Sai Sudarshan
Sai Sudarshanpt web

சாய் சுதர்சன் ஏன் குஜராத் டைட்டன்ஸ்-க்கும், இந்திய அணிக்கும் தேவை?

அதிரடி மட்டுமே உருவான நவீன டி20 கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன்.
Published on

அதிரடி மட்டுமே உருவான நவீன டி20 கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன். ஃபேன்ஸி ஷாட்ஸ் ஆடுவதில்லை, களத்திற்கு வந்ததும் கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுழற்றுவதில்லை, பந்துவீச்சாளரை ஏமாற்றி விக்கெட் கீப்பரது தலைக்கு மேல் அடிக்கிறேன் என்று விக்கெட்டில் விழுந்து புரளுவதுமில்லை. எப்போதும் நிதானம்தான். அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கு ஏதுவான சூழலை அமைத்துக் கொடுப்பதிலும், எதிரணியின் பந்துவீச்சை டாமினேட் செய்வதிலும் சாய் சுதர்சனுக்கு நிகர் அவர் மட்டும்தான்.

குஜராத் அணி 2022
குஜராத் அணி 2022

குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் அறிமுகமான 2022 ஆம் ஆண்டு முதலே சாய் சுதர்சனும் அந்த அணியில் இருந்து வருகிறார். ஆனால், முதல் சீசன் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றாலும், சாய் சுதர்சனுக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஆண்டாக அமையவில்லை. எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம். அந்த ஆண்டில் 5 போட்டிகளில் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மொத்தமாக 145 ரன்கள் எடுத்திருந்தார். அப்போதைய அவரது சராசரி 36.25..

தேவைப்படும்போது மாறும் கியர்

2023 ஆம் ஆண்டும் வலுவான அணியுடன்தான் குஜராத் அணி களமிறங்கியது. ஆனால், சென்னைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்து தொடரிலிருந்தே விலகினார். அவருக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு சாய் சுதர்சனுக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினை கச்சிதமாகப் பயன்படுத்தினார் சாய் சுதர்சன். அந்த தொடரில் மொத்தமாக 8 போட்டிகளில் களமிறங்கி 362 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 51.71 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 141.40 ஆகவும் இருந்தது.

கன்ஸிஸ்டென்சி இருந்தாலும் நவீன டி20 உலகில் சாய் சுதர்சன் ஆட்டம் எடுபடுமா என்ற கேள்வி அப்போதும் எழுந்தது. இதுதொடர்பான ஒரு கேள்விக்கும் மிகவும் நிதானமாக பதிலளித்தார் சாய். “நான் என்னுடைய ஆட்டத்தை மாற்ற வேண்டும் என நினைக்கவில்லை. சூழலுக்கு ஏற்றதுபோல் விளையாடுகிறேன். அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்ய வேண்டுமென்ற தேவை ஏற்படுகிற பொழுது அதையும் எதிர்கொள்கிறேன்” என பதிலளித்தார்.

காயம் காரணமாக கிடைத்த ப்ரமோஷன்

2024 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றிருந்தார். குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். முதல் 6 போட்டிகளில் 255 ரன்களைக் குவித்த கில், அடுத்த 5 போட்டிகளில் 67 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹாவிற்கு அந்த சீசன் முழுவதுமே சரியாக அமையவில்லை. அந்த சீசனில் குஜராத் அணியின் பவர்ப்ளே ரன்ரேட் 7.23 ஆக இருந்தது. இது பவர்ப்ளேவில் மிகக்குறைந்த ரன்ரேட்டாக அமைந்தது. கடந்த இரு சீசன்களில் குஜராத் அணிக்கு பலமாக அமைந்த எதுவும் கடந்த சீசனில் கிடைக்கவில்லை. உதாரணமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஹர்திக், ராகுல் தெவாட்டியா, மில்லர் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தனர். கடந்த சீசனில் பல வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியிருந்த நிலையில், அணியிலிருந்த பல வீரர்கள் ஃபார்மில் இல்லாமலும் இருந்தனர்.. ஆனால், சாய் சுதர்சனுக்கு 2024 நல்ல சீசனாகவே அமைந்தது.

சஹா
சஹா

அதுவரை நம்பர் 3ல் ஆடிக்கொண்டிருந்த சாய் தொடக்க ஆட்டக்காரர் சஹா காயம் காரணமாக வெளியேறியதால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம்கண்டார். மொத்தம் 12 இன்னிங்ஸ்களில் 527 ரன்களை எடுத்திருந்தார். அந்த சீசனில் குஜராத் அணிக்காக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் அது அமைந்தது. அப்போதே 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் மற்றும் கில் இருக்கப்போகின்றனர் என்பது உறுதியானது.

சாய் சுதர்சன் ஏன் குஜராத் அணிக்கு முக்கியம்?

