ரிக்கி பாண்டிங், ஸ்ரேயாஷ் ஐயர் pt web
T20

போர்க்கதை ஆயிரம்.. இவன் பேரின்றி முடியாதே! ஸ்ரேயாஷ் தலைமையும்.. பஞ்சாப் எழுச்சியும்..

பணமும் திறமையும் கொட்டிக்கிடக்கும் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு franchiseஆவது 2 uncapped வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாகவும் 5 uncapped வீரர்களை ப்ளேயிங் 11லும் களமிறக்க முடிவெடுத்திருந்தால், ‘என்னத்த ஆடப்போறாங்க..’ என்றே எல்லோரும் கடந்துபோயிருப்போம்...

Angeshwar G

பணமும் திறமையும் கொட்டிக்கிடக்கும் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு franchiseஆவது 2 uncapped வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாகவும் 5 uncapped வீரர்களை ப்ளேயிங் 11லும் களமிறக்க முடிவெடுத்திருந்தால், ‘என்னத்த ஆடப்போறாங்க..’ என்றே எல்லோரும் கடந்துபோயிருப்போம்... ஆனால், திரும்பிய நம் முகங்களை சிக்சர்களின் மூலம் திருப்பியிருக்கிறார்கள் பஞ்சாப் அணியினர்..

பஞ்சாப் கிங்ஸ்

கிங்ஸ் 11 பஞ்சாப் ஆக இருந்தபோதும் சரி, பஞ்சாப் கிங்ஸாக மாறியபோதும் சரி... கடந்த சீசன்களில் ஓர் அணியாக அவர்கள் சில தவறுகளைச் செய்திருக்கலாம்... அதாவது, அடுத்தடுத்து கேப்டன்களை மாற்றியது, அணிக்குத் தேவையான சரியான வீரர்களைத் தேர்வு செய்யாதது, வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கத் தவறியது என நிர்வாகம் சார்ந்தும் அணியாகவும் சில முடிவுகளை தவறாக எடுத்திருக்கலாம்.. சரியான முடிவுகளை எடுத்திருந்தும் சூழல்களும், நிகழ்வுகளும் அவர்களுக்குச் சாதகமாக செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த சீசனில் ஒரு அணியாகவும், தனிப்பட்ட நபர்களின் திறமையினாலும் ஒட்டுமொத்த நாட்டையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றனர் பஞ்சாப் அணியினர்.

பாண்டிங் எதிரொலி

2014 ஆம் ஆண்டிலிருந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறவில்லை. தங்களது செயல்திறனையும் பயிற்சி முறையையும் மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எழுந்தது. முடிவாக ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக கொண்டுவந்தனர். கோப்பை வென்றால்தான் வெற்றிகரமான பயிற்சியாளரா என்றால் கண்டிப்பாக இல்லை.. தொடர் முழுவதும் ஒரு அணியாக அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதுதான் முக்கியமான ஒன்று.. அப்படிப்பார்த்தால், ஐபிஎல்லில் ரிக்கி பாண்டிங் வெற்றிகரமான பயிற்சியாளர்தான். டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குள்ளும் அதிலொரு முறை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

ரிக்கி பாண்டிங்

பஞ்சாப் அணிக்கு பாண்டிங் வந்ததும் அதன் எதிரொலி பெரிதாக ஒலித்தது. அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷஷாங் சிங் மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் என இரு uncapped வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் ஏலத்தில் வெளியில் விட்டது பஞ்சாப் அணி. இதன் காரணமாக ரூ.110 கோடி எனும் மிகப்பெரிய தொகையுடன்தான் ஏலத்திற்கே சென்றது.. அதோடு, 4 RTM ஆப்சன்களையும் தங்களிடம் வைத்திருந்தது. விளைவு தேடித்தேடி வீரர்களை சேகரிக்க முடிந்தது. ஏலம் முடிந்ததும் பஞ்சாப் அணியின் வீரர்களை நீங்கள் பார்த்திருந்தால், இந்த சீசனும் வழக்கம்போல தானா? என்றே நினைத்திருப்பீர்கள். ஏன்? சில வீரர்களின் பெயர்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அனைத்தையும் மாற்றியது ‘மக்களின் கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம்படை.

