Milestone| சர்பராஸ் கான் 15 பந்தில் அரைசதம்.. 1 ரன்னில் மும்பை தோல்வி!
விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான், 15 பந்தில் அரைசதமடித்து சாதனை படைத்தார். ஆனால், மும்பை அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியின் மயங்க் மார்கண்டே மற்றும் குர்னூர் ப்ரார் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை தடுக்க உதவினர்.
நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், ராமகிருஷ்ண கோஷ் முதலிய வீரர்கள் தங்களுடைய பிரைம் ஃபார்மில் ஜொலித்து வருகின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார். அதேபோல 48வது மற்றும் 50வது ஓவர்கள் என டெத் ஓவர்களில் மெய்டனாக வீசி ராமகிருஷ்ண கோஷ் அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதமடித்த இந்திய வீரராக மாறி சாதனை படைத்தார் சர்பராஸ் கான்.
15 பந்தில் அரைசதமடித்து சாதனை..
நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 45.1 ஓவரில் 216 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது.
217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், 3வது வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் சிக்சர் பவுண்டரிகள் என துவம்சம் செய்து 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய சாதனை 16 பந்துகளில் அடிக்கப்பட்டதாக இருந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய சர்பராஸ் கான் 20 பந்தில் 310 ஸ்ட்ரைக்ரேட் உடன் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 62 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆனால் அவருக்கு பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் தாமோர் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியானதால் வெற்றிபெற வேண்டிய போட்டியை 1 ரன்னில் தவறவிட்டது மும்பை அணி.
பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீசிய லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தை தலைகீழாக மாற்றினர். லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

