தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய அரசு, புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார நிலை ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன.
“தங்கத்தை இனி கனவில்தான் வாங்க முடியுமோ” என்ற அளவுக்கு, தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் திருமணம், சுபநிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க காத்திருந்த நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 13-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கிராம் ரூ.12,370-க்கு விற்கப்பட்டது. அதன்பின் வாரத்தின் முதல் நாளான நேற்று, தங்கம் விலை எதிர்பாராத வகையில் தாறுமாறாக உயர்ந்தது.
நேற்று காலை நேரத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ரூ.440 உயர்வு கண்டது. இதன் விளைவாக, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,120-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கும் விற்பனை செய்யப்பட்டு, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை இவ்வாறு திடீரென உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம், உலக அளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கான உள்நாட்டு, சர்வதேச காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிர்ணயம் என்பது பெரும்பாலும் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அமைகிறது என்றும், சர்வதேச அளவில் விலை உயர்ந்தால் அதன் தாக்கம் நேரடியாக இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கம், வெள்ளி விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் போதெல்லாம், இறக்குமதி செலவு அதிகரிப்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்வை சந்திக்கிறது.
இந்நிலையில், உலக அளவில் போர் சூழல், அரசியல் குழப்பம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளதால், பொருளாதார எதிர்காலம் குறித்த உறுதியற்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.
பாதுகாப்பான முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களும், தங்கம், வெள்ளி மீதான தேவையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் பெரிய முதலீட்டு நிறுவனங்களும் தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்து வருவதால், உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் தங்கம் என்பது கலாசார ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் முக்கிய இடம் வகிக்கிறது. தங்கம் ஆபரணமாக மட்டுமல்லாமல், எதிர்கால பாதுகாப்புக்கான சேமிப்பாகவும் மக்கள் கருதுவதால், உள்நாட்டிலும் தங்கத்தின் தேவை குறையவில்லை.
இந்த தேவை காரணமாக நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் மாதம் வரை இந்தியா ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தையும், ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான வெள்ளியையும் இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் முழுமையாக நிலைபெறும் வரை, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு போக்கு தொடர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நகை பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.