டெஸ்ட் போட்டிகள் அழிந்துவருகிறதா? 87 வருடத்தில் இல்லாத பார்வையாளர்கள்! உச்சம் தொட்ட INDvAUS டெஸ்ட்!
ஆங்காங்கே ஒரு சிலர்... அசதியுடன் தூங்கி வழியும் ரசிகர்கள் என டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்களை ஒருவித மந்த நிலையுடன் வைத்திருப்பதை நாம் காணலாம். ஆனால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் பார்வையாளர்களை ஈர்க்கும் விசையாக இருந்திருக்கிறது.
கவனம் ஈர்த்த இந்தியா-ஆஸி டெஸ்ட் தொடர்..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையே பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 96,463 ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. இந்த மைதானத்தில் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்த இரண்டாவது போட்டி இதுவாகும்.
அடிலெய்ட் மைதானத்திலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 12 ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
பிரிஸ்பெனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை 87 ஆயிரத்து 689 பேர் கண்டுகளித்துள்ளனர்.
மெல்பர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் போட்டி பிராட்மேன் காலத்து சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தது. 1936-37-ல் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரை 3 லட்சத்து 50 ஆயிரத்து ஐநூற்று முப்பத்தி நான்கு பேர் பார்த்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மெல்பர்னில் தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியை 3 லட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எந்த விளையாட்டுப் போட்டியையும் இத்தனை ரசிகர்கள் கண்டதில்லை. யார் சொன்னது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கவர்ச்சியை இழந்துவிட்டதென...