சாய் சுதர்சன் ஏன் குஜராத் அணிக்கு முக்கியம்? சாய் சுதர்சனுக்கு நிகரான ஒரு வீரர் குஜராத் அணியில் இல்லை என்பது மிக முக்கிய காரணம். அவர் ஒரு போட்டியில் ஆடவில்லை என்றால் கூட, குஜராத் அணி குறுகிய இன்னிங்ஸ் ஆடும் கேமியோ பேட்ஸ்மேனுக்குத்தான் செல்லும். அப்படிச் சென்றால் குஜராத் அணியின் ஒட்டுமொத்த செயல்திறனும் மாறும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து. ஏனெனில், குஜராத் அணிக்கு மிடில் ஆர்டர் கடந்த சீசனில் அமைந்ததுபோல் இல்லை. அதுமட்டுமின்றி, குஜராத் அணியின் தற்போதைய மிடில் ஆர்டர் தற்போது வரை அண்டெஸ்டட் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தொடக்க ஆட்டக்காரர்களான சாய் மற்றும் கில் என இருவரும் பட்லரைச் சார்ந்து இருப்பதும், பட்லர் மற்ற இருவரை சார்ந்து இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்ipl

இந்த சீசனில் சாய் சுதர்சன் 504 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். பட்லர் 470 ரன்களையும், கில் 465 ரன்களையும், ரூதர்ஃபோர்ட் 201 ரன்களையும் எடுத்திருக்கின்றனர். மற்றபடி, பிற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் 100 ரன்களைத் தாண்டவில்லை. அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் முக்கியமானது.

கில் மற்றும் சாய் சுதர்சனது பார்ட்னர்ஷிப் வெற்றிகரமாக இருப்பதற்கு இடது - வலது ஜோடியாக இருப்பதும் ஒரு காரணம். அதுமட்டுமின்றி தற்போதைய சீசனில் மிகக் குறைந்த டாட் பந்துகளை வைத்த அணிகளில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதனால் பந்துவீசும் அணி தொடர்ந்து ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

Anchor innings = சாய் சுதர்சன்

மற்ற டீம்களில் எல்லாம் Anchor innings ஆடும் ஆட்டக்காரர்கள் இல்லையா? சாய் மட்டும் என்ன ஸ்பெஷல் என்ற கேள்வி எழலாம். இங்குதான் கன்ஸிஸ்டெண்ட்சி முக்கியத்துவம் பெறுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட இன்னிங்ஸில் ஆடியுள்ள சாய் மொத்தமாகவே 2 முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளார். தற்போதைய டி20 கிரிக்கெட்டில் Anchor innings ஆடுபவர்கள் வேகமாக வெளியேறிவிட்டால் அந்த அணி மொத்தமாகவே சரிந்துவிடும் அபாயம் அதிகம். ஆனால், குஜராத் அணிக்கு அந்த பயம் இல்லை. ஏனெனில், சாய் அத்துனை சீக்கிரம் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க மாட்டார். நின்று ஆட வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் அவரை வெளியேற்றுவது மிகவும் கடினம். ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் சாய் தொடர்பாகப் பேசுகையில், “He is a beauty.. அவரால் எந்த சூழ்நிலையிலும் விளையாட முடியும். அழுத்தத்தை உள்வாங்கிக் கொண்டு ஆடமுடியும்” எனத் தெரிவிக்கிறார்.

சாய் சுதர்சன், சுப்மன் கில்
சாய் சுதர்சன், சுப்மன் கில்

தன்னைச் சுற்றிலும் அதிரடியாக சிக்சர்கள் அடிக்கும் வீரர்கள் இருந்தாலும் சரியான ப்ளேஸ்மெண்ட் மூலம் எப்போதும் ஸ்கோர் செய்து வருகிறார் சாய். அவர் ஒரு இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் அடித்தார் என்றால், 8 பவுண்டரிகள் சரியான இடத்தில், சரியான டைமிங்கில் அடிக்கப்பட்டவையாக இருக்கும். சாய் சுதர்சன் ஷாட் செலக்சன் குறித்துப் பேசிய எம்.எஸ்.கே. பிரசாத், “சாய் ஆட்டத்தின் சூழலை நன்றாக உணர்ந்து விக்கெட்டின் இருபுறமும் ஷாட்களை ஆடுகிறார். ஸ்ட்ரைக் ரேட்டிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். முன்பு அவர் 140ல் ஆடிக்கொண்டிருந்தால், தற்போது 150ஐச் சுற்றி ஆடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

சாய் அனைத்து சூழலிலும் ஆடுவதற்கு முக்கியக் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்வது, அவர் தனது பயிற்சியின்போது உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறார் என்பது. சிராஜ், ரபாடா, கோட்ஸே, ரஷித் கான், சாய் கிஷோர், ப்ரஷித் கிருஷ்ணா என அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனைவரும் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும்போது, அவர்களை எதிர்த்து ஆடி பயிற்சி பெறும் வீரர் எப்படி ஆடுவார் என்பது சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இதுதொடர்பாக அவரே கருத்து தெரிவித்துள்ளார். “எனது டி20 பேட்டிங்கை மேம்படுத்தியதற்கு முக்கிய காரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருக்கும் சர்வதேச பந்துவீச்சாளர்களிடம் நான் பயிற்சி பெறுவதுதான்” எனத் தெரிவிக்கிறார்.

