நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்று காலை 11 மணி நிலவரப்படி வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து
நாகலாந்துட்விட்டர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் ஜனநாயகப் பெருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கியது. 102 மக்களவைத் தொகுதிகளில், இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள 1 மக்களவைத் தொகுதிக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில், கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், மொத்தம் 738 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு, இன்று யாருக்குமே வாக்களிக்கவில்லை. அதாவது வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணி வரை எந்த வாக்காளர்களும் வந்து வாக்கு செலுத்தவில்லை. மக்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெறிச்சோடியபடியே காணப்பட்டன. அங்கு, தேர்தல் அலுவலர்களைத் தவிர, மற்ற வாக்காளர்கள் யாரும் இல்லை. அவர்கள் மட்டும் அங்கிருக்கும் பெஞ்ச்களில் தங்கள் பணிக்காக அமர்ந்திருப்பதை பல வீடியோக்கள் காட்டுகின்றன. இன்று மாலைவரை அந்தப் பகுதி மக்கள், வாக்கு செலுத்தச் செல்லாததால் ஒரு ஓட்டுகூடப் பதிவாகவில்லை.

20 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 738 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச்சாவடி பணியாளர்கள் இருந்ததாக நாகலாந்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அவ லோரிங் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த ஒன்பது மணி நேரத்தில் யாரும் வாக்களிக்க வரவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அத்தொகுதிக்குப்பட்ட 20 எம்எல்ஏக்களும் தங்கள் வாக்குரிமையைச் செலுத்தவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நாகலாந்தில் உள்ள 13.25 லட்சம் வாக்காளர்களில், கிழக்கு நாகலாந்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மட்டும் 4,00,632 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!

நாகலாந்து
அஜித் பவார் அணியில் இணைந்த நாகலாந்து NCP எம்.எல்.ஏக்கள்.. சரத்பவாருக்கு மேலும் பின்னடைவு?

இந்நிலையில், தேர்தல் நடவடிக்கையை சீர்குலைத்ததற்காக நாகலாந்து தலைமை தேர்தல் அதிகாரி, இஎன்பிஓ அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ’கிழக்கு நாகலாந்து பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளீர்கள். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171சி உட்பிரிவின்கீழ், ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள ENPO தலைவர் Tsapikiu Sangtam, “இந்தப் பிரிவு, தங்களுக்குப் பொருந்தாது. "பொது அறிவிப்பின் முக்கிய குறிக்கோள் கிழக்கு நாகாலாந்து பகுதியில் ஏற்படும் இடையூறுகளின் சாத்தியக்கூறுகளை குறைப்பதாகும். இது எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. கிழக்கு நாகலாந்து மக்களிடையே தன்னார்வ பங்கேற்பு மற்றும் ஒருமித்த அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ENPO, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நாகலாந்து
மக்களவைத் தேர்தல்: மகாராஷ்ட்ரா, மணிப்பூர், நாகாலாந்து தேர்தல் களம் எப்படி இருக்கு? - நேரடி தகவல்

கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், 7 நாகா பழங்குடி இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு தனி மாநிலம் கேட்டு நீண்டநாட்களாகப் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்பு (ENPO) சார்பில் காலவரையற்ற ஊரடங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு, நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். இதன்காரணமாக, அந்தப் பகுதி மக்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

நாகலாந்தில் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) டோகேஹோ யெப்தோமி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக உள்ளார். என்டிபிபி, தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்ட்லேவின் சர்க்கரை அளவு அதிகரிப்பு.. ஆய்வில் பகீர் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com