licence to hit

நாம் முன்பே பார்த்ததுபோல எந்த ஒரு அணியும் செய்யத்துணியாத ஒன்றை செய்தது பஞ்சாப் அணி. ப்ரம்சிம்ரன் மற்றும் ப்ரியான்ஷ் ஆர்யா என இரு uncapped வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக நியமித்தது. ப்ரம்சிம்ரன் கூட கடந்த சீசனில் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், ப்ரியான்ஷ் ஆர்யா? இந்த சீசனில் பஞ்சாப் அணியின் கண்டெடுத்த முத்து. 16 போட்டிகளில் 451 ரன்கள்.. அதில் ஒரு சதம், 2 அரைசதமும் அடக்கம்... licence to hit என்பார்களே அது ப்ரியான்ஷ் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. அவுட் ஆனாலும் பரவாயில்லை.. களத்தில் இருக்கும்வரை சிக்சர்களுக்குப் பஞ்சமிருக்கக்கூடாது. அதை செவ்வனே செய்தார் ப்ரியான்ஷ். 183.33 என்கிற அவரது ஸ்ட்ரைக் ரேட்டே அதற்கான பதிலைக் கொடுக்கும்... மொத்தமாக, 51 பவுண்டரிகள்.. 25 சிக்சர்கள்...

ப்ரம்சிம்ரன் சிங், ப்ரியான்ஷ் ஆர்யா
Good legnthல் middle & legல் போடுவது சுனில் நரைனின் பலம்., பேட்ஸ்மேன்கள் அந்த பந்தில்தான் திணறுவார்கள். ஆனால், ப்ரம்சிம்ரன் அதை Switch hit செய்து சிக்சருக்குப் பறக்கவிட்டார்.. அரண்டு போனது கிரிக்கெட் உலகம்..

அடுத்தது ப்ரம்சிம்ரன் சிங்.. கடந்த சீசனை விட மிகவும் மேம்பட்ட வீரராகக் களத்திற்கு வருகிறார் ப்ரம்ப்சிம்ரன்.. அவர் வழக்கமான பவர் ஹிட்டர் என்பதையும் தாண்டி எதிரணியின் பந்துவீச்சையும், பீல்டிங்கையும் சிதறடிக்கும் திறன் பெற்றவர். ஏனெனில், அவரிடம் மைதானம் முழுவதும் அடிப்பதற்கான ஷாட்கள் கைவசம் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். Good legnthல் middle & legல் போடுவது சுனில் நரைனின் பலம்., பேட்ஸ்மேன்கள் அந்த பந்தில்தான் திணறுவார்கள். ஆனால், ப்ரம்சிம்ரன் அதை Switch hit செய்து சிக்சருக்குப் பறக்கவிட்டார்.. அரண்டு போனது கிரிக்கெட் உலகம்..

ஸ்ரேயாஷ் எனும் அசாத்தியன்

எதை வேண்டுமானாலும் கடந்துவிடலாம். பும்ரா வீசிய யார்க்கரை third man திசையில் அவர் அடித்த பவுண்டரி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

பஞ்சாப்பின் முதுகெலும்பு அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர்.. கொல்கத்தா அணியில் என்ன நடந்திருக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. ஆனால், கோப்பை வென்ற ஒரு கேப்டனைத் தக்கவைக்கத் தவறியது மிகப்பெரிய தவறு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.. மிக முக்கியமாக கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் அடைந்திருக்கும் உயரம் மலையளவு.. ஆனால், அவர் பெறும் பாராட்டுகளோ கடுகளவு... ஒவ்வொரு சீசனிலும் அவர் பெறும் அனுபவங்களும், அவரது தன்னப்பிக்கையும் ஒன்றாக சேரும்பொழுது எதிரணிக்கு மிகவும் ஆபத்தான வீரராக மாறி வருகிறார்... உதாரணம் மும்பைக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியைச் சொல்லலாம். 204 ரன்கள் எனும் இலக்கினை எதிர்த்து ஆடிக்கொண்டிருந்தபோது, 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து திணறிக்கொண்டிருந்தது பஞ்சாப் அணி.. முதலில் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டார்.. நிதானமாகவே ஆரம்பித்தார்.. இதனையடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.

