2005 - விஜயகாந்த், 2025 - விஜய்... விஜயகாந்துக்கு பா.ம.க, விஜய்க்கு பா.ஜ.க? ஓர் அரசியல் ஒப்பீடு!

திரையுலகில் ரஜினி வழியைப் பின்பற்றிய விஜய், அரசியல் களத்தில் கையில் எடுத்திருப்பதோ விஜயகாந்த் பாணி. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், விஜய் முன்னிருக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பார்ப்போம்...
Vijayakanth - Vijay
Vijayakanth - VijayFile image

`தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை, பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை’ என விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் வேகம் காட்ட, விஜய் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியலுக்கு வருவாரா இல்லை 2026 சட்டமன்றத் தேர்தலில் கால் பதிப்பாரா என்கிற விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இவையெல்லாம் வழக்கமான செயல்பாடுகள்தான் என்றாலும் தலைவர்களைக் குறிவைத்துக் களமிறங்குவதும் `தொகுதி’ வாரியாக உதவிகள் செய்யப்படுவதும் விஜயின் அரசியல் வருகைக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

திரையுலகில் ரஜினி வழியைப் பின்பற்றிய விஜய், அரசியல் களத்தில் கையில் எடுத்திருப்பதோ விஜயகாந்த் பாணி. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், விஜய் முன்னிருக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பார்ப்போம்...
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

விஜயகாந்த் - விஜய் சினிமா பயணம்:

* தன் திரையுலகப் பயணத்தின் தொடக்க காலத்தில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தாலும் தனது இயல்பான பேச்சாலும் எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கினார் விஜயகாந்த். மற்ற எல்லாவற்றையும்விட சண்டைக் காட்சிகள் என்றால் விஜயகாந்த்தான் என தனி முத்திரையும் பதித்தார். அவர் திரையுலகுக்கு வந்து மிகக் குறுகிய காலத்திலேயே, அவரது நெருங்கிய நண்பர்களால் அவரது பெயரில் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன.

இலவச தையல் மெஷின், இலவச சைக்கிள், இலவச திருமணங்கள் என்பதைத்தாண்டி வருடந்தோறும் கல்வி உதவித் தொகைக்காக மட்டும் தனது வருமானத்தில் 25 லட்ச ரூபாயை ஒதுக்கினார் விஜயகாந்த். இதுபோன்ற விஷயங்கள்தான் விஜயகாந்தின் அரசியல் வருகைக்கான விதையாக இருந்தது.

* தன் அப்பாவின் மூலம் சினிமாவுக்கான என்ட்ரி கார்ட் எளிதாகக் கிடைத்தாலும் யாரும் சந்தித்திடாத பல்வேறு அவமானங்களையும் விமர்சனங்களையும் விஜயகாந்த்தைப்போலவே ஆரம்பகாலத்தில் நடிகர் விஜயும் சந்தித்தார். ஆனால், தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அசாத்திய நடனத்திறமையால் தனது ரசிகர்களைத் தாண்டி அனைவரின் உள்ளங்களிலும் இடம் பிடித்தார். இன்று தமிழ்த்திரையுலகில் விஜய் தொட்டிருக்கும் உயரம் யாரும் தொடாதது.

விஜயகாந்த் - விஜய்
விஜயகாந்த் - விஜய்

விஜயகாந்தைப்போல, விஜயின் ரசிகர் மன்றத்தினரும் ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் சத்தமில்லாமல் செய்து வந்தனர். இப்போது வெளிப்படையாகவே, பத்தாம், பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிது விஜய் மக்கள் இயக்கம். அதுவும், தொகுதி வாரியாக அறிவித்திருப்பது விஜயின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் - விஜய் அரசியல் வருகை:

திரையில் புரட்சிக் கலைஞராக உருவெடுத்த விஜயகாந்த், நிஜத்திலும் ஈழம், காவிரி உள்ளிட்ட தமிழக மக்கள் நலன் சார்ந்த, உணர்வு சார்ந்த போராட்டங்களில் எப்போதும் முன்னணியில் நின்றார். 2000-ம் ஆண்டில் தன் மன்றத்துக்கென தனிக்கொடி, 2001 உள்ளாட்சித் தேர்தலில் போட்டி, 2002-ல் இருந்து தனது படத்தில் அதிரடி அரசியல் வசனங்கள் என அரசியல் பாதையை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்தார். உள்ளாட்சித் தேர்தலில் தன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

vijayakanth - ramadoss
vijayakanth - ramadoss

அதேநேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தை மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றார் நடிகர் விஜயகாந்த். குறிப்பாக, பாமக செல்வாக்காக உள்ள வட மாவட்டங்களில் தன்னுடைய கவனத்தை அதிகமாகச் செலுத்தினார் விஜயகாந்த். திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடி காட்டத் தொடங்கி, 2005 செப்டம்பர் 14 மதுரையில் தன் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

