\
Anti-Paper Leak Bill
Anti-Paper Leak Bill web

’வினாத்தாள் கசிவுக்கு இருமடங்கு தண்டனை..’ புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்! விவரம் என்ன?

வினாத்தாள் கசிவுக்கு இருமடங்கு தண்டனை, 10 ஆண்டு சிறை, கோடிகளில் அபராதம் விதிக்கும் புதிய மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு.
Published on
Summary

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள், விசாரணை இரண்டு மாதங்களில் முடிக்க கட்டாயம், தண்டனைகள் இருமடங்கு உயர்வு, 5-10 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

செய்தியாளர் - M மீரா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்து இன்று வரையில் எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 27) NEET வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது அதிகப்படியான வன்முறை நடத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கபட்டிருந்தது.

parliament
parliament web

பின்னர் அவை கூடிய போது, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதையும், விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கும் இந்த மசோதாவை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தபோது, ​​எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களின் மூலம் தண்டனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

Parliament
Parliament web

தேர்வு முறைகேடுகளை நடத்தும் சிண்டிகேட் அமைப்புகளுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

தேர்வை நடத்தும் நிறுவனங்கள் தவறிழைத்தால், அவற்றிற்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 8 ஆண்டுகள் வரை தேர்வுகள் நடத்தத் தடையும் விதிக்கப்படும்.

இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கத் தேவைப்படும் இடங்களில் ஒரு சிறப்புப் பணிப்படையை (STF) அமைப்பதற்கான அதிகாரத்தை இந்த மசோதா மத்திய அரசுக்கு வழங்குகிறது. காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது முன்மொழியப்பட்ட சிறப்புப் பணிப்படை ஆகியவற்றின் விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

மக்களவை
மக்களவைpt web

இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை விசாரிப்பதற்காக, ஒவ்வொரு மாநில அரசும் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகமும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை நியமிக்க வேண்டும் என்று இந்த மசோதா வலியுறுத்துகிறது. இந்நீதிமன்றங்கள் அன்றாட அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட வேண்டும்

Anti-Paper Leak Bill
நாட்டையே அதிரவைத்த 'கரப்பான் ஜனதா கட்சி'.. 70 நாட்களில் சாதித்த இளைஞர் பட்டாளம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com