ட்ரம்பின் நெருக்கடிகளுக்கு நடுவே.. ஆக.31 சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி! பின்னணி என்ன?
சீனாவில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்கிறார். 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு அவர் சீனாவிற்கு மேற்கொள்ள இருக்கும் முதல் பயணம் இதுவாகும். சீனாவிற்கு அவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு சென்றிருந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன், பிரதமர் மோடி ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜப்பானுக்குச் செல்ல உள்ளார். அங்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
அங்கிருந்து அவர் சீனா செல்வார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உச்சி மாநாட்டில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது. ஆனால் அதுபற்றிய தகவல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கடுமையான வரிவிதிப்பு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தப் பயணம் வந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சீனாவுடனான இந்தியாவின் உறவுகளை மறுசீரமைப்பது அமெரிக்காவிற்குச் சமநிலைப்படுத்தும் காரணியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவு மற்றும் பஹல்காம் தாக்குதலின் நிழலின் பின்னணியிலும் இந்தியாவின் பங்கேற்பு இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், இம்மாநாட்டில் இந்தியா, சக SCO உறுப்பு நாடுகளுடனான முதன்மைக் கலந்துரையாடல்கள் பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-சீனா உறவுகளில் ஸ்திரத்தன்மை மற்றும் உரையாடலை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
2001இல் நிறுவப்பட்ட SCO, ஒத்துழைப்பு மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் என 10 உறுப்பு நாடுகள் உள்ளன.