Gandhi Kannadi
Gandhi Kannadi Bala, Balaji Sakthivel

பாலாவின் ஹீரோ என்ட்ரி எப்படி? | Gandhi Kannadi Review|Bala|Balaji Sakthivel

காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப்.
Published on
பாலாவின் ஹீரோ என்ட்ரி எப்படி?(1.5 / 5)

பணத்தை பிரதானமாக நினைக்கும் இளைஞனின் புரிதல் எப்படி மாறுகிறது என்பதே `காந்தி கண்ணாடி'

கதிர் (பாலா) ஈவென்ட் பிளானிங் நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர். வாடகைக்கு பொருட்கள் வாங்கி தொழில் நடத்துபவருக்கு, சொந்தமாக பொருட்களை வாங்கி ஈவென்ட் பிளானிங் நடத்த ஆசை. எனவே தன் காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) உடன் திருமணம் என்பதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உழைக்கிறார். இந்த ஜோடிக்கு நேரெதிராக காதல் ததும்ப வாழும் வயோதிக தம்பதி காந்தி (பாலாஜி சக்திவேல்) - கண்ணம்மா  (ஊர்வசி அர்ச்சனா). பிரம்மாண்ட திருமணம் செய்ய வேண்டும் என்ற தன் மனைவியின் கனவை நிறைவேற்ற முடியவில்லை என கலங்குகிறார் காந்தி. எனவே தங்களது 60வது திருமணத்தை விமரிசையாக நடத்த, கதிரிடம் வருகிறார். திருமணத்துக்கு பணத்தை ஏற்பாடு செய்து பல கனவுகளோடு காத்திருக்கிறார் காந்தி, இந்த திருமணத்தை நடத்திக் கொடுத்தால் வரும் பணம் மூலம் சொந்தமாக பொருட்களை வாங்கி சொந்த தொழில் செய்யலாம் என திட்டமிடுகிறார் கதிர். இந்த இருவருக்கும் இடியாய் வருகிறது ஒரு பிரச்சனை. அதன் பின் என்ன நடக்கிறது? என்பதே மீதிக்கதை.

Gandhi Kannadi
Gandhi Kannadi Bala, Namita Krishnamurthy

காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதலை மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப். அதற்குள் சாதி பிரச்சனை என்ற சமூக சிக்கலையும், பண மதிப்பிழப்பு என்ற அரசியல், சக மனிதருக்கு உதவ வேண்டும் என்ற மனிதம் போன்றவற்றை இணைத்து பேசி இருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் ப்ளஸ் எனப் பார்த்தால் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் காந்தி - கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளை சொல்லலாம். தொழில்நுட்ப ரீதியாக பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது. பல காட்சிகள் தரமாக இருப்பதற்கு அவரே காரணம். விவேக் - மெர்வின் பின்னணி இசை படத்தின் அழுத்தமான காட்சிகளுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. 

Gandhi Kannadi
Gandhi KannadiBala, Namita Krishnamurthy

இவற்றை தவிர பெரிய அளவில் பாராட்ட படத்தில் ஏதும் இல்லை, பெரும்பாலும் குறைகள்தான். ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் பாலாவுக்கு நடிப்பில் இன்னும் பல முன்னேற்றங்கள் தேவையாய் இருக்கிறது. ஜாலியான காட்சியோ, சோகமான காட்சியோ, எமோஷனலான காட்சியோ அவற்றை வெளிக்காட்ட மிகவும் சிரமப்படுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் தேவையே இல்லாமல் அவர் திணிக்கும் கவுண்டர்களும் பொறுமையை சோதிக்கிறது. "அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தால் உதவுவோம்" என மெட்டாவாக கேமராவை பார்த்து பாலா சொல்வது நல்ல மெசேஜ் என்றாலும், திடீரென நான்காம் சுவரை உடைப்பது ஏனோ தெரியவில்லை. இன்னும் சிறந்த நடிகராக முன்னேற வாழ்த்துக்கள் பாலா. நமீதா கிருஷ்ணமூர்த்தி டீசன்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் எப்போதும் இயல்பான நடிப்பை கொடுக்கும் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் அநியாயத்துக்கு செயற்கையாய் நடித்திருக்கிறார், அதற்கு போட்டியாக அர்ச்சனாவும் ஹெவி ஓவர் ஆக்டிங்.

Gandhi Kannadi
Gandhi KannadiBalaji Sakthivel, Urvashi Archana

முன்பு பாசிடிவில் சாதி பிரச்சனை, பண மதிப்பிழப்பு போன்றவை படத்தில் பேசப்பட்டிருந்தாலும், அது கதையோட்டத்தில் இயல்பாக இல்லாமல் துருத்திக் கொண்டு தெரிகிறது. புறா பறந்து செல்வதை வைத்து, ஒரு முக்கிய பாத்திரத்தின் இறப்பை குறியீடாக வைப்பது, சம்பந்தமே இல்லாமல் பாலா - நமிதா இடையில் நடக்கும் மழை உரையாடல், காந்தி கண்ணாடி என்ற தலைப்புக்கு நியாயம் சேர்க்கும்படி வைத்துள்ள இறுதிக்காட்சி என எல்லாம் ஓவர் டோஸ். இது ஒருபுறம் என்றால் நான்-லீனியராக செல்லும் திரைக்கதை இன்னும் கொடுமை. 

மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு, மிக சுமாராக எடுக்கப்பட்டிருக்கும் படமாகவே எஞ்சுகிறது இந்த `காந்தி கண்ணாடி'

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com