கற்றுக்கொள்வதில் ஆர்வம்

சாய் சுதர்சனை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவரது ஆட்டத்தின் போக்கு குறித்த விழிப்புணர்வும், ஆட்டத்தைத் தீர்மானிக்கும் திறனும்தான். மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் களத்திற்கு வந்ததும் அதிரடி காட்டாமல் ஆடுகளத்தின் தன்மையையும் ஆட்டத்தின் போக்கையும் மதிப்பிட்டு தனது ஆட்டத்தினை அமைத்துக்கொள்கிறார். விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நின்று நிதானமாகவும், அதேசமயத்தில் வேகத்தையும் குறைக்காமல் ஆடுவார். அதோடு சாய் சுதர்சனால் எப்போது வேண்டுமானாலும் தனது கியரை மாற்ற முடியும். இதுதொடர்பாக சமீபத்தில் போட்டியொன்று முடிந்த பின் பேசிய அவர், “விக்கெட் முதலில் சற்று கடினமாக இருந்தது. அதனால், முதலில் சற்று நேரம் எடுத்துக்கொண்டேன். பவர்ப்ளே முடிந்ததும் அதிரடியாக ஆட வேண்டுமென நினைத்தேன். ஆடிவிட்டேன்” எனத் தெரிவிக்கிறார். வேறொரு போட்டியில், “கடந்த போட்டியில் என்ன நடந்தது என்பது முக்கியம் கிடையாது. அடுத்த போட்டி யாருடன், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்தால் அணி வெற்றி பெறும், அதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்கிறார்.

கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பதும் அவரது ஆட்டத்திற்கு முக்கியக் காரணம்... அவரது எந்த நேர்காணலைப் பார்த்தாலும் எதாவது ஒரு வீரரிடமிருந்தோ அல்லது பயிற்சியாளரிடமிருந்தோ குறிப்பிடத்தக்க ஒன்றை கற்றுக்கொண்டேன் என தெரிவிப்பார். சமீபத்தில் முரளிவிஜயை குறிப்பிட்டுப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. சாய் சுதர்சனின் கவனிக்கும் திறனையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் பல முன்னணி வீரர்கள் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.

எத்தனை அதிரடி ஆட்டக்காரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்தாலும், பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் சாய் சுதர்சன்தான் எதிர்கால இந்திய அணியின் தூண் என்கின்றனர். உதாரணத்திற்கு குஜராத் அணியின் பட்லர், “சாய் சுதர்சனை முதன்முறையாக (அவர் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது) பார்த்தபோதே வியந்துபோனேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நிரூபித்துக் காட்டிய சாய்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சத்தமில்லாமல் ஜொலித்துவரும் சாய், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். உதாரணத்திற்கு, 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதிகபட்ச ரன்களை எடுத்த (1307) இரண்டாவது வீரராக சாய் உள்ளார். இப்படி ஏராளம் உள்ளன.

இத்தனை விஷயங்கள் சேர்ந்துதான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவரை தேர்வு செய்து அனுப்ப வேண்டுமென்று பலரையும் குரல்கொடுக்க வைத்துள்ளது. இங்கிலாந்து மாதிரியான ஆடுகளங்களில் சதமடிப்பது என்பது ஒரு பேட்டர் முழுமையான வீரராக மாறிவிட்டார் என்பதற்கான அறிகுறி. ஏனெனில், அந்த ஆடுகளங்களில் ஆட அதிகமான Foot work மற்றும் டெக்னிக்கள் தேவை. அதுமட்டுமின்றி ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள வேண்டுமென்பதும் மிக முக்கியமான காரணம். அதுமட்டுமின்றி சாய் கவுண்டி கிரிக்கெட்டையும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில்தான், சாய் சுதர்சனை ரவி சாஸ்திரி அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் ஏற்ற வீரர் என்கிறார்.

சாய் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். ஆனால், எதிர்கால இந்திய அணிக்கான முக்கியமான வீரர் சாய் சுதர்சன் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, fancy shotகள், அதிரடிகள் ஏதுமின்றி டெக்னிக்கலாக சரியாக ஆடும் பேட்ஸ்மேன்கள் டி20 போட்டிகளில் வெற்றிகரமாக இருக்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல் மேட்ச் வின்னராகவும் இருக்கலாம் என்பதை அமைதியாக நிரூபித்துக் காட்டியுள்ளார் சாய் சுதர்சன்,.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com