பயம் ஒன்னும் சும்மா வரல! நாங்க செஞ்ச சம்பவம் அப்படி!
சிவாஜி திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. தற்போதைய சூழலில் இந்த வசனம் பக்காவாக பொருந்தக்கூடிய அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ்... தொடரின் ஆரம்பத்தில் அவர்கள் தொடர்ச்சியாக தோற்று இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் வெகுண்டு எழும் திறன் அவர்களுக்கு இருந்தது. இதன் காரணமாகவே எதிரணி எப்போதும் அவர்களை அச்சத்துடனே அணுகியது.
நீங்கள் நினைத்துப்பாருங்கள்... எதிர்பாரா நேரத்தில் வெடிக்கக்கூடிய ரோகித் சர்மா, அச்சம் என்பதற்கு பெயரே தெரியாத சூர்யகுமார் யாதவ், தேவைப்படும்போதெல்லாம் விக்கெட் எடுத்துக்கொடுக்கும் பும்ரா, எதிரணியை கலங்கடிக்கும் போல்ட், சுழலில் சுக்கு நூறாக்கும் சாண்ட்னர் என அணியில் இருக்கும் அனைவரும் மேட்ச் வின்னர்களாக இருக்கும் சமயத்தில் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு என்ன கவலை இருக்கப்போகிறது.
தொடரின் பாதியில் ஒரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாம் பாதியில் ஆறுபோட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதெல்லாம் நடக்கிற கதையா? ஆனால், அதை செய்து காட்டக்கூடிய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். அணியின் ஒவ்வொரு வீரரும், இன்ச் பை இன்சாக வெற்றிகளை செதுக்கியிருக்கின்றனர்.
பும்ரா எனும் ஆயுதம்
பும்ராவும், போல்ட்டும் இணைந்து டெத் ஓவர் எகானமியை 11ல் இருந்து 9 ஆகக் குறைத்தனர். அதுமட்டுமின்றி பும்ராவின் வருகை மற்ற பந்துவீச்சாளர்களை அவர்களது துறையில் கவனம் செலுத்த உதவியது.
சீசனின் முதல் 4 போட்டிகளில் காயம் காரணமாக பும்ரா விளையாடவில்லை; மும்பை அணியின் பந்துவீச்சுத் துறை கண்ணாபின்னாவென இருந்தது. பவர்ப்ளே பவுலரான தீபக் சாஹர் டெத் ஓவர்களைப் போட்டார்... பேட்டிங், கேப்டன்சி தாண்டி பந்து வீச்சிலும் பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஹர்திக்கிற்கு எழுந்தது.. ஹர்திக் திறன்மிக்கவர்தான்.. விக்கெட்களையும் அதிகமாகவே எடுத்திருந்தார். ஆனால், வேலைப்பழு என்ற ஒன்று இருக்கிறதே? விளைவு, டெத் ஓவர் எகானமி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது.
4 போட்டிகளுக்குப் பிறகு பும்ரா வந்தார். காயம் அவருக்குப் புதிதல்ல; ஆனாலும், அணியின் தொடர் தோல்விகள் அவரை முழுவீச்சில் செயல்பட வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் கஷ்டப்பட்டார் என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் கியர் அடுத்தக்கட்டத்திற்கு மாறிக்கொண்டே இருந்தது. பும்ராவும், போல்ட்டும் இணைந்து டெத் ஓவர் எகானமியை 11ல் இருந்து 9 ஆகக் குறைத்தனர். அதுமட்டுமின்றி பும்ராவின் வருகை மற்ற பந்துவீச்சாளர்களை அவர்களது துறையில் கவனம் செலுத்த உதவியது. தீபக் சாஹர், போல்ட் இருவரும் பவர் ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தினர்.
சாண்ட்னர் எனும் தந்திரக்காரன்
மிடில் ஓவர்களுக்கு இருக்கவே இருக்கிறார் சாண்ட்னர்.. நீங்கள் அவரை தந்திரக்காரர் என்றாலும் சரி, அனுபவமிக்கவர் என்றாலும் சரி.. நான் அவரை the most underatted & underutilised என்கிறேன்.
