இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை பைபாஸ் சாலை பகுதியில் முன்னாள் சிறைவாசி ஒருவர் தனது மகளுடன் சாலையோர உணவகம் நடத்தி வந்துள்ளார். இங்கு மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரியும் பாலகுருசாமி என்பவர் சாப்பிடுவதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பாலகுருசாமி, உணவகத்தில் இருந்த சிறைவாசியின் மகளிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவ்வப்போது எதாவது உதவி செய்வதாகவும் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பாலகுருசாமி, மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவு புரம் பகுதியில் உள்ள ஏடிஎம்-க்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது சிறைவாசியின் மகள், பாலகுருசாமி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டமுள்ள சாலை பகுதியிலேயே வைத்து அடித்துள்ளார். இதனையடுத்து அவர், மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலகுருசாமி மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பாலகுருசாமி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.