திருப்பரங்குன்றம்| சந்தனக்கூடு திருவிழா.. பரபரப்பான சூழலில் சிக்கந்தர் தர்காவில் கொடியேற்றம்!
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா பரபரப்பாக நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வருகிற ஜனவரி 6ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று 21ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறுவதற்காக அனுமதி கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் உத்தரவைத் தொடர்ந்து இருபதாம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டதால், மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பரபரப்பான சூழல் 20 பேர் கைது..
இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு கொடியேற்ற விழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மலைக்கு செல்ல இஸ்லாமியர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தசூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று கைது செய்யப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆறு மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிக்கந்தர் தர்காவில் கொடியேற்றம் நடத்தப்பட்டது..
இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரியார் ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது.
ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களில் ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மலை பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.
தங்களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் செல்ல அனுமதித்ததால் பழனி ஆண்டவர் தெருவில் உள்ள குடியிருப்பு வாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் போலீஸார் தங்களை ஏன் தீபம் ஏற்று அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி அரோகரா கோசமிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை நடத்தி நிறுத்தினர். இந்த தள்ளு முள்ளு சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என கூறியதால் ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் முன்பு பெண் ஒருவர் விளக்கேற்றி வழிபாடு செய்தார். பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திரைப்பட பாணியல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. அதே சமயம் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வாக்குவாதத்தில ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் பழனி ஆண்டவர் கோவில்களாக பள்ளிவாசலுக்கு சென்றடைந்தனர். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதி இந்து, முஸ்லிம் மக்கள் ஆதரவுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இதே போல் வருகிற ஜனவரி 6ஆம் தேதிநடைபெறும் சந்தனக்கூடு விழாவும் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெறும் என பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

