யுஜிசியின் புதிய விதிமுறைகள் | “அடுத்த தலைமுறை கல்வி பாதிக்கும்” - கல்வியாளர் நெடுஞ்செழியன்!
புதிய விதிமுறைகள்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டிருந்தது. யுஜிசி விதிமுறைகள் 2025 எனும் பெயரில் இந்த விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக நியமிக்கப்படும் தேடுதல் குழுவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி,
* பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், யுஜிசி சார்பில் ஒருவர், ஆளுநர் சார்பில் ஒருவர், பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் நியமிக்கப்படுவர்.
* தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநரால் நியமிக்கப்படும் நபர் செயல்படுவார்.
* துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
தகுதிகள் மாற்றம்
துணைவேந்தர் நியமனம் தொடர்பான தகுதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி,
* குறைந்தபட்சமாக 55 சதவீத மதிப்பெண்களுடன் எம்.இ. மற்றும் எம்.டெக் பட்டங்களை பெறுவோரை, நேரடியாக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கலாம். அதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை
* துணை வேந்தராக நியமிக்க, பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்த நிலையில், தற்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித் துறை, பொது நிர்வாகம், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர் பொறுப்பில் 10 ஆண்டுகள் வகித்து, கல்விக்கு சிறப்பான பங்களிப்பை நல்கி இருக்கும் நபர்களை, துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் கண்டனம்
இந்த விதிமுறை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்பதும் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை கருத்து கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு நேற்றே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இன்றும் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் போன்றோரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
அரசியல் ரீதியாக ஆளுநர் வந்தால் நெருக்கடிகள் சகஜம்
இந்நிலையில், இதுதொடர்பாக பேச கல்வியாளரும் INDIA COLLEGE FINDERன் நிறுவனருமான நெடுஞ்செழியனைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டதிட்டங்கள் வேறு; மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் சட்டதிட்டங்கள் வேறு. தமிழ்நாடு அரசு அப்போதிருந்தே கூட்டாட்சி தத்துவத்திற்குட்பட்டு ஆளுநரை வேந்தராக போட்டு, ஆளுநர் பதவிக்கு மேலும் மரியாதையைக் கொடுத்துள்ளது. இதுவரை எந்த ஒரு ஆளுநரும் பிரச்னைகளை உண்டாக்கியதில்லை.
எப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக ஒரு ஆளுநர் வருகிறாரோ, அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல் ரீதியாகத்தான் செயல்பட விரும்புவார். அரசியல் ரீதியாக அவர் செயல்படும்பட்சத்தில் இம்மாதிரியான நெருக்கடிகள் வருவது சகஜம். கல்வித்துறை எப்போதும் அரசியல் சாராது தனியாக இயங்க வேண்டும். என்றைக்கு அரசியல் உள்நுழைகிறதோ அன்று மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கும்.
நல்ல பல்கலைக்கழகமொன்றில் துணைவேந்தர் இல்லையென்றால் மாணவர்களவது கல்வி சிக்கலுக்குள்ளாகும். தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கல்வியை பாதிக்க விடமாட்டார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் பாதிக்கும் இல்லையா? எனவே ஒரு அரசும் கல்வியை பாதிக்கவிட்டதில்லை.
ஏன் ஒரே கல்விக்கட்டணம் கூடாது?
சில மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்தான் பல்கலைக்கழக வேந்தராக இருக்கிறார். இந்தியா முழுவதும் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விதி என்றால், ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் உரிமை மற்ற மாநிலங்களுக்கு கிடையாது என்பது சரியா? ஒரே வரி, ஒரே தேர்தல் என சொல்லும்போது, ஏன் ஒரே கல்விக்கட்டணம் என சொல்லக்கூடாது?
ஏற்கனவே, ஆதரவற்ற குழந்தைகள் எல்லாம் கல்வி பயில வரக்கூடாது எனும் ரீதியில்தான் நாம் நடந்துகொள்கிறோம். இத்தகைய சூழலில் இம்மாதிரியான கொள்கை முடிவுகளை மாநில அரசின் அறிவுறுத்தல் இல்லாமல், சிறந்த கல்வியாளர்களிடம் கருத்து கேட்காமல் அரசியல் ரீதியாக எடுப்பது பல விளைவுகளை ஏற்படுத்தும். நாடு முழுவதும் பள்ளி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களது சராசரி ஏறத்தாழ 28% ஆக உள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அந்த எண்ணிக்கை 48% ஆக உள்ளது.
நாட்டின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறி
மத்திய அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் எல்லாம் இம்மாதிரி விதிமுறைகளைக் கொண்டுவந்து, அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்க மாட்டோம் என சொல்லும்போது பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளுக்குத்தான் படிக்க செல்வார்கள். ஏனெனில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனிலேயே டிகிரி கொடுக்கின்றன. இதைத்தாண்டி உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களது எண்ணிக்கை மேலும் குறையும். அனைத்து விதங்களிலும் இந்திய கல்வி மதிப்பு குறையும். பின் இந்தியா மேம்பட்ட நாடாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் யோசிக்காமல், கல்வியைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் எல்லாம் இம்மாதிரியான கொள்கைகளைக் கொண்டுவரும்போது, நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் கேள்விக்குறியாகவும் சவாலாகவும் இருக்கும்.
அரசியல் கட்சிகள், அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்பதையெல்லாம் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த தலைமுறை கல்வியை பாதிக்கவிடாதீர்கள். கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டபோது, அவர்களது கற்கும்திறன் 25 ஆண்டுகள் பின்சென்றுவிட்டதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தற்போது இம்மாதிரி கொள்கைகளைக் கொண்டுவந்தால் மேலும் 25 ஆண்டுகள் பின்சென்றுவிடாதா? குழந்தைகளின் கல்வியை ஒவ்வொரு இடத்திலும் கொள்கை அளவில் தடை செய்துவந்தால் அது எதிர்கால சந்ததியினரை கடுமையாக பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.