மதுரை | சிறுமியிடம் தவறாக நடந்தாக ஜெயிலரை நடு ரோட்டில் தாக்கிய தாய்!
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர் பணிபுரிந்துவருகிறார். மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து விடுதலைசெய்யப்பட்ட ஒருவர் பைபாஸ் சாலைப் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வரவே அங்கு சென்று சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஜெயிலர் பாலகுருசாமி. உணவக ஓனருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவர்களும் அவர்களது குழந்தைகளும் உணவகத்திலே இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில தினக்களுக்கு முன்பாக உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி உணவக உரிமையாளரின் பேத்தியான பள்ளிச் சிறுமியிடம் தனது அலைபேசி எண்ணைக் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்ளச் சொல்லிச் கேட்டுள்ளார். பின்னர் அவ்வப்போது சிறுமியிடம் செல்போனில் பேசி நலம் விசாரித்துவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது அங்கிருந்த பள்ளிச் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுமியின் தாய் ஜெயிலர் தன் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி நடுரோட்டில் வைத்து அவரை அடித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியில் உதவி ஜெயிலரை பெண் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி, சிறுமியின் தாய் மற்றும் சிறுமி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின் வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.