IIT Bombay pt web
இந்தியா

'சமஸ்கிருதம் போதும்' - ஐ.ஐ.டி-யில் சேர புதிய திட்டம்.. சேதுபந்த வித்வான் யோஜனா சொல்வதென்ன?

முறையான பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும், ‘பாரம்பரிய’ குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

சண்முகப் பிரியா . செ

நீட், தேசிய கல்விக்கொள்கை உட்பட மத்திய அரசின் பல திட்டங்கள் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு திட்டம் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஜூலை 29 அன்று மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சேதுபந்த வித்வான் யோஜனா’ என்ற திட்டம்தான் இந்த சலசலப்புகளுக்குக் காரணம். என்ன திட்டம் இது ? எதிர்ப்புகள் எழக் காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

சேதுபந்த விதாவன் யோஜனா திட்டம் என்றால் என்ன?

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டத்தின்படி முறையான பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும், ‘பாரம்பரிய’ குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடலாம்.

பொதுவாக ஐ.ஐ.டி-யில் படிப்பதற்கு முறையாகப் பன்னிரண்டு வருடங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்தோடு கல்லூரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஜே.இ.இ., கேட் ஆகிய நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், சேதுபந்த வித்வான் யோஜனா திட்டத்தின்படி இந்த தகுதிகள் எதுவும் இல்லாமல் வெறும் குருகுலங்களில் பயின்றிருந்தால் அதை அடிப்படைத் தகுதியாகக்கொண்டு அவர்கள் ஐ.ஐ.டி-க்குள் எளிதில் நுழையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி-களில் சேர வேண்டுமென்றால், மாணவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட குருகுலத்தில் பயின்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம், ஆயுர்வேதம், தத்துவம், கணிதம் அல்லது ‘பாரம்பரிய’ கலைகள் போன்ற 18 துறைகளில் ஆராய்ச்சி படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இத்திட்டத்தின்படி ஐ.ஐ.டியில் சேருவதற்கான வயது வரம்பு 32ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இந்திய அறிவு அமைப்பு என்ற பிரிவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.40,000 fellowship மற்றும் ரூ.1 லட்சம் மானியமும் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. அதேபோல முனைவர் பட்ட மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.65,000 fellowshipம் ரூ.2 லட்சம் மானியமும் உதவித்தொகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக்கொள்கையின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வேண்டுமானால் setubandha.sanskrit.ac.in. என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறிப்பிட்ட விண்ணப்பக் காலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை; இருப்பினும், தகுதி வயது, மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பது ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஆதார், வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதன் மூலமாக தகுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்

தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் பலரும் இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் , “ஐ.ஐ.டியில் சேர வேண்டுமானால் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் , ஆனால் தற்போது ‘சேதுபந்த வித்வான் யோஜனா’ என்ற திட்டத்தின்கீழ் , பாரம்பரிய முறைப்படி குருகுலங்களிலோ, அல்லது ஒரு குருவிடமோ 5 ஆண்டுகள் சமஸ்கிருதம் பாடங்களைப் படித்த 32 வயதுக்குட்பட்டோர் நேரடியாக ஐ.ஐ.டி-யில் சேரலாம் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பார்ப்பனர்களே ஐ.ஐ.டி-யில் சேர வகுக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொல்லைப்புறக் கன்னிவெடியை முறியடிக்க அணி வகுப்போம் போராடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட குருகுலங்கள் எவை எவை? எந்தெந்த குருகுலங்களில் பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்? என பல கேள்விகளும் எழுந்துள்ளன.