ஸ்ரேயாஷ் ஐயர்

எதை வேண்டுமானாலும் கடந்துவிடலாம். பும்ரா வீசிய யார்க்கரை third man திசையில் அவர் அடித்த பவுண்டரி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கேப்டனாகவும் எப்போதும் நிதானம் இழப்பதில்லை.. பஞ்சாப் வீரர்கள் miss field செய்யும்போதும் சரி, கைக்குவரும் கேட்ச்களை தவறவிடும்போதும் சரி.. கோபப்படுவதுமில்லை.. டென்சன் ஆவதுமில்லை... இறுதிப்பந்து வரை வெற்றிக்கான முனைப்பு மட்டுமே கொண்டிருக்கிறார். அதற்கான சமீபத்திய உதாரணம் பெங்களூருக்கு எதிரான குவாலிஃபயர் 1ல் பஞ்சாப் அணி தோற்றபின் அவர் கூறிய வார்த்தைகள்... We have lost the battle, but not the war. ஆம், போர் என்று வந்துவிட்டால் வெற்றி மட்டுமே குறி.... இதுவரை தனது கேப்டன்சியில் அதையே நிரூபித்துள்ளார். இல்லையெனில், ஐபிஎல்லில் மட்டும் 7 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் அழைத்துச் சென்றதாகட்டும், 13 ஆண்டுகளுக்குப் பின் அதே அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதாகட்டும், 10 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா அணியை கோப்பை வெல்லச் செய்ததாகட்டும் ஒவ்வொரு சீசனும் தனது இருப்பை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்... மும்பைக்கு எதிரான போட்டியிலும் அதை நிரூபித்தார். ஷ்ரேயாஸ் கேப்டன்சியிலும் பாண்டிங் தலைமையிலான பயிற்சியிலும் பஞ்சாப் அணி தரம்வாய்ந்த கிர்க்கெட்டை ஆடியிருக்கிறது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது...

கைமேல் பலனைக் கொடுத்த திட்டம்

பஞ்சாப் அணிக்கு மிக முக்கியமாக கூற வேண்டியது அந்த அணியின் மிடில் ஆர்டர்... நெஹல் வதேரா, ஷஷாங் சிங் தவிர வேறு யாரும் அத்தனை சிறப்பாக ஆடவில்லை. அதிரடிக்காக அழைத்துவரப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களான ஜாஸ் இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டொஸ்னிஸ் என மூவரும் கூட்டாக சேர்ந்து சொதப்பினர்.. ஆனால், சமீப காலங்களில் அந்த நிலை மாறி வருகிறது. நான்காமிடத்தில் ஆடிக்கொண்டிருந்த இங்லீஸை மூன்றாம் இடத்தில் அனுப்பினார் ஸ்ரேயாஸ்.. ஏனெனில், பவர் ப்ளேவில் விக்கெட் விழும்பொழுது எதிரணியின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பதற்காக அனுப்பப்பட்டார் இங்லீஸ்.. அதுமட்டுமின்றி ஷார்ட் பந்துகளைப் போட்டால் அதை ராக்கெட்டாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர்.. unorthodox shotகளை அசாத்தியமாக ஆடி, மைதானத்தின் எதிர்பாராத திசைகளில் எல்லாம் பவுண்டரிகளை அடுத்து ரன்களை சேர்க்கக்கூடியவர்.. இந்தத் திட்டம் கைமேல் பலன் கொடுத்தது. உலகமே பயப்படும் பும்ராவின் ஓவரில் இரு சிக்சர்கள் இரு பவுண்டரிகளை விளாசி 20 ரன்களை சேர்ப்பதெல்லாம் வேறு பேட்ஸ்மேனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று.