விஜயகாந்த்தைப்போலவே, நடிகர் விஜயின் படங்களிலும் அரசியல் வசனங்கள் அனல் பறக்க ஆரம்பித்தன. திரையில் மட்டுமல்லாது, 2018-ல் காவிரி விவகாரம் தொடர்பாக திரையுலகினர் நடத்திய போராட்டத்துக்கு முதல் ஆளாக வந்து ஆதரவு தந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் ஒவ்வொரு வீடாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்,

விஜய் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
விஜய் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியும் செய்தார். 500, 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது,``இது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு முடிவுதான். ஆனால், இந்த முடிவால் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என துணிச்சலாக தன் கருத்தைப் பதிவு செய்தார்.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுபஶ்ரீயின் மரணத்துக்கு தன்னுடைய வருத்தைத் தெரிவித்ததோடு, ஆளும்கட்சிக்கு எதிராகக் கடும் விமர்சங்களையும் முன்வைத்தார். அதைத் தொடர்ந்து `மெர்சல்’ படத்திலும் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.

விஜய்க்கு எதிராக தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி உயர்த்தினர். உச்சபட்சமாக பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, விஜய்-யின் பெயர் ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். ஆனால், படம் வெளியான சில நாளில், ஹெ.ச்.ராஜா குறிப்பிட்ட அதே பெயரில் `மெர்சல்’ படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் விஜய்-யிடம் இருந்து அறிக்கை வெளிவந்தது.

விஜய் - மாணவி அனிதா இல்லம்
விஜய் - மாணவி அனிதா இல்லம்

தொடர்ந்து, 2021-ல் ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாகக் களமிறங்கி அதில் 51 பேர் வெற்றியும் பெற்றனர். அவர்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினார் விஜய். அதனைத் தொடர்ந்து, 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், “விஜய் மக்கள் இயக்கம் தனித்துக் களம்காணுகிறது. யாருடனும் கூட்டணி இல்லை” என வெளிப்படையாக அறிவித்து களம் கண்டது.

புதுக்கோட்டை, பொன்னேரி, தேனி என விஜய் மக்கள் இயக்கத்தினர் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றனர். நகராட்சிகளில் மட்டும் ஐந்துக்கும் அதிகமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றிபெற்றனர். பெரும்பாலான இடங்களில் நல்ல வாக்குகளையும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாளுக்கு அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தொகுதி வாரியாக மதிய உணவு, இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள் விஜய் மக்கள் மன்றத்தினர்.

தவிர, மாவட்ட, மாநில அளவில் அடிக்கடி நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என விஜயின் இந்த செயல்பாடுகள் நிச்சயமாக அவரின் அரசியல் வருகைக்கான முன்னோட்டம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இல்லாவிட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிச்சயமாக தனிக்கட்சி தொடங்குவார் என அடித்துச் சொல்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

விஜய் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?

`விஜய் அரசியலுக்கு வந்தால் தன் கொள்கை என்னெவென்பதை தெளிவாக முன்வைக்கவேண்டும், தன் மக்கள் மன்றத்தினரை முதலில் அரசியல் படுத்த வேண்டும் போன்ற பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தவிர, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 70 சதவிகிதம் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் வசம் இருக்கும்போது, விஜயால் பெரிதாக சாதிக்க முடியாது’ போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ரஜினி, தான் அரசியலுக்கு வராததற்கு வெளியில் ஒரு காரணத்தைச் சொன்னாலும் உண்மையான காரணம் இதுபோன்ற விஷயங்கள்தாம்,. எனில் விஜயால் சாதிக்க முடியுமா என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், ``தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் மன்றத்துக்கு கட்டமைப்புகள் இருக்கின்றன. அதன் வலிமையைப் பரிசோதிக்கும் வேலையைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார் விஜய். தலைவர்களின் சிலைக்கு மரியாதை என அரசியல் படுத்தும் வேலைகளும் தொடங்கிவிட்டன. இட ஒதுக்கீடு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என தமிழ்நாட்டுக்கென உள்ள பிரத்யேக விஷயங்கள் குறித்துப் புரியாதவர் இல்லை அவர்.

விஜய்
விஜய்

அதுமட்டுமல்ல, மாற்று இல்லாமல்தான் இரண்டு கட்சிகளில் ஒன்றைத் மக்கள் தேர்வு செய்கின்றனர். அந்த மாற்றாக நடிகர் விஜய் இருப்பார். ஏன், விஜயகாந்த் சாதிக்கவில்லையா?.., ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிக்கான இடத்தையாவது அவர் பிடிப்பார்’’ என அவருக்கு ஆதரவான குரல்களும் அரசியல் அரங்கில் ஒலிக்கின்றன.

விஜய் அரசியலுக்கு வருவாரா, வந்தால் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com