திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் கேள்விகளை எழுப்பினார். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற அனுமதித்தது குறித்து விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், அரசு அலுவலர்கள் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். தெரிந்தே செய்த யாரையும் மன்னிக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக அத்துமீறி, அங்குள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதித்தீர்கள்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
சட்ட ஒழுங்கு முன்னாள் கூடுதல் காவல்துறை தலைவரும் தற்போதைய காவல்துறை தலைவருமான டேவிட்சன் ஆசீர்வாதம் காணொலி வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ, திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சசிபிரியா, கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரிலும் ஆஜராகினர்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட விளக்கம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவை எதிர்த்த LPA வழக்குகள் விசாரணைக்கு நேரம் போதாமையால் நேற்று விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏதேனும் எழுத்துபூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அடுத்த விசாரணையில் பதில்மனு தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "முழுமையாக 1 மாதம் அவகாசம் இருந்தும், எழுத்துப் பூர்வ பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, திங்கட்கிழமை நடவடிக்கை விபரங்கள் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து, "தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக அத்துமீறி, அங்குள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதித்தீர்கள்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதில் ஏதேனும் முரண் உள்ளதா? கல்லத்தி மரத்தில் கொடியேற்ற கோவில் தரப்பிடம், தர்கா தரப்பு அனுமதி பெறவில்லை. என்ன செய்யலாம்? நீங்களே பரிந்துரையுங்கள் என தெரிவித்தார்.
அதற்கு கோவில் நிர்வாகம் தரப்பில், புகார் அளிப்பதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
அதையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படுகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
ஒரே ஒரு முறை அவகாசம் வழங்க வேண்டுமென அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்திருக்கிறார்கள். அவர்களை அப்படியே விடுவதா? என கேள்வி எழுப்பினார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் தரப்பில், அவர்கள் எடுத்த முடிவுகள் தங்களின் சுய முடிவே. வேறு யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, கோவில் செயல் அலுவலர் எப்படி தானா செய்தாரா? அல்லது சேகர்பாபு சொன்னரா? என கேள்வி எழுப்பியதோடு, "இன்றும் நீதிமன்ற அவமதிப்பாளர்கள் தரப்பில் மன்னிப்பு கோரியோ, விளக்கமளித்தோ எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை" என தெரிவித்தார்.
ராமரவிக்குமார் தரப்பில், "அரசு வழக்கை ஒத்திவைக்கக் கோருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தது, உதவி ஆணையர் டேவிட் இனிகோ 144 உத்தரவு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது என தெரிந்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றவில்லை. இருவரையும் மன்னிக்க இயலாது” என குறிப்பிட்டார்.
அரசுத்தரப்பில் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.