’மாயாஜாலம்..’ 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே தேவை.. மெய்டனாக வீசி மேஜிக் செய்த CSK பவுலர்!
விஜய் ஹசாரே போட்டியில் டெத் ஓவரில் சிஎஸ்கே அணியின் 28 வயது ராமகிருஷ்ண கோஷ் தனது மெய்டன் ஓவரால் மஹாராஷ்டிரா அணிக்கு 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தார். 2026 ஐபிஎல் தொடரில் கோஷுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டாலும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றஞ்சாட்டு தொடர்ந்து இருந்துவருகிறது. ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் ஆயுஸ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தங்கள் மீதிருந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை பயன்படுத்தி வெற்றிகண்ட சிஎஸ்கே அணி, அந்த வியூகத்தில் வாங்கிய மரண அடிக்கு பிறகு இளம் வீரர்கள் கொண்ட அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருந்துவருகிறது.
அந்தவகையில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் போன்ற 19 வயது மற்றும் 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு எடுத்த சென்னை அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த இரண்டு இளம் வீரர்களும் 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
இதுஒருபுறம் இருக்க சர்பராஸ் கான், ராமகிருஷ்ண கோஷ் இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் அசத்திவருவது சென்னை அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது..
அழுத்தத்தின் போது மெய்டன் வீசிய கோஷ்..
2025-26 விஜய் ஹசாரே டிராபியில் மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் சிஎஸ்கே வீரரான ராமகிருஷ்ண கோஷ், தன்னுடைய பவுலிங் ஆல்ரவுண்டர் திறமையில் மிரட்டிவருகிறார். 27 பந்தில் 64 ரன்கள், 73 ரன்கள், 7 விக்கெட்டுகள், 3 விக்கெட்டுகள் என பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் மிரட்டிவருகிறார் ராமகிருஷ்ண கோஷ்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான போட்டியில் மஹாராஷ்டிராவுக்காக விளையாடிய ராமகிருஷ்ண கோஷ் தன்னுடைய பந்துவீச்சில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
முதலில் பேட்டிங் செய்த மஹாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் 134 ரன்கள் உதவியால் 249 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய கோவா கடைசி 3 ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற வெற்றிபெறும் இடத்தில் தான் இருந்தது. ஆனால் 48வது ஓவரை மெய்டனாக வீசிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் கோவாவிற்கு அழுத்தம் கொடுத்தார். 49வது ஓவரில் 5 ரன்களை கோவா அடிக்க, கடைசி 6 பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது.
அழுத்தம் நிறைந்த ஓவரை வீசிய ராமகிருஷ்ண கோஷ் 50வது ஓவரிலும் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசி மேஜிக் செய்தார். கோஷின் மேஜிக்கால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மஹாராஷ்டிரா அணி. 2026 ஐபிஎல் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிஎஸ்கே அணியில் இல்லாத சூழலில், ராமகிருஷ்ண கோஷுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