2025 ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் பந்து வீச்சாளர்களை மாற்றாத ஒரே அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ்தான். எலிமினேட்டர் போட்டியில் கூட காயம் காரணமாகவே சாஹர் ஆடவில்லை. டெத் ஓவர்கள் அனுபவம் வாய்ந்த பும்ரா மற்றும் போல்ட் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. மிடில் ஓவர்களுக்கு இருக்கவே இருக்கிறார் சாண்ட்னர்.. நீங்கள் அவரை தந்திரக்காரர் என்றாலும் சரி, அனுபவமிக்கவர் என்றாலும் சரி.. நான் அவரை the most underatted & underutilised என்கிறேன். உதாரணத்திற்கு டெல்லிக்கு எதிரான போட்டியைச் சொல்லலாம். 11 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 16 டாட் பந்துகள்.. வான்கடே மைதானத்தில் இத்தனை சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது சாண்ட்னர்தான். தற்போதைய சூழலில் மற்ற எந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றாலும் சாண்ட்னர் ஒரு படி மேலானவர். CSK அணியிலும் சாண்ட்னர் ஆடியிருக்கிறார்.. ப்ளேயர்களின் திறன்களை கண்டெடுப்பதில் வல்லமை கொண்டவரான தோனி சாண்ட்னர் விஷயத்தில் மட்டும் எப்படித் தவறினார் என்பது மில்லியன் டாலர் கேள்வி...
இடது கை பேட்ஸ்மேன் என்றால் வில் ஜாக்ஸ் வந்துவிடுவார்.. கண்டெடுத்த முத்துகளாக அஸ்வனி குமாரும், விக்னேஷ் புத்தூரும் இருந்தனர். மொத்தமாக சொல்லவேண்டுமென்றால் அணியின் பந்துவீச்சு அதிவேகமாக அதேசமயத்தில் அதிசிறப்பாக செயல்படக்கூடிய ஒரு இன்ஜினாக இருக்கிறது..
சாஹர், பும்ரா, போல்ட், ஹர்திக், சாண்ட்னர் இவர்களே அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள்.. இவர்களில் யாருடைய எகானமியும் 10ஐத் தாண்டவில்லை என்பது, எத்தனை சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
மீட்பராக சூர்யகுமார் யாதவ்
அடுத்தது மும்பை அணியின் பேட்டிங்... ஆரம்பத்தில் ரோகித்தின் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அவரது ரன்கள் போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை ஒத்திருந்ததாக கிண்டல்களும் செய்யப்பட்டன.. ஆனால், Form is temporary, class is permanent என்பதை ரோகித் நிரூபித்திருக்கிறார். இதுவரை 4 அரைசதங்கள். அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் ஸ்கோரர். ரோகித் ஆரம்பத்தில் ரன்களை அடிக்க சிரமப்பட்டபோதெல்லாம் அணியின் அழுத்தத்தையும் ரோகித்தின் அழுத்தத்தையும் ஒருசேரக் குறைத்தவர் ரிக்கல்டன்.. அவரும் ஆரம்பத்தில் தடுமாறினார் என்றாலும்கூட, பவர்ப்ளேவில் எவ்வளவு அதிகமாக ரன்களைச் சேர்க்க முடியுமோ அத்துனை விரைவாக ரன்களைச் சேர்த்துக்கொடுத்தார். இப்போது பேர்ஸ்டோ அந்த பாத்திரத்தை இன்னும் அதிரடியாக மேற்கொண்டிருக்கிறார்.
