’மும்பையை வேட்டையாடிய ஸ்ரேயாஸ்..’ தகர்ந்தது 18 வருட சாதனை! 11 ஆண்டுக்கு பின் FINAL சென்றது பஞ்சாப்!
11 முறை பிளேஆஃப் 6 ஃபைனல் 5 கோப்பை என 18 வருடங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டையே ஆண்டுவரும் மும்பை இந்தியன்ஸ் என்னும் பல்தான்ஸ் படையை வீழ்த்தி, 17 வருடம் கோப்பை வெல்லாத ஒரு அணி ஃபைனலுக்கு முன்னேறுகிறது என்றால் கண்களில் கண்ணீர் வரத்தானே செய்யும்.
ஒரு வீரன் தன் தேசத்திற்காக மலைபோல் ரன்களை குவித்தபோதும், ஒரு அணிக்காக ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்றுகொடுக்காத போதும், செல்லும் இடத்திலெல்லாம் அவனுக்கான உரிய அங்கீகாரம் மறுக்கப்படும் போதும், சற்றும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறான் என்றால் கண்களில் கண்ணீர் வரத்தானே செய்யும்.
பஞ்சாப் கிங்ஸ் என்ற அணிக்கும், ஸ்ரேயாஸ் என்ற ஆகச்சிறந்த வீரனுக்கும் 2025 ஐபிஎல் தொடரானது ஒரு மகுடமாக வந்துசேர்ந்துள்ளது. 11 வருடங்களாக பிளேஆஃப் கூட வராத ஒரு அணியை வழிநடத்தி, ஐபிஎல் இறுதிப்போட்டிவரை கொண்டு சேர்த்த பெருமை ஸ்ரேயாஸ் ஐயர் என்ற தலைசிறந்த வீரன், இல்லை இல்லை தலைசிறந்த கேப்டனுக்கே சேரும்.
ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வியின் போது ‘நாங்கள் சண்டையில் தான் தோற்றுள்ளோம், போரை அல்ல’ என்று கெத்தாக கூறிய ஸ்ரேயாஸ் ஐயர், அதே கெத்தோடு தன்னுடைய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
18வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஆர்சிபி தகுதிபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு அணி யார் என்ற மோதலில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
203 ரன்கள் அடித்த மும்பை..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நீண்ட நேரத்திற்கு பின்னரே தொடங்கப்பட்டது.
விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்களை குவித்தது. தொடக்கவீரராக களமிறங்கிய ரோகித் சர்மா பஞ்சாப் அணி அவரின் கேட்ச்சை தவறவிட்ட போதும், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் 8 ரன்னில் நடையை கட்டினார். விரைவாகவே முதல் விக்கெட்டை இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய பேர்ஸ்டோ செம்ம டச்சில் தெரிய, மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் சரியான நேரத்தில் ஒரு தரமான பந்தை வீசிய வைஷாக், பேர்ஸ்டோவை 38 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.
ஒரு பக்கம் பேர்ஸ்டோ ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொள்ள, அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு ஸ்கோரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றனர். ஆனால் அடுத்தடுத்த ஓவரில் சூர்யா மற்றும் திலக் வர்மா இருவரும் அவுட்டாகி வெளியேற, களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் 220 ரன்களை மும்பை எட்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், ரன்வேகம் குறைந்தது. ஆனால் இறுதியாக வந்து தனியொரு ஆளாக போராடிய நமன் திர் 7 பவுண்டரிகளை பறக்கவிட 20 ஓவரில் 203 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது பஞ்சாப்!
200 ரன்களை அடித்துவிட்டால் ஒருமுறை கூட மும்பை தோற்றதில்லை என்ற சாதனை இருக்கும்நிலையில், மும்பை இந்தியன்ஸ் தான் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறது என மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் ‘இதோ இப்போ கிளியர் பண்ணிடுவோம்’ என அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி கலக்கிப்போட்டது.
204 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பிரியான்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட, பும்ரா வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட இங்கிலீஸ் 20 ரன்களை விளாசினார். லீக் போட்டியில் மும்பையை கதறவிட்ட பிரியான்ஸ் ஆர்யா 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என அச்சுறுத்தும் பேட்டிங் ஆட, ஒரு அற்புதமான டெலிவரி மூலம் 20 ரன்னில் அவுட்டாக்கிய அஷ்வனி குமார் மிரட்டிவிட்டார்.
ஆனால் யார் போன என்ன? என் வேலை அடிச்சி நொறுக்குறது மட்டும்தான் என 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த இங்கிலீஸை, 38 ரன்னில் அவுட்டாக்கி வெளியேற்றிய ஹர்திக் பாண்டியா பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
’ஒரு பெரிய கண்டம் ஒழிஞ்சது’ என்ற மன நிறைவில் மும்பை அணி இருக்க, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வதேரா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு பல்தான்ஸ் படையை பந்தாடினர். முதலில் மெதுவாக தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பின்னர் டாப்ளே வீசிய ஒரேஓவரில் 3 சிச்கர்களை பறக்கவிட்டு அதிரடிக்கு திரும்பினார். மறுமுனையில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மும்பை பவுலர்களுக்கு டஃப் கொடுத்த நேஹல் வதேரா 29 பந்தில் 48 ரன்கள் அடித்து வெளியேறினார்.
கடைசிவரை அவுட்டாகாமல் களத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சிறந்த பவுலிங் யூனிட்டை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 8 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து ரன்வேட்டை நடத்தினார். 41 பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் அடிக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இதன்மூலம் 5 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணியான மும்பையை வீழ்த்தி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது பஞ்சாப் அணி.
ஒரே கேப்டனாக ஸ்ரேயாஸ் வரலாறு..
200 ரன்களை கடந்தால் தோற்றதே இல்லையென்ற 18 வருட மும்பை அணியின் சாதனையை சுக்குநூறாக்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதுமட்டுமில்லாமல் கடந்த 11 வருடங்களாக அகமதாபாத் மைதானத்தில் வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையை தொடர்கிறது மும்பை அணி.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திய ஒரே கேப்டனாக பிரமாண்ட சாதனை படைத்தார் ஸ்ரேயாஷ் ஐயர்.
2014-க்கு பிறகு 11 வருடங்கள் கழித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, கோப்பைக்கான ஃபைனலில் ஆர்சிபி அணியை எதிர்கொண்டுவிளையாடவிருக்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத இரண்டு அணிகள், கோப்பைக்கான யுத்தத்தை நடத்தவிருக்கின்றன. யார் கையில் கோப்பை சென்று சேரப்போகிறது, 17 வருட கோப்பை இல்லாத வலியை யார் சரிகட்டப்போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.