காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்.. எதிர்க்கும் ஹமாஸ்!
காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பதே தீர்வு என்று இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாஹு முன்மொழியப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராணுவ அதிகாரிகள் பதவி விலகிக்கொள்ளலாம் என்று நெதன்யாஹு கூறியிருப்பதாகவும் இது குறித்த விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் முயன்றால், சர்வதேச வல்லாதிக்க நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன், ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் காஸா மீதான போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.
காஸா ஆக்கிரமிப்பு முயற்சி தங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உறவினர்கள் அஞ்சுகிறார்கள். ஹமாஸ் பிணைக் கைதிகளை மீட்பதற்காகவேனும் காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று நான்கில் மூன்று இஸ்ரேலியர்கள் கருதுவதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. காஸாவின் முக்கால் பகுதி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸை வழிக்குக் கொண்டுவருவதற்கான உத்தியாகவே நெதன்யாஹு, முழு ஆக்கிரமிப்பு என்று பேசத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூட கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.