ அனைவரின் மனதையும் உலுக்கியது.
இந்நிலையில்தான், ரிதன்யாவின் தந்தை தமிழகஅரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.
ரிதன்யாவின் இந்தக் குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. இப்படியொரு முடிவை ஏன் ரிதன்யா எடுத்தார்? என்ற கேள்வி நீடிக்கும் நிலையில், தலைமைச்செயலகத்திற்குச் சென்று ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் அதிர வைக்கும் பல தகவல்களை கூறியுள்ளார்.
தனது மகள் ரிதன்யாவை, கடந்த 2025 ஏப்ரல் 11 ஆம்தேதி கவின்குமார் என்பவருக்கு திருமணம் செய்து தந்ததாக தெரிவித்துள்ளார். திருமணத்தின்போது 300 சவரன் நகைகள், 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ காரை வாங்கித்தந்ததாக அண்ணாதுரை குறிப்பிட்டுள்ளார். மகளின் வருங்காலத்துக்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவும் இதனை செய்ததாக அண்ணாதுரை தெரிவித்துள்ளார். புகுந்த வீட்டுக்குசென்றபோது 100 பவுன் மட்டும் எடுத்துச்சென்றதாகவும் 200 பவுன் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு தங்களிடமே கொடுத்துவிட்டுச்சென்றதாக அண்ணாதுரை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எஞ்சிய நகைகளை எடுத்துவருமாறும், கூடுதல் வரதட்சணை கேட்டும் ரிதன்யாவை கவின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக மனுவில் அண்ணாதுரை கூறியுள்ளார். கடந்த ஜூன் 25 ஆம்தேதி தங்கள் வீட்டுக்கு வந்த மகள் மிகவும் வாடிய நிலையில், மனரீதியாக புண்பட்ட நிலையிலும் வந்ததாகவும், எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் தங்களிடம் ரிதன்யா எதையும் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகியோர் வந்திருந்தனர். எங்களிடம் ரிதன்யா எதாவது கூறினாளா என்று கவினின் பெற்றோர் கேட்டனர். பின்னர் ரிதன்யாவை தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர். மாமியார் சித்ராதேவி ரிதன்யாவை தனியாக அழைத்துச் சென்று பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், ரிதன்யாவுக்கும், கவினுக்கும்இடையே இனி எந்த பிரச்னையும் வராது என்றும், மீண்டும் வீட்டுக்கு வருமாறும் கூறினார்.
ஆனால் மீண்டும் அங்கு செல்லப்போவதில்லை என்பதில் ரிதன்யா உறுதியாக இருந்தார். அன்றைய நாள் மாலை, ரிதன்யாவின் மவுனத்தை உடைக்கும் முயற்சியில் அவரது தாய் ஈடுபட்டார். அப்போது கண்ணீருடன் ரிதன்யா தனது தாயிடம் அனைத்து உண்மைகளையும் கூறினார். கவின், தன்னை அடிக்கடி பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாகவும் தனது விருப்பததுக்கு மாறாகவும், இயற்கைக்கு மாறான முறைகளிலும் தரக்குறைவாகவும் பாலியல் ரீதியில் நடந்து கொண்டதாக ரிதன்யா கூறியுள்ளார். இதனால் உடல் வலியும், மனவலியுமாக தான் துன்பப்பட்டதாக ரிதன்யா கூறினார். ஒவ்வொரு நாள் இரவும் பயத்துடனும், அச்சத்துடனும் வலிகளுடனும்தான் கழிந்ததாக ரிதன்யா கூறியுள்ளார்.
தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை படுக்கையில் கட்டிவைத்தும், கண்களை கட்டியும் கவின், பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டதாக ரிதன்யா தனது தாயிடம் கூறியுள்ளார். தனது மகள் பட்ட சித்ரவதைகளை அண்ணாதுரை தனது மனுவில் இன்னும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் அந்த சித்ரவதைகளை இங்கு குறிப்பிடக்கூட முடியவில்லை. அந்த அளவு மோசமான சித்ரவதைகளை ரிதன்யா சந்தித்துள்ளார். கவினின் துன்புறுத்தல்களால் பல வாரங்கள் தன்னால் சரியாக நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக ரிதன்யா கூறியுள்ளார். குளியல் அறையில் கூட தனிமை கிடைக்கவில்லை என்றும், கதவை திறந்து வைத்தும், அங்கே கண்ணாடி வைத்தும் தனிமனித கவுரவத்தை குலைக்கும்வகையில் நடந்து கொண்டதாக ரிதன்யா தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி தரும்விதமாக, மாமனார் ஈஸ்வரமூர்த்தி, இரவு 11 மணிக்கு ரிதன்யாவை தனியாகஅழைத்துச்சென்று மோசமான முறையில் பேசியதாகவும், மகன் விரும்பும்வகையில் நடந்து கொள்ளவேண்டும் என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நான்கு மணிநேரம் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜூன் 28 ஆம்தேதி கோயிலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற மகள், பகல் 12.30 மணி அளவில் காரில் மயக்கமுற்றும், வாயில் நுரைதள்ளியும் இறந்து கிடந்ததாக தகவல்கிடைத்தது என்று அண்ணாதுரை தனது மனுவில் கூறியுள்ளார்.
அடுத்து தங்கள் மகள் இறந்த செய்தியும், அவினாசி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட் தகவலும் கிடைத்ததாக கூறியுள்ள அண்ணாதுரை, பகல் 2 மணி அ ளவில் ரிதன்யா இறந்ததாக அறிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள் இறந்த இடத்தில் கிடந்த தனது செல்போனை, எஸ்ஐ துரைசாமி, எந்த நடைமுறையும் பின்பற்றாமல் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் இரவு 8 மணிக்குத்தான் தனது போன் தன்னிடம் தரப்பட்டதாகவும் அண்ணாதுரை கூறியுள்ளார்.
அப்போதுசெல்போனில் தனது மகள் பதிவிட்ட ஆடியோ ரெக்கார்ட்டிங்குகளை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் உடனே காவல்துறையினரை அணுகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சந்தேக மரணமாக பதியப்பட்டவழக்கை மாற்றும்படி கோரிக்கை விடுத்ததாகவும் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஆடியோ விவரங்கள் தெரிந்தும் சந்தேக மரணமாகவே வழக்கை பதிவு செய்ததாக தெரிவித்துள்ள அண்ணாதுரை, தனது மகள் பேசிய ஆடியோ வெளியே கசியவிடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கவினின் குடும்பத்துக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, உறுதியான ஆதாரங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள்இருந்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
தனது மகள் மனரீதியாக நிலையற்ற தன்மை கொண்டவர் என்று கவின்குமார் குடும்பத்தினர் சித்தரிப்பதாக அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மகள் ரிதன்யா மரணம் தொடர்பாக தமிழக அரசிடம் 3 கோரிக்கைகளை அண்ணாதுரை முன்வைத்துள்ளார்.
1. ரிதன்யாவின் வழக்கை விசாரிக்கும் காவல் விசாரணை அதிகாரி, உள்ளூரில் செல்வாக்கு வாய்ந்த அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவரை மாற்றி வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
2. தடயவியல், டிஜிட்டல் ஆதாரங்கள், கவினின் செல்போன் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும்
3. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேரம் மிகவும் முக்கியமானது. தாமதிக்கும் ஒவ்வொரு தருணமும், சாட்சிகள் பிறழவும், உண்மைகள் திரிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும், அரசின் தலையீடு இருந்தால் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்று நம்புவதாகவும் ரிதன்யாவின் தந்தை கோரியுள்ளார்.