ஜெய்ஸ்வால் சர்ச்சை விக்கெட் web
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை Snickometer பிராண்ட் அம்பாசிடரா அந்த அம்பயரை மாத்திடுங்க! அஸ்வின் கிண்டல்!

பேட்டிலோ, கையுறையிலோ பந்து பட்டு சென்றதற்கான எந்த அறிகுறியும் ஸ்னிக்கோ மீட்டரில் காட்டாதபோதும், களநடுவர் நாட் அவுட் வழங்கிய பிறகும், பல கோணங்களில் பந்துசெல்வதை பார்த்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்றாவது நடுவர் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவை வழங்கினார்.

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது 4 போட்டிகளின் முடிவை எட்டியுள்ளது. அதன்படி 4வது டெஸ்ட் போட்டியை வென்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

jaiswal out

மெல்போர்னில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியும் டிராவை நோக்கியே செல்லும் என்று எதிர்ப்பார்த்த போது, மூன்றாவது அம்பயர்கள் வழங்கிய இரண்டு முடிவுகள் இந்தியாவின் தோல்வியை உறுதிசெய்தன. அதிலும் கள நடுவர் நாட் அவுட் கொடுத்த பிறகும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் வழங்கப்பட்டது சர்ச்சைக்குரிய விசயமாக மாறியது.

இந்த சூழலில், ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் கொடுக்கப்பட்ட அவுட்..

4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஆஸ்திரேலியா அணி 340 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 92 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நோக்கில் நிதானமாக ஆடியது.

குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் நீண்ட நேரம் விக்கெட்டை இழக்காமல் நிலைத்துநின்று ஆடினார். கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் குறைந்த பந்துகளிலேயே ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் 104 பந்துகள் வரை சந்தித்து 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ரோகித் சர்மா

அதன் பின் ஜடேஜா மற்றும் நிதிஷ் குமாரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 130 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் கடைசி பேட்டிங் இணையாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக ஆஸ்திரேலிய வீரர்கள் நினைத்தனர். களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்காக மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்டது ஆஸ்திரேலிய அணி. ரீப்ளே செய்து பார்த்தபோது பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டை கடக்கும்போது லேசாக திசை மாறி செல்வதாக தெரிந்தது. ஆனால், ஸ்னிக்கோமீட்டரில் பார்க்கும்போது எந்த அதிர்வுகளும் அதில் இல்லை.

பொதுவாக ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வுகள் இல்லை என்றால் நாட் அவுட் என்றுதான் மூன்றாவது அம்பயர் முடிவை அறிவிப்பார். ஆனால் அதற்கு மாறாக பந்து திசை மாறி சென்றது போல் இருந்ததால், அதை வைத்து பல கோணங்களில் ஆராய்ந்த மூன்றாவது அம்பயர் ஷர்புத்தூலா சைகத் ஜெய்ஸ்வாலை அவுட் என அறிவித்தார். இது பெரிய சர்ச்சையானது. ஜெய்ஸ்வால் களத்தில் இருந்து அம்பயர்களிடம் இதுபற்றி முறையிட்டார். ஆனால், அவர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு ஜெய்ஸ்வாலுக்கு அறிவுறுத்தினர். இதை அடுத்து இந்திய ரசிகர்கள் மூன்றாவது அம்பயர் ஷர்புத்தூலா சைகத்தின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.

jaiswal

ஜெய்ஸ்வால் சென்றபிறகு லோயர் ஆர்டர் பேட்டர்கள் மீது அழுத்தம் செலுத்திய ஆஸ்திரேலியா எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தி 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவுசெய்தது.

ஸ்னிக்கோ மீட்டர் பிராண்ட் அம்பாசிடர்..

ஜெய்ஸ்வாலின் சர்ச்சைக்குரிய அவுட்டிற்கு பிறகு ஒரு சூசகமான பதிவுடன் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வங்கதேச நடுவரின் புகைப்படத்தை பகிர்ந்து சில கருத்துகளை எழுதினார்.

அந்த பதிவில், “Snickometer இப்போது பிரபலமாக பேசப்படுகிறது. இந்த தருணத்தை பயன்படுத்தி, இந்த அம்பயரை பிராண்ட் அம்பாசிடராக கையெழுத்திடுங்கள்” என்று எழுதினார். ஆனால் சிரிக்க மட்டும் என்ற ஒரு கருத்தையும் அதனுடன் சேர்த்துள்ளார்.

அதேபோல ஜெய்ஸ்வாலுக்கு ஒர்க் ஆகாத ஸ்னிக்கோ மீட்டர், ஆகாஷ் தீப்புக்கு மட்டும் எப்படி ஒர்க் ஆனது என்ற விமர்சனம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியிலும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

யார் இந்த ஷர்புத்தூலா சைகத்?

இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்கிய மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகத், வங்கதேசத்தின் டாக்காவில் 16 அக்டோபர் 1976 இல் பிறந்தார். அவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட்டர் ஆவார்.

இடது கை லெக் ஸ்பின்னரான அவர், 2000 மற்றும் 2001-க்கு இடையில் டாக்கா மெட்ரோபோலிஸ் (Dhaka Metropolis) அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வீரராக அதிக வெற்றி கிடைக்காத பிறகு, ஷர்ஃபுத்தூலா நடுவராகத் தொழிலில் கவனம் செலுத்தினார். பிப்ரவரி 2007-ம் ஆண்டு பரிசல் டிவிசனுக்கும், சில்ஹெட் டிவிசனுக்கும் இடையிலான போட்டியில் முதல்தர நடுவராக அறிமுகமான அவர், ஜனவரி 2010-ம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு இடையேயான தனது முதல் சர்வதேச போட்டிக்கு நடுவராக இருந்தார்.

ஷர்புத்தூலா சைகத்

நடப்பாண்டின் தொடக்கத்தில், ஐசிசி நடுவர்களின் எலைட் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் வங்கதேச நடுவராக மாறிய ஷர்புத்தூலா, ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்காவின் மரைஸ் எராஸ்மஸுக்கு பதிலாக குழுவில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.