இந்தியாவிற்கு எதிராக அசத்திய டேரில் மிட்செல் cricinfo
கிரிக்கெட்

5 போட்டிகளில் 2 சதம், 2 அரைசதம்.. இந்தியாவிற்காக எதிராக மிரட்டிய டேரில் மிட்செல்!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 300 ரன்கள் குவித்துள்ளது நியூசிலாந்து அணி..

Rishan Vengai

நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல், இந்தியாவிற்கு எதிராக கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடித்து மிரட்டியுள்ளார். 51 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 53 சராசரியுடன் விளையாடி, மைக்கேல் பவன், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தில் முன்னேறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா - நியூசிலாந்து

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதரா மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 300 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

அசத்திய டேரில் மிட்செல்..

பரபரப்பாக தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர்.

இந்திய அணி - ஹர்ஷித் ராணா

மிகப்பெரிய டோட்டலை நோக்கி நியூசிலாந்து அடித்தளமிட சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா அடுத்தடுத்து இரண்டு தொடக்க வீரர்களையும் 56, 62 ரன்களில் வெளியேற்றி அசத்தினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார். 3 நியூசிலாந்து வீரர்களின் அரைசதத்தின் உதவியால் 50 ஓவரில் 300 ரன்களை குவித்தது நியூசிலாந்து.

டேரில் மிட்செல்

டேரில் மிட்செல் இந்தியாவிற்கு எதிரான கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 130, 134, 17, 63, 84 என இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்து மிரட்டியுள்ளார். மேலும் 51 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் அவருடைய சராசரி 53ஆக இருக்கிறது. இதன்மூலம் முதல் 50 ஒருநாள் இன்னிங்ஸில் அதிக சராசரி வைத்திருந்த வீரர்கள் பட்டியலில் மைக்கேல் பவன், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் மிட்செல். முதலிரண்டு இடத்தில் விராட் கோலி (58 சராசரி) மற்றும் சுப்மன் கில் (56 சராசரி) நீடிக்கின்றனர்.