தமிழ் சினிமாவின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன். ஒரு மிமிக்ரி கலைஞராக பயணத்தை துவங்கி இன்று மிகப்பெரிய மார்க்கெட் உள்ள ஹீரோவாக உயர்ந்திருப்பது சாதாரணமான விஷயமே கிடையாது. இன்று வெளியாகியிருக்கும் `மதராஸி' படம் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது என்றால், அதற்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சியும், வெற்றிகளும் முக்கிய காரணம். அப்படி அவர் கடந்து வந்த பாதையும், உச்சத்தை தொட காரணமான உழைப்பையும் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கல்லூரியில் மிமிக்ரி, ஸ்டான்ட் அப் காமெடி என இருந்த சிவாவுக்கு கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்து முதன் முதலில் திரையில் தோன்றினார். அதன் பின் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பரிட்சயமானார். சிவாவுக்கு கிடைத்த ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு என்னவென்றால், எல்லோரும் சினிமாவில் தோன்றி எல்லோரின் வீட்டுக்கும் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த நேரம், சிவா மட்டும் எல்லோரின் வீட்டுக்கும் சென்ற பின்பு சினிமாவில் தோன்றினார். தொலைக்காட்சியில் ஒரே வேலை என தேங்கிவிடாமல், அதற்குள்ளாகவே கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினார். நடன நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றாலும் சரி, அந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டு நடனம் ஆட வேண்டும் என்றாலும் சரி சிவா தயங்கியதே இல்லை. அந்த துணிவு அவரது வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவிய ஒன்று.
சினிமா வாய்ப்புக்காகவும் முயன்ற சிவாவுக்கு, சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவது, `வேட்டை மன்னன்' படத்தில் நெல்சனிடம் உதவி இயக்குநர், `ஏகன்' படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், அட்லீ இயக்கிய `முகப்புத்தகம்' குறும்படம் என எந்த வகையில் எல்லாம் சினிமாவில் நுழைய முடியுமோ அவை எல்லாவற்றையும் செய்தார். டிவியில் பிரபலம், மக்களுக்கு மிகவும் பரிட்சயம் என்பதை மனதில் வைத்து சிவாவுக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்தது. ஒன்று `மெரினா', இன்னொன்று `3'. இரண்டு படங்களிலும் காமெடி கதாப்பாத்திரமே என்றாலும் அதிலும் தன்னை கவனிக்க வைத்தார்.
இதன் பின்பு ஹீரோவாக நடித்த `மனம் கொத்தி பறவை', `எதிர்நீச்சல்', `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `மான் கராத்தே' என தன்னை ஒரு ஹீரோவாக நிறுத்திக் கொள்ளவும் செய்தார், அதே நேரம் தன்னிடம் எதிர்பார்க்கும் காமெடிகளை கொடுத்தார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்த `காக்கி சட்டை' படத்தில் வழக்கமான காமெடி தாண்டி, ஒரு ஆக்ஷன் மீட்டரை கையில் எடுத்தார். அடுத்து அவர் செய்த படங்கள் எல்லாவற்றிலும், படத்தின் கான்செப்ட் என்ன இருந்தாலும், அதற்குள் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக முன் நிறுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் தெரியும்.
கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து கொண்டே, புதுமையாக என்ன செய்ய முடியும் என்பதிலும் கவனமாக இருந்தார் சிவா. ஒரு பக்கம் பக்கா கிராமத்து கதையாக `நம்ம வீட்டு பிள்ளை' நடித்தால் இன்னொரு பக்கம், புதுமையான காமெடி முயற்சியாக `டாக்டர்' படத்தில் நடிப்பார். `டான்' என ஜனரஞ்ச படத்தில் நடித்தால் `மாவீரன்' என பரிசோதனை முயற்சிக்கும் கை கொடுப்பார். நடிகராக மட்டும் இன்றி ஒரு தயாரிப்பாளராகவும் மாறி மற்றவர்கள் கனவுக்கு ஒளி ஏற்றினார்.
ஒரு என்டர்டெய்னர் என்ற அளவில் இருந்து இன்று ஒரு மாஸ் நடிகர் எனவும் தன்னை நிரூபித்திருக்கிறார். சிவாவின் வளர்ச்சி யாராலும் புறக்கணிக்க முடியாத ஒன்று என்பதற்கு இன்னொரு உதாரணம், தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் விஜய், சிவாவை ஒரு காட்சிக்கு அழைத்து "துப்பாக்கிய புடிங்க சிவா" எனக் கொடுத்ததை கூறலாம். அஜித்தின் ஏகன் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்த சிவா, அதே அஜித் வாயால் Welcome to the big league சிவா என சொன்னதையும் கூறலாம்.
இன்னும் எளிமையாக சொல்வதென்றால், மதராஸி படத்தையே எடுத்துக் கொள்ளலாம், முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்தார் சிவா, பின்னர் முருகதாஸ் தயாரித்த `மான் கராத்தே' படத்தின் ஹீரோ சிவா, சில வருடங்கள் கழித்து முருகதாஸ் உதவி இயக்குநர் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தது சிவா. மீண்டும் அதே முருகதாஸ் இன்னொரு உதவி இயக்குநர் ராஜ்குமார் இயக்கிய `அமரன்' படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்ததும் சிவா தான். முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் இந்த நீண்ட பயணம் இப்போது `மதராஸி' என்ற புள்ளியில் இணைந்திருக்கிறது. என்டர்டெய்னர் ஆக ஜெயித்த சிவா, இம்முறை மாஸ் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு. ஜெயிச்சுடுங்க சிவா!