மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் pt
தமிழ்நாடு

மதுரை | ”கண்டிக்கத்தக்கது” சிறுமியிடம் தவறாக நடந்ததாக உதவி ஜெயிலரை தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஜெயிலரை நடு ரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம் பெண் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகி இருந்த சூழலில் வழக்கு பதிவு செய்ததால் எதிர்காலம் பாதித்ததாக இளம் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: பிரசன்னா

மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றிருக்கார். அப்போது, அங்கிருந்த கைதியின் மகளிடம் பேசி உள்ளார்.

மேலும் அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, தனது செல்போன் எண்ணை கொடுத்து, பள்ளி படிப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாணவியிடம் அவ்வப்போது செல்போனில் பேசி நலம் விசாரித்துள்ளார்.

மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் அந்த மாணவி, உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்கு சென்றார். இதில் சித்தி, 30 வயது இளம்பெண் ஆவார்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கு ஓடி வந்த, மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கிடையே சிறை உதவி ஜெயிலர் பால குருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாலகுருசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்கிய பெண் மீதும் வழக்குப்பதிவு..

இதே சமயத்தில் கரிமேடு காவல் நிலையத்தில் பாலகுருசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பம் முதலே திட்டமிட்டு தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யான காரணங்களை சிறுமியின் மூலம் கூறி தன்னை போனில் அழைத்து பொதுவெளியில் வீடியோ எடுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஜெயிலரை தாக்கிய இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயிலரைத் தாக்கிய பெண்

தன் வீட்டில் இருக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட நபரை கண்டித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக தன் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதாகவும். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீசார் என்பதனால் வேண்டுமென்றே தன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும், தற்பொழுது அரசு பணிக்கு போட்டித் தேர்வு எழுத கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்து வரும் வேளையில் தன் எதிர்காலத்தை சிதைக்க வேண்டும் என தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் கைதான பிறகு இவர்கள் மீது வழக்குப்பதிவு..

மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி தீபன் பேசுகையில், தன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்றுவதற்கும், பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை அப்பெண் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி ஜெய்லர் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே மற்றொரு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இளம் பெண் மீதும் அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு நபர் காவல் நிலையத்தில் கைதியாக இருக்கும் பொழுது மற்றொரு காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை எப்படி காவல் நிலையத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள் என தெரியவில்லை. இவர் காவலர் என்பதனால் இவரை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக காவல்துறையை செயல்படுகிறது. புகார் கொடுத்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்வது என்பது கண்டிக்கத்தக்க செயல் என்று தெரிவித்தார்.

அவர்கள் குடும்பத்து பெண்கள் என்றால் இப்படி நடந்து கொள்வார்களா?

பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி போலீசார் என்று தெரிந்தவுடன் பின்வாங்கி விட்டார்கள். கையும் களவுமாக ஆதாரத்தோடு நீங்கள் அவரை பிடித்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என போலீசார் கூறியதை தொடர்ந்து அன்றிலிருந்து இரண்டாவது நாள் சிறுமியை தனியாக தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். அதனால்தான் அவரை அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதே மாதிரியான சம்பவம் அரசு அதிகாரிகள் அல்லது காவல்துறையினர் குடும்பத்தில் நடந்திருந்தால் சும்மா இருப்பார்களா?.

என் வீட்டில் எனது பிள்ளை போல் வளர்த்து வரக்கூடிய சிறுமியிடம் இப்படி இவர் நடக்கும்பொழுது நான் எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? இவர் ஏற்கனவே என்னிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 10 நாள் கடந்து விட்டது. இது நாள் வரை காவல்துறையினர் எங்களை மிரட்டி வருகிறார்கள். அரசு தேர்வுக்கு தயாராகி வரக்கூடிய சூழலில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது எனது வாழ்க்கையில் கரும்புள்ளியாக நான் பார்க்கிறேன் எனவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சம்பந்தப்பட்ட காவலர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவரை பொது இடத்தில் அடித்த காரணத்தினால் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.