திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்., தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு முடித்து வைப்பு.!
”திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்” என தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் மனுதாரர் தீபமேற்றுவதற்காக CISF வீரர்களையும் பாதுகாப்பிற்காக செல்லவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், பொது அமைதிக்கு பிரச்னை வரும் எனக் கூறி தீபம் ஏற்ற சென்றவர்களை திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 144 தடை உத்தரவை அமல்படுத்தி காவல்துறையினர் அக்கூட்டத்தை கலைத்து இருந்தனர்.
இந்த நிலையில், தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது அளவீட்டுக் கல் எனவும் நூற்றாண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் கல் மண்பத்திலேயே தீபம் ஏற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, ”தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக அரசு செயல்படக் கூடாது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூண் தேவஸ்தான இடத்திலேயே உள்ளது என்பதால் தீபம் ஏற்றுவதில் எந்தபிரச்னையும் இல்லை. எனவே, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றலாம் எனவும் தீபமேற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபமேற்றலாம் என்ற தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே ராமகிருஷ்ணன் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

