பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டிருந்தது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ‘உயர்கல்விக்கான வரைவுக் கொள்கை 2025’ஐ வெளியிட்டார். இந்த வரைவுக் கொள்கையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், துணைவேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் விதிமுறைகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி துணைவேந்தர் நியமனம் தொடர்பான தகுதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இதை செயல்படுத்தாத பல்கலைக்கழகங்கள் யுஜிசியின் திட்டங்களில் பங்குபெற முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன்மூலம் துணை வேந்தர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுத்துள்ளதாக மாநில அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. இன்று (09/01/25) யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான தனித்தீர்மானமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உயர்கல்விதுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யுஜிசி வரைவி விதிகள் உள்ளன. யுஜிசி வரைவு விதிகள் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது. யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” எனத் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்! இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிமுறைகள் தொடர்பாக பேச முன்னாள் பேராசிரியர் வீ. அரசுவை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “மாநிலங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளது. அதற்கு துணை வேந்தரை நியமிப்பது என அனைத்து செயல்பாடுகளையும் மாநில அரசுதான் மேற்கொண்டது.
ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்பது வெள்ளைக்காரன் காலத்தில் உருவாக்கப்பட்டது. வேந்தர் என்பதாலேயே அவருக்கு முடிவெடுக்கும் உரிமைகள் கொடுக்கப்படவில்லை. அவர் நிர்வாக அதிகாரம் சார்ந்து இருக்கிறார். just refer the file. அவ்வளவுதான். இதுவரை இருந்த ஆளுநர்கள் எல்லாம் மாநில அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தார்கள். ரவி ஆளுநராக வந்தபிறகு மாநில அரசை மிக கேவலமாக நடத்துகிறார். ஏதோ அவர் கைகளில்தான் அனைத்துவிதமான அதிகாரங்களும் இருப்பதுபோல் அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவில் யுஜிசியால் பரிந்துரைக்கப்படுபவர் இருக்க வேண்டும் எனும் விதி கூட ஆளுநர் ரவியின் அழுத்தத்தால்தான் கொண்டு வந்துள்ளார்கள். மாநிலத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுகிறார்கள். தமிழ்நாடு அரசு என்று ஒன்று இருக்கிறதென்றால், கல்வித்துறையில் அதற்கு இருக்கும் அதிகாரங்களை அத்தனையையும் பிடுங்குகிறார்கள். இப்போது உயர்கல்வியிலும் புகுந்துவிட்டார்கள்.
கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதை பொதுப்பட்டியலுக்கு மாற்றினார்கள். இதன்விளைவு, நேரடியாக அவர்கள் தலையிடுகிறார்கள்.
கல்வியைக் கைப்பற்றினால்தான் அனைத்தையும் செய்ய முடியும் என மத்திய அரசு நினைக்கிறது.
இது வழக்காக நீதிமன்றங்களுக்கு செல்லும்போது, உடனடியாக முடிவு எட்டப்படாமல் நீண்ட நெடுங்காலம் விசாரணை நடக்கும். பின் ஒன்றுமில்லாமல் ஆகும். கல்வியைக் கைப்பற்றினால்தான் அனைத்தையும் செய்ய முடியும் என மத்திய அரசு நினைக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இருக்கும் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்-ல் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்துகிற நிறுவனங்களாக மாற்றிவிட்டார்கள். அதை மாநில பல்கலைக்கழகங்களிலும் கொண்டு வரவேண்டும் என பார்க்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை.
தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. மாநில அரசு நேரடியாக தலையிட்டு எதையாவது செய்ய வேண்டும். என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை.
யுஜிசியால் பரிந்துரைக்கப்படும் நபர் துணை வேந்தர் தேடுதல் குழுவிற்கு வந்தால், அந்நபர் துணை வேந்தரை ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்துதான் தேடுவார். அப்படி புதிதாக வருபவருக்கு தமிழ்நாட்டின் கலாச்சாரம் எதுவும் தெரியாது. அதனுடைய விளைவுகள் மிகவும் எதிர்நிலைக்குத்தான் செல்லும். பல்கலைக்கழகம் நமதா அல்லது வடநாட்டுக்காரனுடையதா என்பதே தெரியாமல் இருக்கும். மத்திய பல்கலைக்கழகங்கள் நம்மூரில் இருந்தாலும் நமக்கும் அந்த பல்கலைக்கழகங்களுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? அப்படித்தான் ஆகும்” எனத் தெரிவித்தார்.