இமயமலைக்குள் புதைந்துள்ளதா அணுகுண்டு? நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிர்ச்சிக் கட்டுரை!
இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் வெள்ளங்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளுக்கும் அமெரிக்காவின் சிஐஏ வைத்த உளவுக்கருவி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் வெள்ளங்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளுக்கும் அமெரிக்காவின் சிஐஏ வைத்த உளவுக்கருவி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற இதழான நியூயார்க் டைம்ஸில் அதிர்ச்சியூட்டும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் இமயமலைத் தொடரில் உள்ள நந்தாதேவி சிகரத்தின் உச்சியில் அணு மின்சாரத்தில் இயங்கும் உளவுபார்க்கும் கருவி ஒன்றை இந்தியா உதவியுடன் அமெரிக்கா பொருத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை உளவுபார்க்கும் நோக்கில் பொருத்தப்பட்ட இக்கருவியின் மின் தேவைக்காக புளூட்டோனியம் என்ற கதிர்வீச்சுப்பொருள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த உளவு முயற்சி தோல்வியடைந்த நிலையில் அப்போது வைக்கப்பட்ட அணு மின்னுற்பத்தி சாதனம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு காணாமலே போய்விட்டது. இந்நிலையில் அதிலிருந்த புளூட்டோனியம் வெளிப்படுத்தும் வெப்பம்தான் பனி அதிகளவில் உருகக் காரணமாகி வெள்ளம் போன்ற பிரச்னைகளுக்கு வித்திடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் புளூட்டோனியம் கலந்த கதிர்வீச்சுப் பொருள் கங்கை ஆற்றில் கலந்து மோசமான நோய்களுக்கும் காரணமாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தவறான கைகளுக்குச் சென்றால் இதைப் பயன்படுத்திஅணுகுண்டுகூட செய்யலாம் என்றும் அதை அமெரிக்கா தேடி எடுத்துச்சென்றுவிட வேண்டும் என்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருவியை தேடி வெளியே எடுத்து அச்சம் நீக்கப்படவேண்டும் என்று உத்தராகண்ட் அமைச்சர் சத்பால் மகாராஜ் கூறியுள்ளார். உளவுத்துறை தொடர்பான விவகாரங்கள் என்பதால் இது குறித்து இரு நாட்டு அரசுகளும் எதுவும் கூறாமல் அமைதி காக்கின்றன.

