12 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய ஆஸி.. டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை!
ஒருகாலத்தில் வீழ்த்தவே முடியாத வலுவான அணியாக இருந்த ஆஸ்திரேலியா அணி, பல்வேறு முக்கியமான தருணத்தில் இந்தியாவை அதளபாதாளத்தில் தள்ளியுள்ளது. எவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தபோதும், ஆஸ்திரேலியா அணியை முக்கியமான தொடர்களில் இந்திய அணியால் வீழ்த்தவே முடிந்ததில்லை.
ஆனால் அதையெல்லாம் தலைகீழாக மாற்றியிருக்கும் சமீபத்திய இந்திய அணி, கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.
அப்படி இந்த முறையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தநிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கும் ஆஸ்திரேலியா 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்று தங்களுடைய லெகஸிக்கு திரும்பியுள்ளது.
இங்கிருந்து தொடரை இந்தியா இழக்கக்கூடாது என்றால் சிட்னியில் நடக்கவிருக்கும் 5வது டெஸ்ட் போட்டியில் வென்று 2-2 என தொடரை சமன்செய்யவேண்டும்.
12 வருடத்திற்கு பிறகு வென்ற ஆஸ்திரேலியா..
5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது 3 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு 1-1 என சமநிலையில் இருந்தது. இந்த சூழலில் யார் தொடரில் முன்னிலை பெறப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் 4வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் (140 ரன்கள்), லபுசனே (72 ரன்கள்), சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்) முதலிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்துள்ளது. அதற்குபிறகு விளையாடிய இந்திய அணி நிதிஷ்ரெட்டியின் அற்புதமான சதத்தின் உதவியால் 369 ரன்கள் குவித்தது.
115 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 340 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சூழலில் விளையாடிய இந்திய அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 84 ரன்கள் சேர்த்தார்.
இந்த வெற்றியின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தி அசத்தியுள்ளது. 2-1 என ஆஸ்திரேலியா தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.