இனப் பெருமை பேசும் விளம்பரம்.. சிக்கலில் நடிகை சிட்னி ஸ்வீனி! சோஷியல் மீடியாவில் வெடித்த விவாதம்
குறுகிய காலத்தில் ஹாலிவுட்டின் நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்தவர் சிட்னி ஸ்வீனி. தனது வித்தியாசமான முயற்சிகளால் கவனம் ஈர்க்கும் இவர், சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கை. அண்மையில், தான் குளித்த நீரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சோப்பிற்கு இவரே விளம்பரமும் செய்திருந்தார். அதன் தாக்கம் ஓய்வதற்குள் ஒரு பூகம்பத்தை கிளப்பியிருக்கிறார் சிட்னி. அமெரிக்கன் ஈகிள் என்ற பிரபல ஜீன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள இவர், அதில் உதிர்த்த வார்த்தைகளே தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.
இந்த வீடியோவில், ஜீன்ஸ் என்பது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது எனக் கூறும் சிட்னி ஸ்வீனி, அதுவே நம் முடியின் நிறம், கருவிழியின் நிறம் மற்றும் குணாதிசியங்களைத் தீர்மானிக்கிறது என்கிறார். சிட்னி ஸ்வீனி சிறந்த ஜீன்களைக் கொண்டிருக்கிறார் என்ற பொருள்படும் வாசகத்துடன் நிறைவடைகிறது இந்த விளம்பரம்.
இதில் ஜீன்ஸ் என்ற சொல், உடையைக் குறிப்பதோடு அல்லாமல் மரபணுவையும் குறிக்கும் ஒப்பொலியுடன் கையாளப்படிருப்பதே விவாதத்தை எழுப்பியுள்ளது. வெள்ளை இனத்தவரான சிட்னி ஸ்வீனி நடித்திருப்பதன் மூலம் இன வெறுப்பை இந்த விளம்பரம் அப்பட்டமாக முன்வைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெள்ளை சருமம், வெள்ளை கூந்தல் போன்றவை அழகியலுக்கான அளவுகோலாக கட்டமைக்கப்படுவதாகவும் கறுப்பின மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ராப் பாடகி டோஜா கேட் உள்ளிட்ட பிரபலங்களும் கண்டனத்தை தெரிவிக்க தவறவில்லை.
இதனிடையே தங்கள் மீதான இன வெறுப்பு பிரசார குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்கன் ஈகிள், இது உடையைப் பற்றிய விளம்பரமே என விளக்கம் அளித்திருக்கிறது. அதேநேரத்தில் சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்திற்கு ஆதரவைத் தெரிவித்து தனது அரசியலுக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். 2023இல் அமெரிக்க குடியேறிகளை கேடான மரபணு கொண்டவர்கள் என்றும், தேசத்தின் ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்ததையும் அரசியல் நோக்கர்கள் நினைவுகூர்கின்றனர். பெரும்பான்மை வெள்ளையின மக்களிடையே இனவெறியை தூண்டும் வகையிலான நிகழ்வுகள் ட்ரம்பின் ஆட்சியில் தொடர்கதையாகி இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடும் விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்திற்கு இது லாபத்தையே ஈட்டிக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் பங்குகள் 23% ஏற்றம் கண்டிருப்பது அமெரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கத்திற்கு வரவேற்பு இருப்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. கறுப்பினத்தவர்க்கும், குடியேறிகளுக்கும் எதிரான இந்த மனநிலை அதிகரித்திருப்பது சமத்துவச் சமூகத்தின் சான்றாக காட்டப்படும் அமெரிக்கா மீண்டும் பின்னோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.