விஜய் - விஜயகாந்த்
விஜய் - விஜயகாந்த் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

விஜய்யின் 'G O A T' திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த்? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன செம அப்டேட்!

ஜெனிட்டா ரோஸ்லின்

இளைய தளபதியாக தொடங்கி தளபதியாக வெள்ளித்திரையை கலக்கிய நடிகர் விஜய், தற்போது அரசியல் களத்திலும் தடம்பதித்து இருக்கிறார். இதனால் விரைவில் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கப்போவதாக தெரிவித்திருக்கிறார் விஜய். இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிக்கப்போவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அதில் முதல் படமாக இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் The GOAT - The Greatest Of All Time திரைப்படம் அமைந்திருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைபடத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், ‘விசில் போடு’ என்ற பாடல் போன்றவை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

விஜய்

செப்டம்பர் 5-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், அதிரடியாக தயாராகி இப்படம் குறித்து அடிக்கடி அப்டேட்ஸ் வந்துகொண்டிருக்கிறது. அப்படி தற்போது மற்றொரு சுவாரஸ்சிய தகவல் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் குஷியை கொடுத்துள்ளது. விஷயம் என்னவெனில்,

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் செயற்கை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி நடிகர் விஜயகாந்த்தை கொண்டுவரும் ஏற்பாடுகள் நடிந்து கொண்டிருக்கிறதாம்!

இத்தகவலை தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

இது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “இயக்குநர் வெங்கட்பிரபு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இதுகுறித்து அவர் பேசியிருந்தார். தேர்தல் என்பதால் நான் பிரசார வேலையில் இருந்தேன். பரப்புரைக்கு நடுவே நான் சென்னை சென்றிருந்தபோது,

என்னை நேரில் சந்தித்த வெங்கட்பிரபு, ‘தி கோட்’ திரைப்படத்தில் AI மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
பிரேமலதா விஜயகாந்த்

மேலும் நடிகர் விஜய்யும் இதுகுறித்து என்னை சந்திக்க விரும்புவதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். விஜயகாந்த் இல்லாத இந்த நேரத்தில், அவருடைய இடத்தில் இருந்துதான் நான் யோசிக்க வேண்டும்.

‘செந்தூரப் பாண்டி’ என்ற படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் கேப்டனுக்கு எப்போதும் மிகப்பெரிய பாசம் உண்டு.
பிரேமலதா விஜயகாந்த்

எத்தனையோ இயக்குநர்கள் இருந்தபோதும் எஸ்ஏசி அவர்கள் மட்டுமே 17 படங்கள் கேப்டனை வைத்து இயக்கினார் என்பதை அனைவரும் அறிவர்.

‘செந்தூரப் பாண்டி’ படம் - விஜயகாந்த், விஜய்

இப்படியான பின்னணி இருக்கும்பட்சத்தில், இந்தப் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மீண்டும் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்டனர். அதனால் ‘அவர் இடத்தில் இருந்து நான் யோசிக்கிறேன்; நல்ல முடிவாக தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறேன்.

விஜயகாந்த்

விஜயகாந்த் தற்போது இருந்திருந்தால் விஜய் - வெங்கட்பிரபுவின் கோரிக்கைக்கு கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். ‘விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன்’ என்று சொல்லி இருக்கிறேன்.

இவர்களில் விஜய் மட்டுமல்ல, வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். அதனால் ‘உனக்கும் விஜய்க்கும் என்னால் ‘நோ’ சொல்ல முடியாது’ என வெங்கட்பிரபுவிடம் கூறினேன்.

தளபதி 68

மேலும், நடிகர் விஜய்க்கு செயற்கை நுண்ணறிவு மூலமாக கேட்பனை படத்தில் காட்டவேண்டும் என்ற விருப்பம் உள்ளது என்று வெங்கடபிரபு என்னிடத்தில் கூறினார். ஆகவே, நானும் இதனை குறித்து நல்ல தகவலை தருவேன் என்று கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்களும், கேப்டன் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்!