இவரு பேரு ‘விப்ராஜ் நிகம்’.. 20 வயசுதான்.. பையன் கில்லி..
ஐபிஎல் கிரிக்கெட்டில் 210 ரன்கள் என்பது இமாலய இலக்குதான். அதிலும், 7 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்திருந்த ஒரு அணிக்கு எப்படி இருக்கும். அந்த இடத்திலிருந்துதான் தனது ஆட்டத்தினைத் தொடங்கியது டெல்லி கேப்பிடல்ஸ். அணியின் முக்கியமான மூன்று பேட்ஸ்மேன்கள் வீழ்ந்த பிறகு களத்திற்கு வந்தார் அக்ஸர். தொடக்க ஆட்டக்காரரான டுப்ளசிஸ் உடன் இணைந்து இலக்கினை நோக்கிய பாதையை சற்றேறக்குறைய ‘செட்’ செய்து கொடுத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. இதனால் வெற்றி என்பதோ லக்னோ அணிக்கு எட்டாத உயரத்தில் இருந்தது.
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டெப்ஸ் 34 ரன்களுக்கு வெளியேறியதும், டெல்லி அணியின் ரசிகர்கள் மைதானத்தை விட்டே வெளியேறிவிடலாமா என்றுகூட யோசித்திருப்பர். ஆனால், நம்பிக்கையையும் கொடுத்து வெற்றியையும் உறுதி செய்து கொடுத்திருக்கிறார் விப்ராக் நிகம்.
பயமற்றவர்
கைமீறிப் போகக்கூடிய ஒரு விஷயத்தை, நம் செயலால் மாற்ற முடிந்தால் அதைவிட கொண்டாடக்கூடிய தருணம் வேறு என்னவாக இருக்கப்போகிறது. இன்றைய டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதிய போட்டியில் அதுதான் நடந்தது. மொத்தமாக லக்னோ வசம் இருந்த போட்டியை இரும்புச் சங்கிலி கொண்டு இழுத்துக்கொண்டு வந்தார் 20 வயது இளைஞர் விப்ராஜ் நிகம். ஆல் ரவுண்டர். குறிப்பாக, லெக் ஸ்பின்னர். இடையிடையே பேட்டிங் கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடக்கூடிய இளைஞர். இன்றைக்கும் அதுதான் நடந்தது. கிட்டத்தட்ட 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 260 ஸ்ட்ரைக் ரேட்டில் 39 ரன்களை எடுத்திருக்கிறார் விப்ராஜ் நிகம்.
விப்ராஜ் குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், “19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது வரை விப்ராஜ் பேட்ஸ்மேனாகவே இருந்தார். பின்னர், படிப்படியாக லெக்-ஸ்பின் வீசத் தொடங்கினார். அவரது பேட்டிங் குறித்து அவருக்கு ஆழமான புரிதல் உள்ளது. அவர் நல்ல ஸ்ட்ரோக்குகளை விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன் - அவர் எப்போதும் பயமற்றவர், பெரிய ஷாட்டுகளுக்கு செல்ல தயங்கமாட்டார். அவர் தனது பந்துவீச்சில் கடுமையாக உழைத்து வருகிறார், பந்தை நன்றாகச் சுழலச் செய்கிறார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செயல்பாடுகள் எப்படி?
2004 ஆம் ஆண்டு பிறந்த விப்ராஜ் நிகம் உத்தரபிரதேச அணிக்காக விளையாடியவர். உத்தரபிரதேச டி20 லீக்கில் சிறப்பாக செயல்பட்டார். மொத்தமாக மூன்று முதல்தர போட்டிகள், ஐந்து லிஸ்ட் ஏ போட்டிகள், ஏழு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியவர்.
2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு டெல்லி அணியால் ரூ.50 லட்சத்திற்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவ்வப்போது, அணிக்குத் தேவைப்படும் பட்சத்தில் பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய விப்ராஜ் நிகாமின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 156.09.
2023 ஆண்டு UPT20 லீக்கில் ஒரே ஓவரில் 28 ரன்களை எடுத்தவர். அதேபோல் 11 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தொடரின் இரண்டவது அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்,.
நம்பிக்கைக்கு நியாயம்
சையத் முஷ்தாக் அலி டிராபியில் ரிங்கு சிங்குடன் சேர்ந்து 8 பந்துகளில் 27* ரன்களை எடுத்துள்ளார். அணி 109க்கு 6 விக்கெட்களை இழந்து திணறியபோது, அழுத்தமான சூழலில் களத்திற்கு வந்திருந்தாலும்கூட, அசராமல் 2 சிக்சர்கள் மூன்று பவுண்டரிகளை விளாசி 337.50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும்., அதே ஆண்டு நடந்த வேறொரு போட்டியில் எட்டாவது இடத்தில் களமிறங்கி 29 பந்துகளில் 48 ரன்களைக் குவித்தவர்.
இத்தகைய சூழலில்தான் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக களமிறங்கினார் விப்ராஜ். முதல்போட்டி. ஆனால், அணி நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நியாயம் சேர்த்த அவர், ஐபிஎல்லில் தனது முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார். அவரது இரண்டாவது ஓவரில் நிக்கோலஸ் பூரனும் வெளியேறி இருப்பார். கைமேல் வந்த கேட்சை சமீர் ரிஸ்வி தவற விட அந்த விக்கெட் வாய்ப்பு பறிபோனது. எது எப்படி இருந்தாலும், தனது பேட்டை சுழற்றிய நிகம் மறக்க முடியாத ஆட்டத்தை ஆடிச்சென்றுள்ளார்.