ஸ்டோனிஸ்

அதேபோல் ஸ்டொய்னிஸையும் சொல்ல வேண்டும்.. ஆரம்பத்தில் ரன்களை அடிக்கவே சிரமப்பட்டார்... வல்லுநர்கள் கூறியது என்னவெனில், ஸ்டொய்னிஸ் லக்னோவிற்காக கடந்த சீசனில் மூன்றாமிடத்தில் ஆடியவர்.. ஆஸ்திரேலிய அணிக்குக் கூட 5ஆம் இடத்தில்தான் களமிறங்கியிருந்தார். ஆனால், பஞ்சாப் அணியின் முற்றிலும் வேறான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது, அணியின் கடைசி பேட்டர்.. கிட்டத்தட்ட ஏழாவது இடம்.. கடந்த சில போட்டிகளில் அதாவது முக்கியமான நேரத்தில் தனக்கான பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மேக்ஸ்வெல் மற்றும் மார்கோ யன்சன் போனபின் பந்துவீச்சிலும் பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஸ்டொய்னிஸ்க்கு ஏற்பட்டிருக்கிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் விக்கெட்டை வீழ்த்தி அதற்கும் பதிலளித்திருந்தார்.

underatted மிடில் ஆர்டர்

2024 ஆம் ஆண்டு முதல் டெத் ஓவர்களில் மட்டும் 278 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 23 பவுண்டரிகளும், 17 சிக்சர்களும் அடக்கம்.. மிக முக்கியமாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.21.. இந்த ஆட்டம் மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்களை விட மிக அதிகம்...

எப்போதும் underattedஆக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகவே இருப்பார்கள்.. மிகச் சமீபத்திய உதாரணம் ஷஷாங் சிங் மற்றும் நெஹல் வதேரா... ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு தக்கவைக்கப்படுகிறார் என்றால் ஷஷாங் சிங்கின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2024 ஆம் ஆண்டு முதல் டெத் ஓவர்களில் மட்டும் 278 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 23 பவுண்டரிகளும், 17 சிக்சர்களும் அடக்கம்.. மிக முக்கியமாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.21.. இந்த ஆட்டம் மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்களை விட மிக அதிகம்... நெஹல் வதேரா.. கன்ஸிஸ்டெண்ட்டாக ரன்களை அடிக்கவில்லை என்றாலும், தேவைப்படும் நேரத்தில் அணி விக்கெட்களை இழந்து தத்தளிக்கும் சமயத்தில் எதிரணியை துவம்சம் செய்து ரன்களை சேர்க்கக்கூடிய வல்லமை படைத்தவர்...

விஜயகுமார் வைஷாக்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சும் அத்துனை சுலபமானதில்லை. இதுவரை 14 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருக்கிறது... தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.. உதாரணத்திற்கு குஜராத்திற்கு எதிராக ஆடுகையில், ரூதர்போர்ட் பேட்டிங் செய்யும்போது விஜயகுமார் வைஷாக்கைப் பயன்படுத்தியதைச் சொல்லலாம். அர்ஷ்தீப் சிங், மார்கோ யன்சன், சாஹல், ப்ரார் என அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்கள் 10 என்ற எகானமியைத் தாண்டவில்லை... மிக முக்கியமாக தேவைப்படும் நேரங்களிலெல்லாம் சரியாகப் பயன்படுத்தப்பட்டி இருக்கின்றனர்.

வாழ்த்துகள் ராக்ஸ்டார்

ஐபிஎல்லில் சூப்பர் ஸ்டார் ப்ளேயர்கள், அதிரடியான வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தேடித்தேடி ஏலத்தில் எடுக்கும் அணிகளுக்கு மத்தியில், அதிகமான இந்திய வீரர்கள் அதிலும் uncapped வீரர்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களை சூப்பர் ஸ்டார் ஆக்குவதெல்லாம் அசாத்தியமான ஒன்று... இந்த சீசனில் செவ்வனே செய்திருக்கிறது பஞ்சாப் அணி.. ப்ளே ஆஃப் என்றால் 100 அணி வீரர்களின் பலத்துடன் ஆடும் மும்பையை அசாத்தியமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைவதெல்லாம் சாதாரணமானதல்ல.. ஸ்ரேயாஸ் நீங்கள் மக்களின் கேப்டன்.., இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி கோப்பையை வென்றாலும் சரி, இழந்தாலும் சரி.. மக்களின் மனதில் இருக்கும் சிம்மாசனம் உங்களுக்குதான்.. வாழ்த்துகள் ராக்ஸ்டார்...