பறிபோனதா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்ட வாய்ப்பு? பரிதாப நிலையில் இந்திய அணி!
மெல்பர்ன் டெஸ்ட்டில் 184 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வி, இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாதையில் மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டுள்ளது. மேலும் இலங்கை அணி இறுதியாட்டத்திற்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புக் கதவையும் மூடிவிட்டது.
பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை ருசித்ததன் மூலம் தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியாட்டத்தை உறுதி செய்துவிட்டது. இப்போதும் கணக்குகளின் படி இந்திய அணிக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிக கடினமாக ஒன்றாக மாறி இருக்கின்றன.
இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் WTC புள்ளிப்பட்டியலில் 61.46 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 52.78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதியாட்டத்துக்கு தகுதிபெற வேண்டுமெனில், முதலில் சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
இரண்டாவதாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இலங்கை அணியுடனான தொடரில், இரண்டில் அல்லது ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்க வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாடவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை பெறக்கூடாது.
இவை சாத்தியமானால், இந்திய அணி இறுதியாட்டத்தில் விளையாடுவதும் சாத்தியமே.