நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, மறுதேர்வு ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் நடத்திய போராட்டத்துக்கு இப்போது வடிவம் கிடைத்திருக்கிறது. மாணவர்களின் போராட்டம் கடந்த வாரத்தில் தீவிரமடைந்திருந்த நேரத்தில், சமூக ஆர்வலரும், கல்வியாளர் சோனம் வாக்சுக்கின் உண்ணா நோன்பும் போராட்டத்துக்கு வலு சேர்த்தது.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைவதைக் கவனித்த மத்திய அரசு, அதற்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியது. மாணவர்களின் முக்கியக் கோரிக்கையைான கல்வித்துறையில் சீர்திருத்தம், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ஆகியவற்றைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்கு முதற்கட்டமாக பிரதமர் மோடி தனது அறிவிப்பில், “தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான விதிகள், அபராதங்கள், தண்டனைகள் அடங்கிய புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம்” என்று கூறியிருந்தார். புதிய சட்டத்திருத்த மசோதாவில் சேர்க்கப்பட இருக்கும் சில முக்கிய அம்சங்களையும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
1. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக, பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டார்.
2. தேர்வுத்துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுவை பிரதமர் மோடி நியமித்தார்.
3. இந்த வல்லுநர்கள் குழு, தேர்வுத் துறையில் நடக்கும் முறைகேடுகளை எவ்வாறு தடுப்பது, கேள்வித்தாள்களைக் கசியாமல் தடுப்பது, தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்துவது, தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி தேர்வுகளை எளிதாக்கி பாதுகாப்பை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்.
4. தேசிய தேர்வு முகமை (என்டிஏ)யில் பணியாற்றும் 47 அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பணியிலிருந்தே மத்திய அரசு நீக்கியது.
மாணவர்களிடம் நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்தப் புதிய சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய அம்சங்கள், தண்டனைகள், அபராதங்கள், பிரிவுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
புதிய மசோதாவான தேர்வு முறைகேடுகள் தடுப்புத் திருத்த மசோதா 2026 என்பது பொதுத் தேர்வுகளிலும், அரசுத் தேர்வுகளிலும் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. இதில் கடும் அபராதங்கள், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், விசாரணையை விரைந்து முடித்து, தேர்வு முறைகேடுகளைத் தடுத்தல் நோக்கமாகும். 2024ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தைவிட கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஆம், மாணவர்களின் போராட்டத்தின் நோக்கமே, “நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க வேண்டும், கேள்வித்தாள் வெளியாவதைத் தடுக்க வேண்டும், கல்வியில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்பதுதான் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதனால்தான் ஏற்கெனவே இருந்த சட்டத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையிலும், தண்டனையைத் தீவிரமாக்கும் நோக்கில் புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆமாம், முந்தைய சட்டத்தைவிட புதிய திருத்த மசோதாவில் தண்டனைக் காலம், அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
1. முந்தைய சட்டத்தில் ஒரு நபர் முறைகேடான வழியில் தேர்வு எழுதினால், நடந்தால், அவருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
2. புதிய மசோதாவில் முறையற்ற வகையில் தேர்வுகளை எழுதுவது கண்டறியப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
3. தேர்வுச் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு முன்பு ரூ. 1 கோடிவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் புதிய மசோதாவில் ரூ.5 கோடிவரை அபராதம் விதிக்கப்படும். தேர்வு நடத்துவதற்கான செலவுத் தொகையும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும், 8 ஆண்டுகளுக்குப் பொதுத் தேர்வு தொடர்பான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுவார்.
4. இந்த வகை குற்றத்தில் ஈடுபடும் சேவைதாரருக்கு இப்போதுள்ள சட்டப்படி 3 முதல் 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்படுகிறது, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக இருந்தது. இனிமேல், 8 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
5. சேவை வழங்குநருக்கு பொறுப்பாளராக இருப்போர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால், முந்தைய சட்டப்படி 3 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடிவரை அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
6. இந்தப் புதிய மசோதாவின்படி, குறைந்தபட்ச தண்டனையே 5 ஆண்டுகளாகவும், அதிகபட்ச அபராதமாக ரூ.5 கோடிவரையும் விதிக்கப்படலாம்.
7. தேர்வு முறைகேட்டில் திட்டமிட்டுச் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், 2024 சட்டத்தில் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடிக்கும் குறைவான அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தப் புதிய மசோதாவின்படி, குறைந்தபட்ச சிறை 7 ஆண்டுகளாகவும், குறைந்தபட்ச அபராதம் ரூ.10 கோடிவரை விதிக்கப்படலாம்.
இந்தப் புதிய மசோதாவில் விரைவான போலீஸ் விசாரணை, வழக்கு விசாரணைக்காக 12ஏ, 12பி ஆகிய இரு பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கும் மத்திய விசாரணை முகமையோ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவோ, அதன் விசாரணையை, மத்திய அரசு பரிந்துரைத்த காலத்தில் இருந்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
2024-ஆம் ஆண்டு சட்டத்தில் குற்றங்கள் தொடர்பான விசாரணையை மத்திய அரசு எந்தவொரு மத்திய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைக்கலாம். மிக முக்கியத்துவம் வாய்ந்த அல்லது மாநிலங்களுக்கு இடையிலான தேர்வு முறைகேடுகளைக் கையாள, ஒரு பிரத்யேகச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசை வைத்துள்ளது. குற்றங்கள் தொடர்பான போலீஸ் அல்லது சிறப்புக் குழு விசாரணை தொடங்கினால், அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின், வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் தினசரி நடத்த வேண்டும், அனைத்துவிதமான சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணையை அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும்.
இந்தப் புதிய சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், 'பாரதிய நியாய சன்ஹிதா, 2023' அல்லது பிற சட்டங்களின்கீழ் வரும் தொடர்புடைய குற்றங்களையும் ஒரு பகுதியாக விசாரிக்கும். ஒவ்வொரு சிறப்பு விரைவு நீதிமன்றத்திற்கும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களை ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் நியமிக்க வேண்டும். இச்சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும்.
இந்தச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை முடிந்து சிறப்பு விரைவு நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள், தண்டனைக்கு எதிராக தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்ற நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றம் விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும். ஜாமீன் வழங்குதல் அல்லது மறுத்தல் தொடர்பான உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளும் உயர் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யலாம். சிறப்பு விரைவு நீதிமன்ற உத்தரவு அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். 90 நாட்களுக்குப் பிறகு எந்தவொரு மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது.