\
Exam Paper Leaks: Up to 10Years in Jail Under New Anti-Paper Leak Bill
Parliamentweb

வினாத்தாள் கசிவு | 10 ஆண்டுகள் சிறை.. புதிய சட்ட மசோதா தயார்!

தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான தண்டனைகள் மற்றும் விரைவு விசாரணைகளை உள்ளடக்கிய புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
Published on
Summary

பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு 2026 திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது. தண்டனைகள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன; தனிநபர்களுக்கு 5–10 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம், சிண்டிகேட்களுக்கு குறைந்தது 7 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம், நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி அபராதம், 8 ஆண்டு தேர்வு தடை விதிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்படவிருக்கின்றன.

செய்தியாளர் - M . மீரா

பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், அவை தொடர்பான கடுமையான குற்றங்களை விரைவாக விசாரிக்கவும், கடுமையான தண்டனைகள், காலவரையறைக்குள் விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கைகள், மேலும் சிறப்புப் பணிக்குழு (Special Task Force - STF) அமைப்பது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026'-ஐ மத்திய அரசு திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது.

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதற்குச் சற்று முன்பு, இந்த சட்ட வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்டது.

student protests
student protests web

2024ஆம் ஆண்டின் சட்டத்தில் கொண்டுவரப்படும் இந்த புதிய திருத்தங்களின் மூலம் தண்டனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தேர்வு முறைகேடுகளை நடத்தும் சிண்டிகேட் அமைப்புகளுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

தேர்வை நடத்தும் நிறுவனங்கள் தவறிழைத்தால், அவற்றிற்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 8 ஆண்டுகள் வரை தேர்வுகள் நடத்தத் தடையும் விதிக்கப்படும்.

NEEt exam
NEEt exam web

இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கத் தேவைப்படும் இடங்களில் ஒரு சிறப்புப் பணிப்படையை (STF) அமைப்பதற்கான அதிகாரத்தை இம்முன்வரைவு மத்திய அரசுக்கு வழங்குகிறது. காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது முன்மொழியப்பட்ட சிறப்புப் பணிப்படை ஆகியவற்றின் விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை விசாரிப்பதற்காக, ஒவ்வொரு மாநில அரசும் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகமும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை நியமிக்க வேண்டும் என்று இம்முன்வரைவு வலியுறுத்துகிறது. இந்நீதிமன்றங்கள் அன்றாட அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட வேண்டும்

Exam Paper Leaks: Up to 10Years in Jail Under New Anti-Paper Leak Bill
மத்திய அரசில் மாற்றம்.. கல்வித் துறை ஒதுக்கீடு.. யாருக்கு தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com