மூன்றாடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ்... இதற்கு முன்பு நாம் பார்த்த சூர்யகுமாருக்கும் இப்போது நாம் பார்க்கும் சூர்யகுமாருக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது. அவர் இறங்கினால் ஆரம்பத்திலிருந்தே அதிரடி இருக்கும்.. அவரது இன்னிங்ஸில் சிக்சர்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், இந்த சீசனில் அதிரடியைக் குறைத்து நிதானத்தைக் கைகொண்டுள்ளார்.. உதாரணத்திற்கு டெல்லிக்கு எதிரானப் போட்டியைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விக்கெட்களைப் பறிகொடுத்து மும்பை அணி தத்தளித்துக்கொண்டிருந்தது. சூர்யகுமார் தவிர வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் தடுமாறிக்கொண்டிருந்தனர். முதல் இருபது பந்துகளுக்கு பந்துக்கு ஒரு ரன் என எடுத்துக்கொண்டிருந்த அவர், இறுதிக்கட்டத்தில் அதாவது தேவையான நேரத்தில் அதிரடியாக ஆடி 73 ரன்களைக் குவித்தார். இம்மாதிரி, தொடர் முழுவதிலும் இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேக்ஸிமைஸ் புரோ நமன்திர்
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் லைன் அப்பில் திலக் வர்மா மட்டுமே தடுமாறியுள்ளார். அவர் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது மூன்றாமிடத்தில் ஆடும்போது. ஆனால், இந்த தொடரில் நான்கு மற்றும் ஐந்தாமிடத்தில் ஆடினார். இதற்கிடையே வில் ஜாக்ஸை மூன்றாமிடத்தில் களமிறக்கி சோதித்துப் பார்த்தது மும்பை அணி. திலக்கின் ஃபார்ம் அவுட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பார்வையும் உள்ளது. அதேசமயத்தில் சூர்யகுமார் மாதிரியான பேட்டர் அதிகமான பந்துகளை ஆட வேண்டுமென சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், திலக்கும் சூர்யாவும் இணைந்து சில போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக நாம் குறிப்பிட வேண்டிய நபர் நமன் திர்.. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே எப்போதும் விவாதிக்கப்படும் நபர்களாக இருப்பார்கள். இதை சந்தர்பால் காலத்திலிருந்தே நாம் பார்த்து வருகிறோம். இந்த சீசனிலும் ஷஷாங் சிங், நமன் திர் போன்ற வீரர்கள் அதிகம் பேசப்படாமல் போயிருக்கின்றனர்.. மிக முக்கியமாக நமன் திர். பொல்லார்டுக்கு மாற்றான வீரராக கண்டெடுக்கப்பட்டு, இறுதி ஓவர்களை மேக்ஸிமைஸ் செய்வதற்காகவே தயார் படுத்தப்பட்டவர். சுருக்கமாக டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்..
ஹர்திக்......
ஹர்திக்கிற்கு முன்னால் நமன் திர்ரை அனுப்பலாம் என்ற விவாதம் எழும் அளவிற்கு நமன் திர் ஃபார்ம் உள்ளது. ஏனெனில், ஹர்திக் அவரது ஆரம்பக்கட்டங்களில் பெரும்பாலும் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்யக்கூடிய நபராக இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஆன பின் மிடில் ஓவர் பேட்ஸ்மேனாக புதிய பாத்திரத்தை ஏற்றார். மும்பை அணிக்கு வந்த பின்னும் அதுவே தொடர்கிறது. இதன் காரணமாக டெத் ஓவர்களில் அவரது சிக்சர் அடிக்கும் திறன் குறைந்துள்ளதாக ஒரு பார்வை உள்ளது. இந்த சீசனில் ப்ளேஆஃப்க்கு முன் ஹர்திக் 7 போட்டிகளில் டெத் ஓவர்களை ஆடியிருக்கிறார். 39 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 11 பவுண்டரிகளை அடித்திருந்தாலும், 5 முறை விக்கெட்களை பறிகொடுத்துள்ளார். அதிலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது சராசரி 15 ஆகவே உள்ளது. கடந்த மூன்று சீசன்களில் டெத் ஓவர்களில் ஹர்திக்கின் சராசரி 172.31. அதில் 23 பவுண்டரிகளையும் 16 சிக்சர்களையும் அடித்து 12 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆனால், ஷஷாங் சிங்கின் சராசரி 212.31.. 23 பவுண்டரிகளை அடித்து 17 சிக்சர்களையும் விளாசியுள்ளார். இந்த இடத்தில்தான் நமன் திர் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற பார்வை இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் அபாரமான ஒன்று.. தேவைப்படும் நேரத்தில் எதிரணியை சுக்கு நூறாகும் திறன் கொண்டது.... அடுத்த சுற்றில் மும்பை அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.. பேட்டிங்கில் சமமான அணி என்றாலும் கூட பந்துவீச்சில் ஒரு புள்ளி முன்னாலிருக்கிறது மும்பை.. இதே வேகத்தில் சென்றால் ஆறாவது கோப்பையை மும்பை பேரில் எழுத வேண்டியதுதான்,.