தரமான த்ரில்லர் போட்டி.. கடைசி 4 பந்தில் 18 ரன்கள் தேவை.. RCB வீராங்கனை செய்த மேஜிக்!
மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடக்க ஆட்டத்தில், ஆர்சிபி வீராங்கனை டி கிளார்க் கடைசி 4 பந்தில் 18 ரன்கள் அடித்து மும்பை இந்தியன்ஸை அதிர்ச்சியடையச் செய்தார். மும்பை 154 ரன்கள் சேர்த்த நிலையில், ஆர்சிபி கடைசி ஓவரில் வெற்றியை தட்டிச் சென்றது. டி கிளார்க் தனது அதிரடி ஆட்டத்தால் மும்பையை தோற்கடித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகக் ஐபிஎல் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் WPL என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2023ஆம் ஆண்டு தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக் தொடரானது, இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், 2வது சீசனில் ஆர்சிபியும் கோப்பை வென்ற நிலையில், 2025 மகளிர் ஐபிஎல் தொடரையும் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியனாக வலம்வருகிறது.
இந்தநிலையில், நேற்று தொடங்கிய மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் 4வது சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கடைசி பந்தில் த்ரில் வெற்றி..
2026 மகளிர் பிரீமியர் லீக் தொடர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி களம்கண்டது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபியின் வேகப்பந்துவீச்சாலர் லாரென் பெல் 4 ஓவரில் 19 டாட் பந்துகள் உட்பட 14 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையிலும், கடைசியாக அதிரடி காட்டிய கேரளா வீராங்கனை சஞ்சீவன் சஞ்சனா 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 பந்தில் 45 ரன்கள் விளாசி மும்பையை நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றார்.
155 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய ஆர்சிபி அணியில், க்ரேஸ் ஹரிஸ் மற்றும் மந்தனா இருவரும் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். எல்லாம் சரியாக செல்ல அடுத்தடுத்த ஓவர்களில் மந்தனா, ஹரிஸ் இருவரும் வெளியேற, தொடர்ந்து வந்த ஹேமலதா, ரிச்சா கோஷ், ராதா யாதவ் அனைவரும் ஓரிலக்க ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தரமான கம்பேக் கொடுக்க, அதிரடி வீராங்கனை நாடின் டி கிளார்க்கின் கேட்ச்களை பலமுறை கோட்டைவிட்டு தங்கள் தலைமேல் தாங்களாகவே மண்ணை வாரி போட்டுக்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. கடைசி ஓவரில் 18 ரன்கள் ஆர்சிபிக்கு வெற்றி இலக்காக இருந்த நிலையில், களத்தில் நீடித்த டி கிளார்க் மேஜிக்கை நிகழ்த்தினார்.
கடைசி 6 பந்தில் முதலிரண்டு பந்து டாட்டாக மாற ஆட்டம் பரபரப்பின் உச்சிக்கே சென்றது. ஆனால் அடுத்த 4 பந்துகளையும் 6, 4, 6, 4 என பறக்கவிட்ட டி கிளார்க் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்த வீராங்கனை இந்தியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் தனியாளாக வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

