“போதும் ரோகித்; உங்களது கிரிக்கெட் சேவைக்கு நன்றி!” - முன்னாள் ஆஸி. வீரரின் காட்டமான கருத்து!
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. நிதிஷ்குமாரின் சதத்தினால் இந்தியாவும் 369 ரன்கள் குவித்தது.
105 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது. இருப்பினும் லபுஷேன், பேட் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். லபுஷேன் 70 ரன்களும், பேட் கம்மின்ஸ் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்க்கு இணை சேர்ந்த லியான், போலண்ட் நிதானமாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் கொடுத்தனர். அதன்படி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்துள்ள ஆஸ்திரேலியா 228 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்களும், சிராஜ் 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 22 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக் கூறுகையில், “சிட்னியில் ஆடும் ஐந்தாவது டெஸ்ட் மிக முக்கியமானது. இப்போது நான் ஒரு செலக்டராக இருந்தால், ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் எடுக்கவில்லை என்றால் அவரிடம் நான் இதைத்தான் சொல்லுவேன். “ரோகித் உங்களது கிரிக்கெட் சேவைக்கு நன்றி., நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்துள்ளீர்கள். ஆனால், நாங்கள் சிட்னியில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு பும்ராவை கேப்டனாக நியமிக்கப்போகிறோம். இதுதான் உங்களது கிரிக்கெட் கேரியரின் முடிவு’ எனக் கூறுவேன்.
ரோகித் சர்மாவிற்கு இது மிகவும் கடினமான காலமாக இருக்கிறது. அவரது கடைசி 14 இன்னிங்ஸில் அவரது சராசரி 11 தான். அவர் சிறப்பாக விளையாடிய காலத்தைக் கடந்துவிட்டார். இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கும். எல்லா சிறந்த வீரர்களது ஃபார்மும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். எண்கள் (ரன்கள்) பொய்சொல்வதில்லை” எனத் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்குத் திரும்பிய ரோகித், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இதுதான் அவரது வீழ்ச்சிக்குக் காரணம். அவர் வெளியேறிய பந்தினை நீங்கள் பார்க்கலாம். பழைய ரோகித்தாக இருந்தால் அதை பவுண்டரிக்கு அடித்திருப்பார். ஆனால், இந்த முறை அவர் தயங்கினார். அவரது உள்ளுணர்வு அந்த பந்தினை அடிக்கச்சொன்னது. அவரோ அடிக்க வேண்டாம் என நினைத்தார்” எனத் தெரிவித்தார்.