நேஹா
நேஹா ட்விட்டர்
இந்தியா

பல்கலை மாணவி கத்தியால் குத்தி படுகொலை.. லவ் ஜிஹாத் பெயரில் அரசியல் அலை! கர்நாடகாவை பதறவைத்த சம்பவம்!

Prakash J

கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சன் ஹைமாத். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹைமாத். அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதே கல்லூரியில் பெலகாவியைச் சேர்ந்த ஃபயாஸ் என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில், ஃபயாஸ், நேஹாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேஹாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபயாஸின் காதலை, நேஹா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் நேஹாவை ஃபயாஸ் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். மேலும் அவரை, நேஹா கண்டித்துள்ளார்.

இதனால் நேஹா மீது ஆத்திரத்தில் இருந்த ஃபயாஸ், நேற்று (ஏப்ரல் 18) தேர்வு எழுதிவிட்டு மதியம் வெளிவந்த நேஹாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் கல்லூரியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தப்பியோடிய ஃபயாஸையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிக்க: இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!

இந்த நிலையில், மாணவியின் படுகொலை சம்பவம் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அவருடைய கொலை, லவ் ஜிகாத்தாலேயே ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவி நேஹாவின் தந்தை நிரஞ்சன் ஹைமாத், ”ஃபயாஸ் எங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர். அவர், என் மகளிடம் காதலைத் தெரிவித்தார். ஆனால், அதை என் மகள் நிராகரித்தார். தாம் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், ’இதுபற்றி தன்னிடம் பேசாதே’ எனச் சொல்லி அவரிடமிருந்து என் மகள் விலகியிருந்தார். அவர் நேஹாவை பின்தொடர்வதை நாங்களும் கண்டித்துத் தடுத்து வந்தோம். இந்த ஆத்திரத்தில்தான் தன் மகளைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பாஜக இந்த விவகாரத்தை ‘லவ் ஜிஹாத்’ நோக்கி திருப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதில் 'லவ் ஜிஹாத்' இருப்பதாக நான் நம்புகிறேன். சிறுமி காதலிக்க மறுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில், சட்டம் ஒழுங்கு இல்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று பாஜக மிரட்டுகிறது. கர்நாடகாவில்தான் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, “அந்தப் பெண் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள நினைத்தற்காக, அவனால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனினும் எனக்கு இதுகுறித்து முழுவிவரம் தெரியவில்லை. ஆனால் அது பரஸ்பர உறவாக இருந்ததால் இது ’லவ் ஜிஹாத்’ என்பது போல் தெரியவில்லை” என்றார்.

இதையும் படிக்க: அமெரிக்கா| கடையில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் 2 பேர் கைது!

இதற்கிடையே மாணவியின் கொலை தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பு ஏபிவிபியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் சித்தராமையா, ”இந்த விஷயத்தில் அமைதி காக்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தப்படும். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக கடுமையான விசாரணை நடத்தி அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என உறுதியளித்துள்ளார்.

'லவ் ஜிஹாத்' என்பது ஒரு முஸ்லீம் ஆணுக்கும் முஸ்லீம் அல்லாத பெண்ணுக்கும் இடையிலான உறவைக் (முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்ளும் உறவு) குறிக்க இந்துத்துவா அமைப்புகளால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை ஆகும். இருப்பினும் காதல் என்பதற்கு மதம் உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடும் கிடையாது என்றும் இதுபோன்று புரிதல் இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவது மதத்தோடு தொடர் புடையது கிடையாது என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க: விமானப்படை தளத்தில் குண்டுசத்தம்.. திருப்பிவிடப்பட்ட விமானங்கள்.. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்?